தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் தன்னிச்சையாக செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.

சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தமிழன அழிப்பு தொடர்பில் வடமாகாண சபையில் பிரேரணைகளை நிறைவேற்றவோ, முன்வைக்கவோ கூடாது என்று விசேட சுற்றறிக்கை ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை, ஏனைய உறுப்பினர்களுக்கு
அனுப்பி வைத்திருக்கிறது.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் வடமாகாண சபையில் முன்வைக்கப்பட்ட இனவழிப்புக்கு எதிரான விசாரணையை கோரும் பிரேரணை குறித்தே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்த சட்ட ஆலோசனை பெறப்பட்டதாகவும், இவ்வாறு வடமாகாண சபை கோருவதால் சர்வதேச விசாரணைகளின் நம்பகத்தன்மை குறைந்துவிடும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தெரிவித்திருக்கிறது.

எனினும் இனவழிப்பு தொடர்பான விடயத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் வடமாகாண சபையின் உரிமையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையும், அதனோடு இணைந்த சிலரும் கட்டுப்படுத்தி வருவதாக குறித்த ஊடகம் குற்றம் சுமத்தி இருக்கிறது.