பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியிருக்கும் முன்னாள் போராளி மீதான துப்பாக்கிச்சூடு November 15, 2014 News தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காவல் துறையில் பணியாற்றிய குடும்பஸ்தரான மன்னார் வெள்ளாங்குளம் கணேசபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது40) என்ற குடும்பஸ்தர் கடந்த புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் தனது வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ஆயுததாரிகள் அவரை அழைத்து சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளரான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் விடுதலைப் புலிகளின் காவல்துறையில் நீண்டகாலம் கடமையாற்றியவர். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து படையினரிடம் சரணடைந்த இவர் அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட நிலையில் 2012ம் ஆண்டு சமூகத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டார். அன்று முதல் உயிரிழக்கும் வரை சுயதொழில் மேற்கொண்டு வந்த இவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளராகவும், செயற்பட்டு வந்தார். இந்த நிலையிலேயே இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கில் நீண்டகாலமாக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கவில்லை. அங்கு அமைதியான சூழல் நிலவி வந்தது. தற்போது புலிகளின் காவல்துறையில் கடமையாற்றிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை மன்னார் பகுதியில் மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. மீண்டும் வன்முறை கலாசாரம் தலைதூக்கி விட்டதோ என்று மக்கள் அச்சம் கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைந்த கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டமையை மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை வன்மையாக கண்டித்துள்ளார். இச்சம்பவமானது கொடிய போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த ஆயுததாரிகள் முயற்சிப்பதையே எடுத்துக்காட்டியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளரான நகுலேஸ்வரன் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நாட்டில் இன்று நீதி தோற்றுப்போய்விட்டது. நீதிக்குப் புறம்பான செயல்கள்தான் இடம்பெற்று வருகின்றன. எனவே, சர்வதேச சமூகம் இந்த அராஜகங்களுக்கு உடனடியாக முடிவுகட்ட வேண்டும் என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் கருத்து தெரிவித்துள்ளார். இதேபோல், புலிகளின் காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் ஏனைய முன்னாள் போராளிகளின் பாதுகாப்புக்கு இருக்கும் உத்தரவாதம் தான் என்ன என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 2015ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த ஜனாதிபதி தனது உரையின் போது முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் சுதந்திரமாக வாழ்க்கை நடத்துவதாக கூறினார். ஆனால், தற்போது முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஏனைய போராளிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாது போயுள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் மீண்டும் கைது செய்யப்படுகின்றனர். தேர்தல் ஒன்று நெருங்குவதன் காரணத்தினால் மீண்டும் புலிகள் உருவெடுத்திருப்பதாக கூறுவதற்கான உத்தியாக இந்த சம்பவம் இருப்பதாகவே தெரிகின்றது என்றும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. சபையில் விசனம் தெரிவித்திருக்கின்றார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன், நகுலேஸ்வரனின் படுகொலையால் முன்னாள் போராளிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், மற்றும் தமிழ் தேசியப் பற்றாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் இடம் பெற்றபோதும் அதன் பின்னரும் முன்னாள் புலிப் போராளிகள் மற்றும் புலிகள் அமைப்பின் காவல்துறை, நீதித்துறையில் பணியாற்றியவர்களும் படையினரால் கைது செய்யப்பட்டனர். பெருமளவானோர் படையினரிடம் சரணடைந்திருந்தனர். இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த முன்னாள் போராளிகளை சரணடையுமாறு படைத்தரப்பினர் அறிவித்திருந்தனர். இதனை அடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் சரணடைந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டோர் மற்றும் சரணடைந்தோரில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புனர்வாழ்வு முகாம்களில் அடைக்கப்பட்டு அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டது. இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தொடர்ந்தும் மார்தட்டி வருகின்றது. இவ்வாறான நிலையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றனர். புனர்வாழ்வின் பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்ட போதிலும், அவர்கள் தொடர்ந்தும் படைத்தரப்பினரால் கண்காணிக்கப்பட்டே வருகின்றனர். அவர்கள் மீது சந்தேகக் கண்கொண்டே பார்க்கப்படுகின்றது. புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முடியாமல் பெரும் திண்டாட்டங்களை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் தொழில்தருனர்கள் அஞ்சுகின்றனர். இதனால் உரிய வேலைவாய்ப்புக்கள் இன்றி வருமானம் இன்றி இவர்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். இவ்வாறான கஷ்டம் ஒருபக்கம், படைத்தரப்பினரின் சந்தேகப்பார்வை மறுபக்கம் என இவர்கள் சொல்லொண்ணாத்துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறான நிலையில் முன்னாள் போராளியான நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை புனர்வாழ்வு பெற்ற போராளிகள் அனைவர் மத்தியிலும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளரான நகுலேஸ்வரன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்தும் விசாரிக்கப்படவேண்டும். விசாரித்து குற்றமிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதன் மூலமே முன்னாள் போராளிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை ஓரளவிற்கேனும் போக்க முடியும். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய வகையில் உள்ளக விசாரணை நடத்தப்படாமையினாலேயே சர்வதேச விசாரணை ஒன்று இடம் பெறுவதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவானது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இவ்வாறு சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெறக்கூடிய விசாரணைகள் இடம்பெறாமையினாலேயே இன்று ஐ.நா. விசாரணை நடைபெற்று வருகின்றது. இவ்வாறான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இலங்கையில் மீண்டும் முன்னாள் போராளிகளை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படுவதென்பது பாரதூரமான விடயமேயாகும். இதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் உணர்வுகளை மழுங்கடிப்பதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றதோ என்ற சந்தேகமும் தற்போது எழுகின்றது. நாட்டில் இத்தகைய வன்முறைகள் தொடருமானால் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழல் சீர்கெடும் நிலையே ஏற்படும். அத்துடன் தமிழ், சிங்கள மக்களிடையே ஏற்பட்டு வரும் புரிந்துணர்வுக்கும் இவ்வாறான செயற்பாடுகள் பாரதூரமான பின்னடைவை ஏற்படுத்திவிடும். எனவே, இத்தகைய சம்பவங்கள் இனிமேலும் இடம்பெற அனுமதிக்கக் கூடாது. இந்த துப்பாக்கிச் சூட்டின் மூலம் முன்னாள் போராளிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை களைவதற்கு துரிதகதியில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.