தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து மாவீரர் நினைவிடங்கள், துயிலிடங்கள், நினைவுத்தூபிகள்  முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.குறித்த துயிலும் இல்லங்கள் சிறீலங்காப் படையினரின் கனரக வாகனங்களால் முற்றாக இடித்தழிக்கப்பட்டு அதன் எச்சங்கள் அங்கிருந்து வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதியால் செல்வோரால் அங்கு உள்ள பூமரங்களையும், ஏனைய மரங்களையும் வைத்து மட்டுமே அடையாளம் காணக்கூடியதாக இருந்தும் அவை கூட இன்று அழித்தொழிக்கப்பட்டது.சர்வதேச சட்டங்களை மீறி மனிதநேயமற்ற இனவெறி பிடித்த ஸ்ரீலங்காப் படையினர் தமிழர்களின் வரலாற்று தொன்மைகளை அழிக்கும் நடவடிக்கையின் உச்சகட்டத்தை வெளிக்காட்டும் செயலாக அவைகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகெங்கும் பரந்து வாழும் கோடானுகோடி தமிழ் மக்களின் கனவை, ஆசையை, உணர்வை, நனவாக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் தமது இளைமைக் காலத்து ஆசைகளை, விருப்புகளை, குறும்புகளை எல்லாம் துறந்து உன்னத நோக்கிற்காகப் போராடித் தமிழ் மண்ணில் வித்தானவர்கள் எம் மாவீரர்கள்.

தமிழ் மண் விடுதலையடைய வேண்டும், தமிழ் மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்பதற்காய் தம் உயிர்களைத் தந்த மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்ததாய் புலம்பெயர் தேசத்தில் யேர்மனியில் இப் பிரதான   நினைவுத்தூபி அமைகின்றது .

தாயகத்தில் எமது மாவீரர்களின் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டாலும் இன்றைய நிலையில் புலம்பெயர் தேசத்தில் ஒவ்வொரு நாடுகளிலும் மாவீரர்களின் நினைவாக நினைவுத்தூபி அமையும் என்பது நிச்சயம் . அதே போல்  எந்த மண்ணுக்காக எமது  மாவீரர்களும் மக்களும் தங்கள் உயிர்களை கொடுத்தார்களோ அந்த தமிழீழ தேசத்தில் மீண்டும் சுதந்திர காற்று வீசும் மாவீரர்களின் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்படும்.

சாவு நிச்சயம் என்று தெரிந்த பொழுதும்கூட எதிரியிடம் மண்டியிடாது, உயிரைத் துச்சமென மதித்துத் தமது இறுதி மூச்சு அடங்கும் வரை அடங்காது வீரப்போர் புரிந்து, அடங்காப்பற்றாக விளங்கும் வன்னி மண்ணில் வீர சுவர்க்கம் எய்தியவர்கள் எமது வீர மறவர்களின்   மற்றும் மக்களின் நினைவாக “நடுகல்” ,  நாட்டும்  அடிக்கல் நடும் ஆரம்ப வணக்க  நிகழ்வு 23.11.2011 அன்று நடைபெற்று 3 வருட நிறைவில் எதிர்வரும் 29.11.2014 அன்று நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட இருக்கின்றது .

“மாவீரர்களது  நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்கவேண்டும்” எனும் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு வடிவம் கொடுக்கும் வகையில் யேர்மனியில் பிறந்து வளரும் எமது இரண்டாவது தலமுறையினருக்கு எமது விடுதலைப் போராட்ட வரலாற்றை பறைசாற்றும் வகையில் பல தடைகளையும் தாண்டி யேர்மனியில் வாழும் தமிழ் மக்களின் ஆதரவுடனும் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களின் கடுமையான உழைப்பாலும் பிரசித்தி பெற்ற சிற்பி Georg Schaab அவர்களால் ஈழத்தமிழர்களின் உணர்வுகளை கொண்டு உருவாக்கம் பெறுகின்றது இந்த நினைவுத்தூபி.

12 000 ஆயிரம்  கிலோ பாரத்தை கொண்ட கருங்கல்லில் மாவீரர்களின் எதிரிக்கு அடிபணியாத வைர உணர்வை காட்டும் வகையில் இத் தூபி செதுக்கப்பட்டு 27 மாவீரர் துயிலும் இல்லங்களின் பெயர்கள் அடிக்கல்லில் பதியப்பட்டு எதிர்வரும் 29.11.2014 அன்று மதியம் 12 மணிக்கு திறந்து வைக்கப்படும் . மேலதிக விபரம் மிக விரவில் அறிவிக்கப்படும் .

நினைவுத்தூபி விடையமாக யேர்மன் ஊடகத்தில் வெளியாகிய செய்தி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://www.derwesten.de/staedte/essen/sued/frohnhauser-bildhauer-schafft-ein-denkmal-fuer-die-tamilen-id10014020.html