ஜெயலலிதா ஜெயராமினால், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மற்றும் பிணை மனுக்கள் இரண்டும், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ரத்த கலாவினால் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

அரச தரப்பு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருந்த பவானி சிங், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு பிணை வழங்கக் கூடாது என நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து மனுவொன்றைத் தாக்கல் செய்தார். இதை ஏற்ற நீதிபதி ரத்னகலா, ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு, இம்மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைத்தார். இதனால், எதிர்வரும் 7ஆம் திகதி வரை ஜெயலலிதா பிணையில் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று இந்த மனுக்கள் நீதிபதி ரத்ன கலா முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் முறைப்படியான வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகியிருக்கவில்லை. மாறாக சொத்துக் குவிப்பு வழக்கில் அரசின் சிறப்பு வழக்கறிஞராக வாதாடி வந்த பவானி சிங் ஆஜராகியிருந்தார். அவர் நீதிபதி ரத்ன கலாவிடம், என்னை இந்தப் புதிய வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமித்திருப்பதாக எந்த தகவலும் எனக்கு முறைப்படி வரவில்லை. எனவே இதில் நான் ஆஜராகி எனது எதிர்ப்புகளைப் பதிவு செய்ய முடியாது என்று கூறினார்.

இதனையடுத்தே, அரச தரப்பு வழங்கறிஞரை அரசாங்கம் நியமிக்கட்டும் என்று கூறி, எதிர்வரும் 6ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா தரப்பு உடனடியாக உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தேசாயை அணுகியது. அவரிடம், இந்த வழக்கைப் பொறுத்தவரை அரசு வழக்கறிஞர் இல்லாமலேயே கூட விசாரணை நடத்தலாம் என்பதை சட்ட விவரத்துடன் எடுத்துக் கூறி உடனடியாக இதை விசாரிக்க வகை செய்யுமாறு கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து தலைமை நீதிபதி டி.எச்.வகேலாவைத் தொடர்பு கொண்டார் பதிவாளர் ஜெனரல். அவரது அறிவுறுத்தலின் பேரில் இந்த மனுக்கள் புதன்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் இல்லாமலேயே விசாரணை நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு பவானி சிங்கின் நியமன உத்தரவு அவசரம் அவசரமாக அவரிடம் தரப்பட்டது. இதையடுத்து இன்று விசாரணை நடந்தது. ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி ஆஜரானார். பிணை மனு விசாரணையைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகளும், அ.தி.மு.க தொண்டர்களும் உயர்நீதிமன்ற வளாகத்தில் குவிந்தனர்.

விசாரணை தொடங்கியதுமே பவானி சிங் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் பிணை அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதை ஏற்ற நீதிபதி ரத்ன கலா, விசாரணையை ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

ஒக்டோபர் 6ஆம் திகதி பக்ரீத் விடுமுறையாகும். இதையும் மனதில் கொண்டும், தசரா விடுமுறைக்குப் பின்னர் ரெகுலரான பெஞ்ச் பிணை மனுக்களை விசாரிக்கும் என நீதிபதி ரத்ன கலா உத்தரவிட்டார். ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஜெயில்தான் இதன் காரணமாக ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஜெயலலிதா சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று ஜெயலலிதா உள்ளிட்டோரின் மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது வெறும் 2 நிமிடங்களிலேயே அது முடிந்து போனது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 5 நாட்களாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ஜெயலலிதா சார்பில் மீண்டும் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் பட்டேலிடம் அதிமுக வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று மாலையே இந்த மனு மீது விசாரனை நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளனர். இந்த அவசர மனு ஏற்கப்படுமா என பிற்பகலில் தெரியவரும்.