வவுனியா பிரஜைகள் குழுத் தலைவர் கிருஸ்ணபிள்ளை தேவராசா கொலை முயற்சி தாக்குதல் ஒன்றிலிருந்து உயிர் தப்பியுள்ளார். நெடுங்கேணியிலுள்ள தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை இன்றிரவு மோட்டார் சைக்கிளில் சென்றவர்களால் அவர் தாக்கப்பட்டிருந்தார்.

எதிர்வரும் 10ம்; திகதி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டிருந்ததற்காக அவர் இருமீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஆர்ப்பாட்டமா செய்யப் போகின்றாய், அதற்கிடையில் உன்னைக் கொல்லுவோம் என்று கொச்சை தமிழினில் மிரட்டி அச்சுறுத்தியே மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் அவரைத் தாக்கியிருக்கின்றார்கள். காயமடைந்த அவர், நெடுங்கேணியில் அனுமதிக்கப்பட்டு இப்போது, வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி வவுனியா பிரஜைகள் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளனர். இந்தப் பின்னணியிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது.

அவரது கை மற்றும் கால்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.பெற்றோலினை ஊற்றி அவரை கொலை செய்ய முற்பட்டிருந்த வேளை வீதியினால் வாகனமொன்று பயணித்ததையடுத்து தாக்குதலாளிகள் தப்பி சென்றுள்ளனர்.