லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர் வீரவணக்க நாள் இன்றாகும்

யாழ். மாவட்டம் கோண்டாவில் பகுதியில் 21.10.1987 அன்று இந்தியப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், முன்னாள் திருகோணமலை மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் அவர்களின் 27ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

1983ம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் சந்தோசம் மாஸ்டரும் ஒருவர்.

அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் ‘களத்தில்’ என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.

1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் நாள் இரவு 11. 00 மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறீலங்காப் படையினர்மீது ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட வாகனமொன்றில், தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான், விக்ரர், பொன்னம்மான், சந்தோசம் மாஸ்ரர், புலேந்தியம்மான், கணேஸ், ரஞ்சன், லிங்கம், பசீர்காக்கா, நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக சுமார் ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார்.