வடமராட்சி கிழக்கின் கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் இலங்கை கடற்படையினரிற்கான தளமொன்று அமைப்பதற்கேதுவாக முன்னெடுக்கப்படவிருந்த நில அளவைப்பணிகள் களம் புகுந்த இளம் அரசியல் தலைமைகளினால் இன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது வரை காலமும் இத்தகைய நில ஆக்கிரமிப்பு தொடர்பிலான நில அளவைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்த தமிழ் அரசியல் தலைமைகள் ஓய்வு நிலைக்கு சென்றிருக்கின்றதாவென அண்மையில் வெற்றிலைக்கேணியில் முன்னெடுக்கப்பட்ட நில அளவீடு தொடர்பாக ஊடகங்களினால் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

யாழ்.குடாநாட்டில் படை முகாம்களை அமைப்பதற்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களது காணிகளை சுவீகரிப்பதற்கேதுவாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அளவீட்டுப்பணிகள் கடந்த 11ம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

குடாநாட்டின் பல பகுதிகளிலும் முப்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்க ஏதுவாக நில அளவை பணிகள் மேற்கொள்ள முயற்சிகள் இடம்பெற்றிருந்தது. எனினும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளது கடுமையான எதிர்ப்புக்களையடுத்து பல தடவைகள் இம்முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று வடமராட்சி கிழக்கில் கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் பொதுமக்களது காணிகளை சுவீகரிக்க ஏதுவாக முன்னெடுக்கவிருந்த அளவீட்டு பணிகளே பொதுமக்களுடன் இணைந்து தமிழ் இளம் அரசியல் தரப்பினால் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வடமாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன், கஜதீபன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக நியமிக்கப்படவிருக்கும் சதீஸ் ஆகியோர் களம் புகுந்திருந்தார். அவர்களது எதிர்ப்பு போராட்டத்தையடுத்து இன்றைய நில அளவை பணிகள் கைவிடப்பட்டுள்ளது.

நன்றி;பதிவு