வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாங்களில் தங்கியுள்ள குடும்பங்களை அங்கேயே நிரந்தரமாக குடியமர்த்துவதற்கு இராணுவத்தினரும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியினரும் கூட்டிணைந்து பல முயட்சிகளை முன்னெடுத்து வருகின்றமை அம்பலமாகியுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களிற்கு ஆக்கிரமிப்பு காணிகளிற்கு வெளியே வேறு காணிகளை வழங்குவதாகவும் அதற்கென புதிய பதிவுகளை மேற்கொள்ளும் அவர்கள், அம்மக்களை குழப்பமடையச்செய்யும் வகையினில் அநாமதேய துண்டுப்பிரசுரங்களையும் வெளியுடுவதாகவும் வலி.வடக்கு மீள்குடியேற்றக்குழுவின் தலைவர் ச.சஜீவன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமில் வாழும் மக்களுக்கு மாற்றுக்காணிகள், மற்றும் அவர் தற்போது வசித்து வரும் முகாமில் உள்ள காணிகளை பகிர்ந்து வழங்குவதாகக் கூறி புதிதாக பதிவு மேற்கொள்ளும் நடவடிக்கை நேற்றில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பதிவு நடவடிக்கையினை சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்களின் ஒருவராக தன்னை கூறிக்கொள்ளும் கே.ரி.ராஜசிங்கம் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்களும் மேற்கொண்டு வருகின்றர். குறித்த நபர்களுக்கு முகாமில் உள்ள ஒரு சில நபர்களும் உடந்தையான செயற்படுகின்றார்கள்.

குறிப்பாக உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள காணிகள் ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் நம்பி எந்தப் பயனும் இல்லை என்றும், மாற்றுக் காணிகளைப் பெற்றுக்கொண்டு குடியேறுவதே ஒரே வழி என்றும் சபாபதிப்பிள்ளை முகாம் மக்களுக்கு தந்துரோபாயமான பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது.

உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்கும் நடவடிக்கையில் ஒரு பாகமாகவே இப்பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் அரசாங்தத் தரப்பினருக்கு வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் தூதுவர்கள் வலி.வடக்கு முகாம் மக்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி, அவர்களின் தேவைகளை நேரில் கேட்டறிந்து செல்வது வழக்கமாக உள்ளது.

இதனால் முகாம் என்ற ஒன்று யாழில் இல்லை என்பதை மூடிமறைப்பாதற்கான செயற்றிட்டமே இவ்வாறான பதிவு நடவடிக்கைகள் ஆகும்.

தற்போது பருவ மழை ஆரம்பித்துள்ள காரணத்தினால் முகாம் மக்கள் பல விதமான பாதிப்புக்களை எதிர் கொண்டு வருகின்றனர். இப்பாதிப்புக்களை தமக்கு சாதகமான பயன்படுத்திக் கொள்ளும் இராணுவத்தினர் மக்களை மாற்றுக் காணிகளில் கொண்டு சென்று குடியேற்றுவதற்கும் எத்தணிக்கின்றார்கள்.

இராணுவத்தினர் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரால் மேற்கொள்ளும் போலி பிரச்சாரங்களை நம்பி மாற்றுக் காணிகளுக்காக பதிவுகளை மேற்கொள்வதை வலி.வடக்குவாசிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மக்களை ஏமாற்றும் இவ்வாறான நடவடிக்கையினை உடனடியாக தடுத்து நிறுத்த வடமாகாண சபை முன்வர வேண்டும். முகாம் மக்களுடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவு ஒன்றினையும் வடமாகாண சபை எடுக்க வேண்டும்.

நாளுக்கு நாள் வாழ்வாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வரும் முகாம் மக்களுக்கு உதவிகளை மேற்கொள்ளவும் வடமாகாண சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.