ஆசிரியர் சமூகத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணரும் முகமாக கவன ஈர்ப்புப் போராட்டம் October 6, 2014 News இலங்கை ஆசிரியர் சங்கம் நடாத்தும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு. எந்த ஒரு தேசத்தினதும் எதிர்காலப் பாதுகாப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் என்பது அடிப்படையானதாகும். மாணவர்கள் கல்வி கற்கும் காலப்பகுதியானது அவர்களது அறிவாற்றலை மட்டுமல்ல அவர்களது பண்பாட்டினையும் வளப்படுத்துகின்றது. மாணவர்களின் ஆளுமையை வளப்படுத்துபவர்கள் என்ற வகையில் ஆசிரியர்கள் தற்கால சந்ததிக்கும் எதிர்கால சந்ததிக்கும் மிக முக்கியமான பாலமாக விளங்குகின்றனர். அப்படிப்பட்ட ஆசிரியர் சமூகமானது கடந்த பல மாதங்களாக் தங்களுக்கு உள்ள குறைபாடுகள் மற்றும் அவர்களது நலன்கள் தொடர்பிலான பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் எழுப்பி வருகின்ற போதும் இதுவரை ஆக்கபூர்வமான எத்தகைய பலாபலனும் அவர்களிற்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஆசிரியர் சமூகத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணரும் முகமாக உலக ஆசிரியர் தினமான 6.10.2014 திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பஸ்தரிப்பு நிலையத்தின் முன்பாக பி.ப 2.00 மணியளவில் கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்றினை இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த கவன ஈர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஆகிய நாங்கள் எமது பூரண ஆதரவை வழங்குவதோடு, அனைவரையும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டு இப்போராட்டம் வெற்றிபெற உதவுமாறு கோரிக்கை விடுகின்றோம். நன்றி கஜேந்திரகுமார் செ.கஜேந்திரன் தலைவர் பொதுச் செயலாளர்