வலி.வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை எப்பாடுபட்டேனும் சுவீகரிக்க இலங்கை அரசு முற்பட்டுள்ளது. அவ்வiகியில் வலிகாமம் வடக்கு பாதுகாப்பு வலயப்பகுதியில் படைத்தரப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியாருக்கு சொந்தமான 6 ஆயிரத்து 381 ஏக்கர் நிலப்பரப்பினை நிரந்தமாக அரசுடைமையாக்கும் நடவடிக்கைகள் முடிவுக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு ஏதுவாக குறித்த காணிகள் 2011 ம் ஆண்டின் ஒக்டோபர் மாதமளவில் முழுமையாக நில அளவீடு செய்யப்பட்டுவிட்டதாக அம்பலப்படுத்தியுள்ளார் வலி.வடக்கு மீள்குடியேற்றக்குழுவின் தலைவர் ச.சஜீவன்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பினில் அவர் மேலும் இது பற்றி தெரிவிக்கையில்:-

2011 ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அளவீடுகளின் அடிப்படையினில் தயாரிக்கப்பட்ட நில அளவீட்டு படங்களை 2013 ம் ஆண்டின் மே 06ம் திகதி செய்யப்பட்ட அளவீடுகள் போன்று மாற்றியமைக்க அரச உயர்மட்ட உத்தரவையடுத்து நிலஅளவை திணைக்களம் சதி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதற்கு புதிய தொடர் இலக்கங்கள் கூட ஒதுக்கப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட நில அளவீட்டினை கே.லியனகே, ஜ.கலாபய, எம்.பெரேரா மற்றும் யு.குணசேகர ஆகியோரை கொண்ட நில அளவையாளர்கள் அணியே மேற்கொண்டிருந்தது. வளலாய் உட்பட வலி.வடக்கின் 6 ஆயிரத்து 381 ஏக்கர் நிலப்பரப்பினை அவர்கள் அளவீடு செய்திருந்தனர். அவ்வாறு 2011 இனில் அளவீடு செய்யப்பட்ட காணிகளை 2013 ம் ஆண்டில் அளவீடு செய்யப்பட்டதாக காண்பிக்க மேற்கொள்ளப்படும் முயற்சி திட்டமிட்ட வகையில் எமது காணிகளை அரச காணிகளாக கபளீகரம் செய்யும் சதி முயற்சியே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இத்தகைய காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளினை துரிதப்படுத்த சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர் எச்.டி.என்.கல்தேரா என்பவர் அரசினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு பகுதிகளினில் நில அளவைகளினை மேற்கொண்டு சுவீகரிப்பினை துரிதப்படுத்திய அனுபவத்தை கொண்டவராம். கடந்த மாதம் 13ம் திகதி நியமிக்கப்பட்ட அவர் இவ்வாண்டின் இறுதியினுள் சுவீகரிப்பு பணிகளை பூரணப்படுத்தி வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கஜீவன் மேலும் தெரிவித்துள்ளார்.