இலங்கையில் தமிழ் மக்களுக்கு எங்களால்; எதுவும் செய்ய முடியவில்லை. இதற்காக வருந்துகிறோம் என வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள வித்யோதயா பள்ளியில் இன்று கே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. அதில், இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேசுவரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விக்னேஸ்வரனின் உரையில் இருந்து…

இலங்கையில் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியவில்லை இலங்கை வாழ் வடகிழக்கு தமிழ்பேசும் மக்கள் சார்பாக 1987-ம் ஆண்டில் ஏற்பட்ட இந்தோ லங்கா  உடன் படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டது. ஒற்றை ஆட்சி அரசியல் சட்டத்தின் கீழ் உண்மையான அதிகார பகிர்வை எதிர்பார்க்க முடியவில்லை.
குறிப்பாக அனைத்து அதிகாரங்களும் இலங்கை மத்திய அரசின் கையில் உள்ளது. அந்த அரசின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவே அந்த அதிகாரங்களை தன்னகத்தே குவித்து வைத்திருக்கிறார்…

ஆதனால் மாகாண சபையின் மூலம் தமிழர்களுக்காக எதனையும் செய்ய முடியவில்லை;. இப்பகுதி ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது அங்கு இந்த நிலைமை தான் உள்ளது.

எங்களை சிங்கள அரசு செயல்பட விடாமல் தடுத்து வருகிறது. அதுதான் அவர்களது முக்கிய குறிக்கோளாக உள்ளது.

இந்த நிலையில் அதிகாரமில்லாத வடக்கு மாகாண சபையில் முதல்வராக ஏன் இருக்கிறீர்கள் என என்னைக் கேள்வி கேட்கிறார்கள்.

தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் எங்களிடம் உள்ளது. தமிழ் பேசும் மக்களுக்கும் அது குறித்து மிகுந்த கவலை அளிக்கிறது. அத்துடன் வட கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினரின் திட்டமிட்ட  ஊடுருவல்களும் அதிகரித்து வருகிறது எனவும் வட மாகாண சபை முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் இன்றைய தமிழக உரையில் தெரிவித்துள்ளார்.