முல்லையில் தடம் பதிக்கும் நோர்வேயின் தமிழ் மகளிர் குமுகம்!!

முல்லையில் தடம்பதிக்கும் நோர்வேயின் தமிழர் ஒற்றுமை குமுகம்! சாதிக்கும் சந்ததியின் ஐந்தாம் கட்டத்தில் இணைந்தது மகளிர் குமுகம்!!

சாதிக்கும் சந்ததியின் 5ம் கட்ட நிகழ்வானது நேற்று காலை 9.30 மணியளவில் வள்ளிபுனம் க.உ.வித்தியாலயத்தில் ஆரம்பமாகியிருந்தது. 5ம் கட்டத்திற்கென உள்வாங்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து அந்நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள 8 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அப்பாடசாலைகளில் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்து வறுமையோடு கல்வியை தொடரும் பாடசாலை மாணவர்கள் மேற்படி செயற்திட்டத்தில் உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் பார்வைத்திறன் குன்றிய நிலையிலும் புலமைப்பரிசில் பரீட்சையில் 112 புள்ளிகளை பெற்ற இனிய வாழ்வு இல்லத்தில் வாழும் வள்ளிபுனம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தை சேர்ந்த மாணவி ஒருவரும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில் ,

தாயகத்தில் உள்ள மாணவர்களின் நிலையான கற்றல் செயற்பாடுகளை உறுதிசெய்யும் வகையில் கடந்த வைகாசி மாதம் முதல் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் சாதிக்கும் சந்ததி என்னும் செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.

வறுமையால் தொடரும் மாணவர்களின் பாடசாலை இடைவிலகலை தாயகத்தில் இல்லாமல் செய்யும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்டுவரும் இச்செயற்திட்டத்தில் முன்னைய நான்கு கட்டங்கள் ஊடாக ஏற்கனவே 127 மாணவர்கள் உள்வாங்கப்பட்டநிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஐந்தாம் கட்டத்தோடு இச்செயற்திட்டம் 222 மாணவர்களை உட்சேர்த்துள்ளது.

வள்ளிபுனம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை தலைமை தாங்கிய அப்பாடசாலை அதிபர் செல்வி ஆர்.பேரின்பராணி அவர்கள் தனது தலைமையுரையில், பெறுமதி வாய்ந்த இச்செயற்திட்டம் மென்மேலும் தொடர்ந்து வறுமையால் பாதிப்புறும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

வள்ளிபுனம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயம், உடையார்கட்டு மகாவித்தியாலயம் , உடையார்கட்டு அ.த.க. பாடசாலை, சுதந்திரபுரம் அ.த.க பாடசாலை, இருட்டுமடு அ.த.க பாடசாலை, குரவில் அ.த.க பாடசாலை, தேவிபுரம் அ.த.க. பாடசாலை மற்றும் கைவேலி கணேசா வித்தியாலய மாணவர்களை உள்ளடக்கிய இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன்,

சொப்பின் பையில் புத்தகங்களை காவிய வண்ணம் வெற்றுக்காலுடன் பாடசாலை சென்ற சிறுமி ஒருவரை பார்த்த போது பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை உறுதி செய்யும் திட்டம் ஒன்றை தாயகத்தில் வலுப்பெறச்செய்யவேண்டும் என்ற எண்ணம் உதயமானது. புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் மெல்ல மெல்ல இச்செயற்திட்டத்தினை முன்னெடுக்க முடிந்தது.

இன்றைய இந்த ஐந்தாம் கட்டத்தில் “தமிழர் ஒற்றுமை அபிவிருத்திக்குமுகம் – நோர்வே” இன் தமிழ் மகளிர் குமுகம் தனது மாணவர் கல்வி மேம்பாட்டுத்திட்டத்தின் ஊடாக 75 மாணவர்களுக்கான கற்றல் பொருட்களுக்கு நிதியுதவி வழங்கியதோடு மிகுதி 20 மாணவர்களுக்கான கற்றல் பொருட்களுக்கு தமிழ்ச்சமூக நிலையம் – இலண்டன் (திரு.என்.சிவகணேஸ்) ம் உதவிகளை வழங்கியிருந்தது.

இச்செயற்திட்டம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளோடும் தொடர்புகளை ஏற்படுத்தி மாணவர் விபரங்களை சேகரித்த வண்ணமே உள்ளோம். இச்செயற்திட்டத்தின் அடுத்தடுத்த கட்டங்களை மிக விரைவில் செயற்படுத்தி தாயகத்தில் உள்ள மாணவர்களின் சீரான கற்றல் செயற்பாடுகள் உறுதி செய்யப்படும் வரை சாதிக்கும் சந்ததி செயற்திட்டமும் தொடர்ந்த வண்ணமே இருக்கும். என்று தெரிவித்திருந்தார்.

மேற்படி நிகழ்வில் உடையார்கட்டு மகாவித்தியால அதிபர் திரு.ஸ்ரீகரன், உடையார்கட்டு அ.த.க பாடசாலை அதிபர் திரு.அமிர்தநாதன் மற்றும் வள்ளிபுனம் முதியோர்சங்க பொருளாளரும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.