வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் புலம்பெயர் சமூக உறுப்பினர்கள் வடக்கிற்கு பயணங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் விதித்துள்ள கெடுபிடிகளை நீக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய முனைப்பு காட்டவில்லை என யாழ்ப்பாண பேராயர் அதி வணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

வடக்கு பயணக் கெடுபிடிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், வட மாகாணசபை உறுப்பினர்களும் உரிய முறையில் கவனம் செலுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பார்கள் என்ற எடுகோளின் அடிப்படையில் அரசாங்கம் காலத்திற்கு காலம்இவ்வாறான கொள்கைகளை பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான விசாரணைளும் இவ்வாறான கெடுபிடிகளை விதிக்க ஏதுவாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்

மக்கள் தங்களது சொந்தங்களை பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்படாமை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல எனவும், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதகுருமார் இது குறித்து குரல் எழுப்ப முடியாது எனவும், பிரதேச மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயணக் கெடுபிடிகளின் காரணமாக பாரியளவு பொருளாதார பாதிப்புக்களும் ஏற்படக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Saurce: Mannar.net