வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை சட்டரீதியாக சிக்க வைக்கும் சதி முயற்சியின் பின்னணியில் அதே கட்சியை சார்ந்த சுமந்திரன் மற்றும் சீ.வி.கே.சிவஞானம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடமாகாணசபையினை ஒட்டிச்செல்லவிடாது சிவாஜிலிங்கம் இனஅழிப்பு பிரேரணைகளை முன்வைத்து போராடிவருகின்றார். இது தொடர்பில் அண்மைய தமிழரசுக்கட்சியின் திருகோணமலை கூட்டத்தில் பலராலும் சிவாஜிலிங்கம் திட்டி தீர்க்கப்பட்டார். இதையடுத்தே அவரையும் தொடர்புடைய தரப்புக்களையும் வாய் மூடவைக்க இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ்மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அண்மையில் 33 மாகாண சபை உறுப்பினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.

இந்த கடிதமானது சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று நுகோகொட பகுதியைச் சேர்ந்த ஒருவரால் சிறிலங்காவின் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்தமனுவில் அவர்களை உடனடியாக கைதுசெய்து, சட்டத்தின் முன்னிறுத்த காவற்துறை மா அதிபரும், சட்ட மா அதிபரும் வலியுறுத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளமை தெரிந்ததே.