வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரனைப் புலனாய்வாளர்கள் கொழும்பில் வைத்து நேற்று பின்தொடர்ந்தமை பெரும்பரபரப்பினை தோற்றுவித்துள்ளது. சில விடயங்களைப் பேசுவதற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சுவிஸ் தூதரகத்திற்கும் அமெரிக்க தூதரகத்திற்கும் சென்றுவிட்டு வரும்போது அவரைப் புலனாய்வாளர்கள் பின் தொடர்ந்துள்ளனர்.

இதனால் அவர் கொழும்பு, பம்பலப்பிட்டியிலுள்ள கோவிலினுள் சென்று அதன் பின்னர் இருதய சத்திரசிகிச்சைக்காக கொழும்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கத்தைத் தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் அவருடைய வழிகாட்டலின் துணையுடன் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் மாமனிதர் ரவிராஜின் நினைவு விழாவுக்கு சென்று தப்பித்துக்கொண்டதாக தெரியவருகின்றது.

இதனிடையே தன்னை பின்தொடர்ந்த புலனாய்வாளர்கள் தான் பயணம் செய்த ஓட்டோ சாரதியை விசாரணைக்குள்ளாக்கியதையும் அவர் அவதானித்துள்ளார்.