இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை மறைக்க அரசாங்கம் கோடிக்கணக்கில் பணத்தை இறைத்துக் கொண்டிருப்பதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக லண்டனிலிருந்து வெளியாகும் த இன்டிபெண்டன்ட் ஊடகம் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணைக்குழுவின் அறிக்கை மிக விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசாங்கம் தனது போர்க்குற்றங்களை மறைத்துக் கொள்ளவும், தனது நன்மதிப்பை உயர்த்திக் கொள்ளவும் கடும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இதற்காக எட்டு பொதுமக்கள் தொடர்பு நிறுவனங்களின் சேவை இலங்கை அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அவற்றுக்கு மாதம் தோறும் கோடிக்கணக்கான பணம் செலவழிக்கப்படுகின்றது. தற்போது அமெரிக்காவிலும் லெவிக் எனும் பொதுமக்கள் தொடர்பு நிறுவனமொன்றின் சேவையை இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் இலங்கை தொடர்பான நன்மதிப்பை உயர்த்தும் வகையில் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. மேலும் இலங்கை அரசின் வெளிநாட்டமைச்சும் இதே நோக்கில் தனித்தனியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அரசாங்கத்தின் முக்கிய தனிநபர்களும் புறம்பான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள்.அவற்றுக்கும் தனித்தனியாக பெரும் தொகைப் பணம் செலவிடப்படுகின்றது.

அமெரிக்காவில் வசிக்கும் தெற்காசிய விவகாரங்கள் தொடர்பான நிபுணர் மைக்கேல் குகில்மன் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது, பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் தங்கள் நன்மதிப்பை உயர்த்த பொதுமக்கள் தொடர்பு நிறுவனங்களின் சேவையைப் பெற்றுக் கொள்வது வழமையான விடயமே.

ஆனால் இலங்கை அரசாங்கம் ஒரே நேரத்தில் எட்டு நிறுவனங்களின் சேவையைப் பெற்றுக் கொள்வதுதான் ஆச்சரியமான விடயமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.