தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளை அடைவதற்காக எந்தவித சுயநலமுமின்றி அகிம்சை வழியில் போராடிய தந்தை செல்வா, 2009ம் ஆண்டுவரை ஆயுதப் போராட்டத்தை நடாத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஆகியவர்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளதாக சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் தமிழ் தேசிய பணிக் குழுவினால் மறைந்த மாமனிதன் ரவிராஜ் அவர்களின் நினைவுச் சொற்பொழிவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிரேஸ்ட சட்டத்தரணி ஜி. இராஜ குலேந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த நினைவுப் பேருரை நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், பா.அரியநேத்திரன், சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான கலாநிதி நல்லையா குமரகுருபரன், புரவலர் கருணை ஆனந்தன் ஆகியோர் நினைவுரைகளை வழங்கினர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா நினைவுரை ஆற்றினார்.

அவர் தனது உரையில்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சட்டத்தரணி ரவிராஜ் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டு இன்று 8 வருடங்கள் நிறைவு பெறுகின்றன.

ரவிராஜ் தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் செய்த சேவைகளையும் நாம் அறிவோம். நாடறியும் உலகம் முழுவதும் பரந்து வாழம் எமது உறவுகள் அறிவார்கள்.

சட்ட மாணவனாக, சட்டத்தரணியாக, சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக, பின்னர் அவசரகால பயங்கரவாத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போராளிகளின் விடுதலைக்காக நீதிமன்றங்களில் சக சட்டத்தரணியாக வாதாடிய தம்பி ரவிராஜ் எங்களை விட்டு மறைந்தாலும் அவரது மறைவு என்னை தனிப்பட்ட முறையில் மிகவும் பாதித்துள்ளது.

ரவிராஜ் கொலை செய்யப்பட்ட தினத்திற்கு ஒரு கிழமையின் முன்னர் 2006 ஆண்டு கார்த்திகை மாதம் 3ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கிற்காக ரவிராஜ் வந்திருந்த வேளையில், நான் அவரிடம் பாதுகாப்பில் அவதானம் தேவையென்று அறிவுரை வழங்கினேன்.

அப்போது, “அண்ண மரணம் தடுக்கப்படமுடியாது” என ரவிராஜ் என்னிடம் கூறிய வார்த்தைகள் காலத்தால் என் மனதிலிருந்து அழிக்க முடியாததாக பதிவாகிவிட்டது.

2006 ஆண்டு கார்த்திகை மாதம் 10ஆம் திகதி நான் நீர்கொழும்பு நீதிமன்றிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது ரவிராஜ் துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட செய்தி காலை 8.45 நிமிடமளவில் எனக்கு தெரிய வந்தது.

நான் உடனடியாக கொழும்பு அரச வைத்தியசாலைக்கு விரைந்து சென்று அவரது இறந்த உடலை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனை நடைபெற்ற இடத்திற்கு சென்றிருந்த வேளையில் அங்கே பாராளுமன்ற உறுப்பினர்களான மகேஸ்வரனும் சிவாஜிலிங்கமும் வந்திருந்தனர்.

நாங்கள் மூவரும் எனது துணைவியாரும் உரையாடிக் கொண்டிருக்கையில், தனக்கும் பாதுகாப்புப் பிரச்சினை உள்ளதாக மகேஸ்வரன் எங்களிடம் கூறினார். அதற்கு நான் பாதுகாப்பில் கவனமாகயிருங்கள் என மகேஸ்வரனிடம் கூறினேன். ஆனால் மகேஸ்வரனும் பட்டப்பகலில் கோவிலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களுக்கும் பாதுகாப்புத் தரப்பினால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளுக்காக நீதிமன்றில் வாதாடிய குமார் பொன்னம்பலமும் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார்.

ஆனால் இந்தக் கொலைகளுக்கான சூத்திரதாரிகள் கைது செய்யப்படவில்லை. ரவிராஜ் கொலையில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட மூவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு பிணை வழங்க நான் கடும் அட்சேபனை தெரிவித்தேன். ஆனால் பிணை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னர் இந்த வழக்கு விடயத்தில் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தான் இந்த நாட்டின் சட்டம்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழியிலும் தேர்ச்சி பெற்ற ரவிராஜ், தமிழர் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் உள்நாட்டு, வெளி நாட்டு ஊடகங்களை செம்மையான முறையில் பயன்படுத்தினார்.

குறிப்பாக சிங்கள ஊடகங்களை மிகச் செம்மையான முறையில் பயன்படுத்தி தமிழர் போராட்டங்களின் நியாயங்களையும் தமிழர் தாயகத்தின் உண்மை நிலைமைகளையும் உடனுக்கு உடன் சிங்கள மக்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

ரவிராஜ் மறைந்து எட்டு வருடங்கள் முடிந்த போதிலும் அரசியலில் அவர் விட்டுச்சென்ற இடைவெளி இன்னும் நிரப்பப்படாமை கவலைக்கும் வேதனைக்கும் உரியது.

என்னைப் பொறுத்தவரையில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததாக கூறப்படும் காலத்திலிருந்து இன்று வரை தமிழ் மக்களின் அபிலாசைகளை அடைவதற்காக போராடிய தலைமைத்துவங்களை மதிக்கும் அதே வேளையில்,

தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளை அடைவதற்காக எந்தவித சுயநலமுமின்றி அகிம்சை வழியில் போராடிய தந்தை செல்வா, 2009ஆம் ஆண்டுவரை ஆயுதப் போராட்டத்தை நடாத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியவர்கள் மீது நான் உலகிலும் மிகுந்த மரியாதையுடன் உள்ளேன்.

அந்த வரலாற்றுப் பாதையில் வளர்ந்த போராட்டத்தை என் உயிரிலும் மேலாக மதிக்கிறேன்.

நான் கடும் போக்காளனோ அல்லது ஆயுதப் போராட்டத்தை விரும்புபவனோ அல்ல. ஆனால் ஆயுதப் போராட்டம் எந்த சூழ்நிலையில் ஆரம்பிக்கப்பட்டதென்பதை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்.

ஒருவரும் தானாக விரும்பி கழுத்தில் சைனைட்டும் கையில் துப்பாக்கியையும் ஏந்தமாட்டான். மாறி மாறி ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகளால் விரத்தியடைந்த தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டார்கள்.

கல்வியே தமது சொத்து என வாழ்ந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டமைக்கு பல காரணங்களிருந்த போதிலும் தரப்படுத்தல் சட்டம் முக்கிய பங்கை வகித்தது.

போராட்ட இயக்கங்களுக்கு தலைமை தாங்கியவர்களும் இயக்கங்களில் இணைந்தவர்களும் 1950ம் ஆண்டிற்கும் 1957ஆம் ஆண்டிற்குள்ளும் பிறந்தவர்கள் தரப்படுத்தல் சட்டத்தினால் பாதிப்பிற்கு உட்பட்டவர்களுமேயாவர்.

தரப்படுத்தல் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களில் நானும் ஒருவன். இழப்புக்களை, துன்பங்களை, வேதனைகளை சந்தித்தவர்களின் மன வேதனைகளை புரிந்து கொள்பவர்கள் உணர்ந்து கொள்பவர்களே அரசியலில் நிலைக்கமுடியும்.

நேர்மையான அரசியல்வாதி கருத்துக்களுக்கு கருத்துக்களால் பதில் வழங்க வேண்டும். தம்பி ரவிராஜ் தனக்கு எதிரான கருத்துக்களுக்கு கருத்துக்களால் பதில் வழங்கியவர்.

ஆரோக்கியமான விமர்சனங்களை ஏற்றுக் கொண்டவர் நாம் ஒரு விடயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் விமர்சிக்கப்படுகின்றார் எனில் விமர்சனத்திற்குள்ளானவர் அங்கீகரிக்கப்படுகின்றார் என தெரிவித்தார்.