அரசியல்வாதிகளுக்குச் சார்பாக அலுவலர்கள் நடந்து கொள்வதால் அது மக்களின், பிரதேசத்தின் வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தனது உரையில்,

கைதடி, கொடிகாமம் இரு இடங்களும் நான் இங்கு 1980 தொடக்கம் 1981 முடிவு வரையில் சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றிய போது என் மன்றின் நியாயாதிக்க எல்லைகளுக்குள் அடங்கிய இடங்கள்.

இன்று உங்கள் முன்னிலையில் அரசியல் ரீதியான ஒரு பதவியில் இருந்து கொண்டு கலந்து கொள்வேன் என்று அன்று கனவிலும் நினைத்ததில்லை. அன்றிருந்த நிலைக்கும் இன்றிருக்கும் நிலைக்கும் இடையில் நடைபெற்று முடிந்த நிகழ்வுகள் பல கனவுகள் போல் ஒவ்வொருவரின் மனதிலும் உறைந்திருக்கும்.

நான் தலைமை தாங்கிய அன்றைய நீதிமன்றக் கட்டிடம் எரிந்து சாம்பராகி பல வருடங்கள். அக்கட்டடம் அழிவுற்ற நிலையில் இருந்தது. இன்று புதியதொரு கட்டடம் அங்கு உருவாகியுள்ளது.

ஆனால் மாணவ சமுதாயம் அண்மைய காலத்தைத் தான் அறிந்திருப்பார்கள். எனினும் பழையன கழிதலும் புதியன வருதலும் வாழ்க்கையில் நாம் காணும் மாற்றங்கள்.

எங்கள் வாழ்க்கையில் சரித்திரம் என்பது ஒரு பாரம்பரியத்தை, ஒரு தொடர்ச்சியை, தலைமுறைகளுக்கிடையிலான ஒரு பிணைப்பை, பின்னணியை ஏற்படுத்துகின்றது.

எமக்கு முன்னர் நடந்தவை அனைத்தும் எமது இன்றைய வாழ்க்கைக்கு ஏதோ வழியில் ஒரு களம் அமைத்துக் கொடுத்திருக்கின்றன. எமக்குமுன் வந்து சென்ற அனைவரும் எமது இன்றைய வாழ்க்கைக்கு ஏதோ ஒரு வழியில் அனுபவங்களை அள்ளித் தந்து விட்டுச் சென்றவர்களாக அமைகின்றார்கள். இவை அனைத்துஞ் சேர்ந்துதான் இன்று எமக்கு ஒரு பாரம்பரியத்தை விளக்கி நிற்கின்றன இவ்வாறு வந்து சென்ற நிகழ்வுகளும், நிஜ மனிதர்களும்.

உங்கள் பாடசாலையை எடுத்துக் கொள்வோம். உங்கள் கல்லூரியின் ஆரம்பம் திருநாவுக்கரசு நாயனார் குருபூசை மடாலயமாகும். இது 1925ம் ஆண்டில் நிறுவப்பட்ட போது யாத்திரிகர்கள் தங்குமிடமாகவும் இருந்தது. பாடசாலை எதுவும் இருக்கவில்லை.

கால ஓட்டத்தில் அப்பரின் அன்போ என்னவோ 1928ம் ஆண்டில் இந்து மகாசபையின் அனுசரணையுடன் ஆரம்பப் பாடசாலை ஒன்று மடாலயத்தில் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. திருநாவுக்கரசு வித்தியாலயத்தின் தொடக்கம் அதுதான்.

அதன்பின் வித்தியாலயத்தை அரசாங்கம் 1960களில் கையேற்றபோது திருநாவுக்கரசு வித்தியாலயம் அரச பாடசாலை ஆகிற்று. இதனால் மடாலயம் அமைந்திருந்த காணியையுங் கட்டிடத்தையும் மடாலய சபையினர் பாடசாலைக்கு வழங்கிவிட்டு, பாடசாலைக்கு முன்னுள்ள காணியில் (றோட்டுக்குக் கிழக்காக) குருபூசை மடாலயம் ஒன்றை அவர்கள் அமைத்து குருபூசை நடாத்தி வந்தனர்.

பாடசாலை வளர வளர பாடசாலைக்கு வேண்டிய காணியையும் மடாலயத்தினர் விஸ்தரித்துக் கொடுத்தனர். திரு.பொன் கந்தையனார், திரு.க.பேரம்பலம் போன்ற அதிபர்களின் விடாமுயற்சி பாடசாலையின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தியது.

நான் நீதிபதியாக இங்கு இருந்த காலத்தின் போது அதாவது 1982ம் ஆண்டுவரை திருநாவுக்கரசு வித்தியாலயம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர வகுப்புக்கள் கொண்ட பாடசாலையாகத் தான் தென்மராட்சி கிழக்கில் பிரபல்ய பாடசாலையாக விளங்கி வந்தது.

1980ம் ஆண்டிலிருந்து கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புக்களை ஆரம்பித்து நடாத்த கல்வித்திணைக்களம் அனுமதியளித்தது.

இக்காலகட்டத்தில் அதாவது 1982ம் ஆண்டில் என்முன் பல வழக்குகளில் தெரிபட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.வி.ஏ.நவரத்தினம் அவர்களின் முயற்சியினால் கொடிகாமம் திருநாவுக்கரசு வித்தியாலயம், கொடிகாமம் அரசினர் வித்தியாலயம் இரண்டையும் இணைத்து கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயம் என்று அது தரம் உயர்த்தப்பட்டது.

இரு பாடசாலைகளும் கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயம் என்ற பெயருடன் ஒரே அதிபரின் கீழ் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கத் தொடங்கின.

பெற்றாரின் வேண்டுதலுக்கமைவாக கச்சாய் வீதியிலுள்ள கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலயத்தில் 1-13 வரையான வகுப்புக்களும் கொடிகாமம் அரசினர் வித்தியாலயத்தில் 1-5 வகுப்புக்களும் கொண்ட ஆரம்ப வகுப்புக்களும் பாடசாலைகளாக இயங்கி வந்தன.

இப்பாடசாலையானது மகாவித்தியாலய அந்தஸ்தைப் பெற்றவுடன் இடவசதி கட்டிட வசதிகள் பற்றாக் குறை இருந்தமையால் மடாலய சபையினர் பாடசாலையுடன் இணைந்த காணிகள், மடாலயக் கட்டிடங்கள் ஆகியவற்றை பாடசாலைக்கு வழங்கி விட்டு வெளியேறினர். மடாலயக் கட்டிடங்கள் இன்றும் ஞாபகச் சின்னங்களாகக் காணப்படுவதாக அறிகின்றேன்.

சில காலம் செல்லச் சில பெற்றோர்கள் பாடசாலைகள் இரண்டும் ஒன்றாக இயங்குவதை விரும்பாத நிலையில் 1987ம் ஆண்டு கல்வித் திணைக்களம் இரு பாடசாலைகளையும் இரண்டாகப் பிரித்து பழைய நிலைக்கு இயங்கவிட்டன.

பிரிக்கப்பட்ட பின் கச்சாய் வீதியிலுள்ள திருநாவுக்கரசு மகாவித்தியாலயம் தொடர்ந்தும் அதே பெயருடனும் கண்டி வீதியிலுள்ள பாடசாலை கொடிகாமம் அரசினர் வித்தியாலயம் என்ற பெயருடனும் இயங்கத் தொடங்கின.

கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயம் தென்மராட்சியில் பிரபல பாடசாலைகளில் ஒன்றாக கல்வி வளர்ச்சியிலும் இணைப் பாடவிதானச் செயற்பாடுகளிலும் சிறப்புற்று விளங்கத் தொடங்கியது.

2011ம் ஆண்டு ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கீழ் திருநாவுக்கரசு மகாவித்தியாலயம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது. தரம் 1-5 வரையிலான ஆரம்பப்பிரிவுகள் தனிய ஒரு பாடசாலையாக திருநாவுக்கரசு மத்திய கல்லூரி நிர்வாகத்திலிருந்து பிரிக்கப்பட்டு கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்பப் பாடசாலை என்னும் பெயருடன் இயங்கி வருகின்றது.

தரம் 6 தொடக்கம் 13 வரையான வகுப்புக்களைக் கொண்டே உங்கள் கல்லூரி இயங்கி வருவதாக அறிகின்றேன். தற்போது இரு பாடசாலைகளும் சிறப்புற இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகள், கல்லூரிகள் போதிய கட்டிட வசதிகளையும் விளையாட்டுத் திடல் வசதிகளையும் நவீன விஞ்ஞான கலைக்கூட நவீன உபகரண வசதிகளையும் கொண்டிருத்தல் அவசியம்.

இது சம்பந்தமான அபிவிருத்திகள் அண்மைக் காலங்களில் நடந்து வருவது கண்கூடு. போரினால் பாதிக்கப்பட்ட இடங்கள் என்ற ரீதியில் பல தரப்பட்ட நிறுவனங்களும் வெளிநாடுகளும் ஐக்கிய நாடுகள் சம்பந்தமான நிறுவனங்களும் எமக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன.

அவற்றை அரசாங்கம் ஏற்று எமக்கு வழங்க வேண்டிய ஒரு கடப்பாட்டில் உள்ளது. இக் கைங்கரியத்தில் அரசியல் நுழைவதால் பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

யாரோ தரும் பணத்தை யார் யாரோ பாதிக்கப்பட்ட அல்லது பயன் பெற இருப்போர் சார்பில் செலவழிக்க இடையிலுள்ள நாங்கள் அரசியலைப் புகுத்துவதால் எவர் எவரையோ அண்டி வேண்ட வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

அரசியலானது கொள்கைகள் சம்பந்தமாக இருக்கலாம். நடைமுறைப்படுத்தல் சம்பந்தப்பட்ட விடயங்கள் அலுவலர்களிடமே வழங்கப்பட வேண்டும்.

அலுவலர்கள் தமது சொந்த நன்மைகளுக்காக அரசியல்வாதிகளுக்குச் சார்பாக நடந்து கொள்வது எமது மக்களின், எமது பிரதேசத்தின் நல்வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கும்.

இன்று எமது வடமாகாணத்தில் சமாந்தர மட்டத்தில் நிர்வாகமானது பிரிந்து நடைபெறுவது வருத்தத்தைத் தருகிறது. அப்படியிருந்தும் கூடுமான வரை அரசாங்கம் நடத்தும் நிர்வாகத்திற்கும் எமது நிர்வாகத்திற்கும் இடையில் போட்டி பொறாமைகள் எழாது. மக்கள் நன்மையே முதன்மையானது என்ற கருத்தை வலியுறுத்தி நாம் நடைமுறைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம்.

இதுவரை மற்றைய மாகாணங்களில் முரண்பாடுகள் முன்வராதிருந்ததற்குக் காரணம் மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் பெரும்பான்மை மாகாணங்களில் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தமையே. எமது மாகாணத்தில்தான் நாம் முற்றிலும் வேறுபட்டு நிற்கின்றோம்.

மொழி, மதம், இனம், கட்சி, இடம் என பல வேறுபாடுகள் மத்திய அரசுடன் உண்டு. அதன் எதிரொலியே மாகாண மத்திய நிர்வாக சமாந்திரச் செயற்பாடுகள். விரைவில் இவை யாவும் தீர்க்கப்பட்டு ஒருமித்து நாங்கள் முன்னேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என மேலும் தெரிவித்துள்ளார்.