ஆட்சியிலுள்ள அரசால் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்காது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்த சூழலில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கம் தோல்விகண்டுள்ளது. இந்நிலையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரம் உட்கட்டமைப்பு என்பன மீளவும் கட்டியெழுப்பப்படாது அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் அனைத்து நிர்வாகக் கட்டமைப்புக்களும் சுயாதீனமாக செயற்படமுடியாத நிலைமை உருப்பெற்று குடும்ப ஆட்சியொன்று நடைபெறுவதற்கு வழிசமைத்துள்ளது. இத்தகைய கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். அதாவது நிறைவேற்று அதிகாரம் முற்றாக ஒழிக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படுவதுடன் நிர்வாக ரீதியான சுயாதீனமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தமிழ்த்தரப்பைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் வேறுபட்ட தலைமைகளில் கீழ் மாறுபட்ட அனுபவங்களைக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே தமிழ்ர்கள் தொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசாங்கங்களில் ஒட்டுண்ணித் தாவரங்கள் போன்று இருக்க வேண்டும் என்ற கருதுநிலையை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதனால் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்காது என்ற அரசியல் யாதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.