கேணல் கிட்டு பூங்காவில் மலர்கண்காட்சி!! வடமாகாண விவசாய அமைச்சு ஏற்பாடு!!

வடமாகாண விவசாய அமைச்சு மரநடுகை மாதத்தையொட்டி ஏற்பாடு செய்திருந்த மலர்க்கண்காட்சி நேற்று புதன்கிழமை (05.11.2014) நல்லூர் முத்திரை சந்தியினிலுள்ள கேணல் கிட்டு நினைவுப்பூங்காவில் ஆரம்பமாகியது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவும் மலர் நாடாவை வெட்டிக் கண்காட்சியைத் தொடக்கி வைத்தனர்.

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் அலங்காரத் தாவரங்களையும், பயன்தரு மரக்கன்றுகளையும் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பிரபல்யமான பண்னையாளர்கள் இக் கண்காட்சியில் தங்கள் உற்பத்திகளைக் காட்சிப்படுத்தியிருப்பதோடு விற்பனையும் செய்து வருகின்றனர்.

யாழ் மாவட்டத்தில் முதல்முதலாக நடைபெறும் மலர்க்கண்காட்சி என்பதால் ஆர்வத்தோடு ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டதோடு தாவரங்களை வாங்கிச் சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது.

இளம் வயதினர் மரநடுகையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் நோக்கில் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களில் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் விநியோகிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பெருவாரியான பாடசாலை மாணவர்கள் வரிசையில் நின்று மரக்கன்றுகளை வாங்கிக் சென்றதையும் காணமுடிந்தது.

மலர்க்கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் எதிர்க்கட்சி தலைவர் சி. தவராஜா, மாகாணசபை உறுப்பினர்கள் கே.சயந்தன், கே.என். விந்தன் கனகரத்தினம், அ. பரஞ்சோதி, பா. கஜதீபன், இ. ஆனல்ட், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர் கி. சிறீபாலசுந்தரம், உதவி விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி ஸ்ரீரஞ்சன், மீன்பிடி அமைச்சின் செயளாலர் ஆர். வரதீஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

இம்மலர்க்கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைவரை (09.11.2014) தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Saurce: Pathivu