கேணல் பருதியின் நினைவுச்சின்னம் பிடுங்கி அகற்றப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். November 5, 2014 News கேணல் பருதியின் நினைவுச்சின்னம் பிடுங்கி அகற்றப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். பாரியதோர் இனப்படுகொலையை ஈழத்தமிழினம்மீது கட்டவிழ்த்து விட்டதன்மூலம் எம்மினத்தின் உயிர்நாடியான தமிழீழ விடுதலைப்புலிகளை உலகவல்லரசுகளின் துணையுடன் தற்காலிகமாக மௌனிக்கச் செய்த சிங்களம் அடிமையென நினைத்து எம்மை மிதித்தால் மண்ணில் விதைந்து விருட்சமாகும் இனம் நாமென்பதை ஒருபோதும் மறக்கவில்லை. ஆகவேதான் உலகெங்கும் தமிழினத்தின் விடுதலைக்கான சளைக்காத உழைப்பையும், அது உலகளவில் தன்னுடைய எதேச்சதிகார இருப்பிற்கு ஏற்படுத்திவரும் அரசியல்ரீதியான நெருக்கடிகளையும் கண்டு நிலையதிர்ந்துள்ளது. தான் அழித்துவிட்டதாக மார்தட்டிக்; கொள்ளும் புலிகளின் ஒற்றைப்போராளியின் நினைவுகூட எவ்வளவு உயிர்ப்பாக ஆயிரமாயிரம் தமிழர்களை இலட்சியப்பற்றோடு பயணிக்கவைக்கிறது என்பதை ஜீரணிக்க முடியாமல் சிங்களம் திணறுகிறது. அவ்வகையிலே மாவீரர்நாள் நெருங்கவுள்ள இந்தப் புனித மாதத்தில் கேணல் பருதியின் நினைவுக்கல்லில் தன் ஈனத்தனத்தை நிறைவேற்றி நிம்மதி அடையப்பார்க்கிறது. முழு மானிட உலகமும் வெட்கித்தலைகுனியச் செய்யும் காரியங்களைச் சிங்களம் செய்வது இது ஒன்றும் முதல்முறை அல்ல! தாயகப்பிரதேசங்களில் போராளிகள் விதைக்கப்பட்ட துயிலுமில்லங்களைச் சிதைத்துப் பெருமூச்சு விட்ட சிங்களம், இப்போது புலம்பெயர் மண்ணிலும் தன் அட்டகாசத்தைத் தொடர்ந்துள்ளது. தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் ஆக்கிரமிப்பாளனின் நோக்கத்தையும் நிலையையும் அன்பான எம் மக்களே உலகெங்கும் எடுத்துச்செல்வோம். ஓவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் நிறைந்து நிற்கும் மாவீரர் பற்றிய நினைவுமூச்சை இப்படிப்பட்ட கீழ்மைச்செயல்கள் ஒன்றுமே செய்யாது என்பது திண்ணம். அதேவேளை இந்த அநாகரீகச் செயலைச் செய்வித்த சிறிலங்கா அரசையும், அதன் கைக்கூலிகளையும் பிரான்சு அரசு மிகவிரைவில் சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்றும் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.