வடமராட்சியின் வல்லிபுர் கோவில் ஆலய தர்மகர்த்தா ஒருவர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி தாக்குதலிலிருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

ஈபிடிபி சார்பு முக்கியஸ்தர் ஒருவரால் ஆலய கட்டிட நிர்மாணப்பணிகளில் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 31 கோடி ஊழல் மோசடி தொடர்பில் நியாயம் கேட்டுப்போராடி வந்திருந்த 67 வயதுடைய சதானந்தன் கேசவானந்தன் என்பவரே கொலை முயற்சியிலிருந்து காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இன்று நடைபெற்ற ஆலய தர்மகர்தா சபை கூட்டத்தில் பருத்தித்துறை பிரதேசசபையின் உறுப்பினரும் ஈபிடிபி ஆலய தர்மகர்த்தாக்களுள் ஒருவராக திணிக்கப்பட்டு உள்ளவருமான குறித்த நபரிடம் ஆலய புனரமைப்பு தொடர்பாக நடந்த மோசடிகள் தொடர்பாக முரண்பட்ட நிலையில் பருத்தித்துறை மருதங்கேணி வீதியினூடாக கற்கோவளத்திலுள்ள தனது வீடு நோக்கி சென்ற வேளையிலேயே அவர் தாக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் தமது முகங்களை மறைத்தவாறு சென்ற தாக்குதலாளிகள் இவர் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். தம்மால் எடுத்துவரப்பட்ட வாள்களால் இவரை வெட்ட முற்பட்ட வேளை வீதியால் வந்திருந்த அரச பேருந்து பயணிகளால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். தன் மீதான கொலை முயற்சி பற்றி அவர் பருத்தித்துறை காவல் நிலையத்தினில் முறைப்பாடொன்றை செய்துமுள்ளார்.

ஆலய தர்மகர்தா சபையில் இருக்கும் குறித்த ஈபிடிபி பிரமுகரிடமே ஆலய நிர்மாண வேலைகள் முறையற்ற விதத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஆலய நிர்வாக சபையிலுள்ள ஏனைய தர்மகர்த்தாக்கள் முரண்பட்டு வந்துள்ளனர். இப்பிரச்சினை உச்சம் பெற்றுள்ள நிலையில் ஆலய வருடாந்த உற்சவம் முடிவுற்றதும் ஒன்று கூடி ஆராய்ந்த கூட்டத்தில் முரண்பாடு உச்சம் பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே தன் மீதான கொலை முயற்சி இடம்பெற்றதாக தனது முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக பேரவை முதல் போக்குவரத்து சபை, வைத்தியசாலை அபிவிருத்தி சபை வரை தமது ஆதரவாளர்களையும் முக்கியஸ்தர்களையும் ஈபிடிபி திணித்து வருவது தெரிந்ததே. தற்போது ஆலய தர்மகர்த்தா சபைகளையும் விட்டுவைக்காது தமது சாதனைகளை தொடர்வதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.