ஈழத் தமிழர்களுக்காகப் போராடுவது வெறித்தனமா? – வைகோ விவாதம் October 4, 2014 News புலிகள் அமைப்பை அழித்துவிட்டோம் என்று இலங்கை அரசு அறிவிக்க…. புலிகள் அமைப்புக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்து அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது இந்திய அரசு! 1992-ல் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீடிக்கப்பட்டு வந்த நிலையில், அதை ஐந்து ஆண்டுகளாக நீடித்து அவசரச் சட்டம் இயற்றியது முந்தைய காங்கிரஸ் அரசு. இந்தத் தடை 2014 மே 14-ல் இருந்து நடைமுறைக்கு வந்தது. அந்தத் தடையை நீக்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாயத்தில் தன்னையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ளுமாறு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மனுத்தாக்கல் செய்தார். ஆனால் நீதிபதி, ‘வைகோவை ஒரு தரப்பாக இந்த விசாரணையில் சேர்க்க முடியாது, விசாரணையின்போது பங்குபெற்று வாதங்களை முன்வைக்கலாம்’ எனச் சொல்லியிருந்தார். இந்த வழக்கு கடந்த 26, 27-ம் தேதி சென்னை இமேஜ் ஆடிட்டோரியத்தில் நீதிபதி மிட்டல் தலைமையில் விசாரணைக்கு வந்தது. முதல்நாள் விசாரணையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்புச் செயலாளர் நரேந்திரகுமார் ஆஜராகி, ”இந்தியாவுக்கு விடுதலைப் புலிகள் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். 2012-ல் மூன்று விடுதலைப் புலிகள் தமிழகத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த இயக்கத்துக்கு தமிழ் அமைப்புகளின் வெறித்தனமான ஆதரவால் இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. ஆயுதம், வெடிகுண்டு பயிற்சிகள் எடுத்து உள்ளார்கள். இவர்களால் இந்தியாவுக்கே ஆபத்து. இவர்கள் மீதான தடையை நீடிக்க வேண்டும்” என்றார். வாதத்தின் இறுதியில் வைகோ, ”மூன்று விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறதா? குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதா? பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழீழ மக்களுக்காகப் போராடும் எங்களை ‘வெறித்தனமாக’ என்று சொல்வது கொச்சைப்படுத்துகிறது, காயப்படுத்துகிறது” என வாதங்களை முன்வைத்தார். 27-ம் தேதி இரண்டாவது நாள் விசாரணையில், தமிழ்நாடு அரசின் ‘கியூ பிராஞ்ச்’ காவல் துறை கண்காணிப்பாளர் புவனேஸ்வரி ஆஜராகி, ”விடுதலைப் புலிகளின் சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான தனிநாடு கோரிக்கை, தமிழ்நாட்டையும் சேர்த்து கேரளா, ஆந்திராவின் சில பகுதிகளையும் இணைத்து உருவாக்கும் திட்டம். இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஈழத் தனிநாடு கோரிக்கை மிகவும் ஆபத்தானது. எனவே, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்க வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில அமைப்புகள் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன் ஆயுதப் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் ஆபத்தானவர்கள்” என்றார். வாதத்தின் இறுதியில் வைகோ, ”தமிழ் ஈழம் என்பது, இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மட்டுமே உள்ளடக்கியது. இதுதான் உண்மை. இந்தியாவின் பகுதியையும் சேர்க்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கற்பனை செய்ததுகூடக் கிடையாது. தமிழ் ஈழத்துக்காக ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று ஓர் ஆண்டுக்கு முன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு இன்றைய ஆளும் கட்சி ஒருமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றியது. தமிழ்நாட்டின் ஒரு பகுதியையும் தமிழ் ஈழத்தில் சேர்க்கப் புலிகள் திட்டமிட்டு இருந்தால், இப்படி ஒரு தீர்மானத்தைத் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றுமா? சாட்சி இதுபற்றி அறிவாரா? ‘தமிழகத்தின் ஒரு பகுதியைச் சேர்க்க வேண்டும்’ என்று விடுதலைப் புலிகள் திட்டமிட்டதற்கு வேறு என்ன ஆதாரத்தைத் தாக்கல்செய்து இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். உடனே புவனேஸ்வரி, ”விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற அமைப்பின் வரைவுச் சட்டத்தைத் தாக்கல் செய்திருக்கிறோம்” என்றார். அதற்கு வைகோ, ‘விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்பது 1990-ம் ஆண்டு இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஓர் அமைப்பு. அது பின்னர் கலைக்கப்பட்டுவிட்டது சாட்சிக்குத் தெரியுமா?’ என்று மீண்டும் கேட்க… புவனேஸ்வரி, ”அந்த அமைப்பு கலைக்கப்படவில்லை. இன்னமும் இருக்கிறது; தமிழ்நாட்டில் தமிழர் பாசறை, தமிழ்நாடு விடுதலை இயக்கம் என்ற பல அமைப்புகள், தமிழ்நாட்டையும் ஈழத்தையும் சேர்த்து அகன்ற தமிழ்நாடு கேட்கிறார்கள்” என்றார். இதற்கு வைகோ, ”ஒவ்வொரு அமைப்பும் தங்களுக்கு என்று ஒரு கொள்கை வைத்திருக்கலாம். அதற்கும் விடுதலைப் புலிகளுக்கும் என்ன தொடர்பு? இந்த அமைப்புகளுடைய கொள்கைக்கு விடுதலைப் புலிகள் எப்படிப் பொறுப்பாவார்கள்? விடுதலைப் புலிகள் என்று சிலரை கைது செய்ததாக நீங்கள் கூறுகிறீர்களே, நீதிபதியின் முன்பு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்களா? அல்லது போலீஸாரே வாக்குமூலத்தை எழுதிக்கொண்டார்களா?” என்று கேட்க, வாக்குவாதம் சூடுபிடித்தது. நீதிபதி மிட்டல், ”இந்தக் கேள்விகளை நீங்கள் விசாரணை அதிகாரியிடம் கேட்கலாம்” என்று முற்றுப்புள்ளி வைத்ததுடன், ‘வழக்கு விசாரணை அடுத்த மாதம் 26, 27 தேதிகளில் குன்னூரில் நடைபெறும்’ என்று அறிவித்து ஒத்தி வைத்தார். அப்போது இறுதி முடிவு அறிவிக்கப்படுமா?