படுவான்கரை கிராமத்தில் இராணுவத்தினரால் அடிமைப்படுத்தப்பட்டுள்ள 97 தமிழ்க் குடும்பங்கள்!! October 4, 2014 News மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தின் தமிழ் குடும்பங்களை சிறிலங்கா இராணுவம் அடிமைப்படுத்தி வைத்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. படுவான்கரை – பட்டிப்பலை – கச்சற்கொடி கிராமத்தில் உள்ள சுமார் 97 தமிழ் குடும்பங்கள் இவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பில் இயங்கும் சிவில் அமைப்புகள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பில் சிங்கள குடியேற்றங்கள் மௌனமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், கச்சற்கொடி கிராமத்திலும் சிங்கள மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழ் மக்களின் காணிகளில் அத்துமீறி இராணுவத்தின் உதவியுடன் விவசாயம் செய்து வருகின்ற அதேநேரம், மீன்பிடியிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் தமிழ் குடும்பங்களுக்கு விவசாயத்தில் ஈடுபடவோ, மீன்பிடியில் ஈடுபடுவோ இராணுவத்தினர் அனுமதி வழங்குவதில்லை. அவ்வாறு மீன்பிடியில் ஈடுபட அனுமதித்தாலும், அவர்கள் பிடிக்கும் மீன்களை இராணுவத்தின் பின்னணி கொண்ட விற்பனையாளர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இராணுவத்திடம் தங்கி வாழ வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் சர்வதேச தமிழ் அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும் என்று சிவில் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.