சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு மாணவர் பேரவையின் ஏற்பாட்டில் இலங்கை புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்றது.

இப்போராட்டத்தில் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு இலங்கைப் பொருட்கள் மற்றும் சேவைகளை புறக்கணிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர்களை கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், தின்பண்டங்கள், விளையாட்டு, இலங்கை சேவைகள் என அனைத்தையும் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர் தியாகு,

இலங்கையை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று விரிவாக பேசினார். உலக நாடுகள் தென்னாபிரிக்காவிற்கு எதிராக, இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக நடத்திய புறக்கணிப்பு போராட்டத்தை பற்றியும், காந்தியடிகள் பிரித்தானியா பொருட்களுக்கு எதிராக நடத்திய புறக்கணிப்பு போராட்டங்கள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

இலங்கைப் பொருட்களை புறக்கணிப்பதின் மூலம் இலங்கை அரசுக்கு மக்கள் அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் தமிழீழ மக்களுக்கு இதன் மூலம் நல்லதொரு தீர்வை ஏற்படுத்த இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று கூறினார்.

இதுபோன்ற போராட்டங்கள் மேலும் விரிவடைய வேண்டும் என்றும், இனப்படுகொலை செய்த இலங்கை அரசை உலக நாடுகள் தனிமைப்படுத்த இப்படியான போராட்டங்கள் எல்லா நாடுகளிலும் தமிழர்களால் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இறுதியில் இலங்கை பொருட்கள், சேவைகள், விளையாட்டு ஆகிய அனைத்தையும் தமிழக மக்கள் புறக்கணிக்க பரப்புரை மேற்கொள்ளவதாக மாணவர்கள் உறுதி எடுத்துள்ளனர்.