மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் அனைத்துலக தமிழ் மாநாடு 2014 – ஏற்பாட்டாளர்கள் தமிழர் முன்னேற்ற இயக்கம்

உலகத்தமிழர்களின் அடையாளம், அமைதி, நீதி மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான தேடல்களுக்கு ஆதரவும், மறுமலர்ச்சியும் ஏற்படுத்த உந்துதலாக இருக்கும் அமைப்பு பினாங்கு தமிழர் முன்னேற்ற இயக்கம். மலேசியாவில், குறிப்பாக பினாங்கு மாநில தமிழர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, தற்கால உலக சவால்களை தமிழர்களுக்குத் தெளிவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மலேசியா, இலங்கை, தமிழகம், மியான்மார் மற்றும் பல்வேறு நாடுகளிலும் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு, தீர்வுகாண நடவடிக்கைகளை முன்னெடுத்தல், தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், சவால்கள், ஜனநாயகம், நீதி மற்றும் மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதை ஏற்றுக்கொண்டு செயல்படுதல் இவ்வியக்கத்தின் கொள்கையாகும்.

மாநாடு –பினாங்கு தமிழர் முன்னனற்ற இயக்கம், 2014 நவம்பர் 7,8 மற்றும் 9 தேதிகளில், “அடையாளத்தைத் தேடி”என்ற கருப்பொருளோடு, மலேசியாவின் பினாங்கு மாநிலம், ஜார்ஜ்டவுனில் அனைத்துலக தமிழ் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

இம்மாநாட்டின் முக்கிய நோக்கம், அடையாளத் தேடலில் உலகத் தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து விவாதிப்பதேயாகும். மலேசியா, இந்தோனேசியா, மியான்மார், மொரிஷியஸ், ரீயூனியன் தீவு, தென்னாப்பிரிக்கா, இந்தியா, தமிழீழம், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளிலிருந்து பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள் இம்மாநாட்டில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

சரித்திரத்தில்,மலாயா தீபகற்பத்துக்குள் இந்தியர்களும்,சீனர்களும் நுழைவதற்கு நுழைவாயிலாக இருந்தது பினாங்கு. இன்றும் தமிழர்களின் அடையாளத்தைக் கூறும் ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள், தமிழ்மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்கள் மற்றும் கல்லறைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இங்கே நிலைத்துள்ளன. இவையனைத்தும்,தமிழர்கள் இங்கே இருப்பதை மட்டும் உணர்த்தாமல் அவர்கள் இந்நாட்டின் வளர்ச்சியில் ஆற்றியுள்ள பங்கையும் உணர்த்துகின்றது. உலகில் இன்று 7 கோடி தமிழர்கள் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் தமிழகத்தில்தான் உள்ளனர். தமிழீழத்தில் உள்ள தமிழர்களை தவிர்த்து மலேசியா, இந்தோனேசியா, மொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழர்கள், காலனித்துவக்கால ஆட்சியின் பொழுது கூலித்தொழிலாளர்களாக தமிழகத்தில் சென்ற தமிழர்களை மூதாதையர்களாகக் கொண்டவர்கள். அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் நடந்த இனக்கலவரங்களுக்குப் பின்பு வடஅமெரிக்கா, ஐரோப்பாவிலும் பெருமளவிலான தமிழர்கள் குடிபெயர்ந்துள்ளனர்.

தமிழீழம் இம்மாநாட்டில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கினாலும், இம்மாநாட்டில் அதை தவிர்த்து பல்வேறு முக்கிய அங்கங்களும் கருத்தில் கொள்ளப்படும். தமிழ் அடையாளம் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் கலவையான சமூக சூழலில் மொழி, கலாச்சாரம் தவிர்த்து எவ்வாறு தமிழர்கள் தங்களது அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றனர். (மொரிஷிpயஸ், ரியூனியன், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில்) முருக வழிபாட்டின் வழி அடையாளம் எப்படி அடையாளம் தற்காக்கப்படுகின்றது என்பதையும் விவாதிக்கும் களமாகும்.

ஒரு கவுரமிக்க இனமாக தமிழர்கள் சந்திக்கும் சவால்கள், பிரச்சனைகள் குறித்து தெளிவாகவும், சீரான விவாதங்களையும் அந்தந்த நாட்டைச் சேர்ந்த வல்லுனர்கள் முன்வைப்பார்கள் என்று எதிர்பாக்கப்படுகின்றது. அடையாளம் எனும் வேளையில், கலாச்சாரம் மிக முக்கிய அங்கமாகும். அதே வேளையில் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் மறுக்காமல் அடையாளம் என்ற விவாதத்தில் மனித சமத்துவம், ஜனநாயகம் மற்றும் நீதி ஆகியவற்றை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்தகைய சிறப்பு மிக்க அனைத்துலக தமிழ் மாநாடு 2014 மலேசியாவின் பினாங்கு மாநிலம், ஜார்ஜ்டவுனில் நடைபெற இருக்கிறது.

ஏற்பாட்டாளர்கள் – பினாங்கு தமிழர் முன்னேற்ற இயக்கம்

Saurce: Siraku.com