சிறீலங்கா அரசாங்கம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமான் நாட்டில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றின் ஆசிரிய தலையங்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் பதவிக் காலத்தில், சிறிலங்கா அரசாங்கம் மனித உரிமை சார்ந்த குற்றச்சாட்டுகளுக்காக இலக்கு வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் நவநீதம்பிள்ளை பதவி விலகியதன் பின்னர், செயிட் ராட் செயீட் அல் ஹுசேன் புதிய ஆணையாளராக பதவி ஏற்றார்.
அவர் சிறிலங்காவை இலக்கு வைத்து செயற்பட தாயராக இருக்கவில்லை.

எனினும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சிறிலங்காவின் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்க மறுத்ததுடன், இது தொடர்பில் ஒத்துழைப்பு வழங்கியவர்களையும் பல்வேறு வழிகளில் அச்சுறுத்தி வருகிறது.

ஐக்கிய நாடுகளுக்கு எதிரான சிறிலங்காவின் இந்த செயற்பாடுகளால், புதிய ஆணையாளர் ஹுசேனின் சிறிலங்கா தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன் வெளிப்பாடே கடந்த தினம் அவர் சிறிலங்காவுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டிருந்த கருத்துக்கள் என்று அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டிருந்த கருத்துக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக கண்டனம் வெளியிட்டமையும், சிறிலங்காவுக்கே பாதகத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.