ஐ.நா விசாரணைக் குழு சிறீலங்கா செல்வதற்கான கோரிக்கையை ஐ.நா ஆணையாளர் முன்வைப்பார்! November 8, 2014 News ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணைக் குழு, சிறிலங்காவுக்கு விஜயம் செய்வதற்கான கோரிக்கையை முன்வைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் ஊடகம் ஒன்று, குறித்த விசாரணைக்குழுவை மேற்கோள் காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சயீட் ராட் சயீட் அல் ஹுசைனின் ஊடாக இந்த கோரிக்கை முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சர்வதேச விசாரணைகளுக்கு தாம் ஒத்துழைக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நேற்று வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், ஜெனீவாவில் உள்ள சிறிலங்காவின் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இதில் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட கருத்துக்களுக்கு கண்டனத்தை தெரிவித்திருப்பதுடன், சர்வதேச விசாரணைகளுக்கு சிறிலங்கா ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.