ஐ.நா விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையளாரையும், அவரது அலுவலகத்தையும் தொடர்ச்சியாக மோசமாக சாடிவரும் இலங்கை அரசின் நடவடிக்கைகளால் இலங்கை கூடிய விரைவில் சர்வதேச சமூகத்தினால் ஒதுக்கிவைக்கப்படலாம் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் நடைபெற்ற ஐ.நா வின் 69 ஆவது பொதுச் சபையின் சமூக, மனிதாபிமான மற்றும் கலாசாரத்திற்கான மூன்றாவது குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு இலங்கை சார்பில் உரையாற்றிய ஐ.நா வுக்கான இலங்கையின் பிரதிநிதி கலாநிதி பாலித்த கோஹன்ன ஐ.நா மனித உரிமைகள் பேரவையும், ஆணையரும் முழுமையாக அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையிலேயே மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் இலங்கை சர்வதேச சமூகத்தினால் முழுமையாக ஓரங்கட்டப்பட்டு ஒதுக்கிவைக்கப்படலாம் என எச்சரித்துள்ளனர்.

பாக்கியசோதி சரவணமுத்து

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது நிகழ்ந்த போர் குற்றங்கள் உட்பட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவிற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதையே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சையத் ராத் அல் உசைன் விரும்புவதாகவும், இதனையே அவர் வலியுறுத்திவருவதாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கூறுகின்றார்.

இதனையடுத்து இலங்கை அரசு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையயும்இ ஆணையாளரையும் கடும் வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு குற்றம்சாட்டி வருவது இலங்கைக்கே ஆபத்தாக முடியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச அரசியல் நிலமைகளை புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள சரவணமுத்து, அநாவசியத் தாக்குதல் சிறந்த பாதுகாப்பாக ஒருபோதும் அமையாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெஹான் பெரேரா

முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளை தமிழர் என்பதால் அவர், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாக குற்றம்சாட்டி வந்த இலங்கை அரசு அவர் பவியிலிருந்து விலகியதை அடுத்து நிலமை தமக்கு சாதகமாக அமைந்துவிடும் என்று கருதியது. ஆனால் புதிய ஆணையாளர் முன்னைய ஆணையாளரைவிட மிகயும் கடுமையானவராக இருக்கின்றார் என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை அரசு கடும் வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை தாக்கி அறிக்கை வெளியிடுவதை நிறுத்தி நிலமையை மோசமாக்கிக்கொள்வதை நிறுத்தி ஐ.நா வுடன் ஒத்துழைத்து செயற்பட முன்வர வேண்டும்.

அதனை விடுத்து தொடர்ந்தும் இலங்கை அரசு ஐ.நா கட்டமைப்பை கடுமையாக விமர்சித்து மட்டம் தட்ட முற்பட்டால் இலங்கையையே சர்வதேச சமூகம் ஒதுக்கி வைக்க முற்படும். அதேவேளை ஐ.நா வும் அதன் உறுப்பு நாடுகளும் இலங்கைக்கு எதிராக திரும்பிவிடும். இதுதான் யதார்த்தம். இதனை இலங்கை அரசு புரிந்து செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சர்வதேச சமூகம் இலங்கையை தனிமைப்படுத்திவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜே.சி.வெலியமுன

ஐ.நா மீது கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் நாட்டையும், நாட்டின் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு செயற்படுவதாக அமையவில்லை என மனித உரிமைகள் மற்றும் அரசியல் யாப்பு குறித்த சட்டநிபுணர் ஜே.சி.வெலியமுன குற்றம்சாட்டியுள்ளார்.

ஆரம்பத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச போன்றோரை பயன்படுத்தி ஐ.நா மீது குற்றம்சாட்டிய இலங்கை அரசாங்கம் அண்மைக்காலமாக நேரடியாகவே ஐ.நா மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளது.

இதன் ஊடாக உள்நாட்டில் தனது அரசியலை பலப்படுத்திக்கொள்ள இலங்கை அரசாங்கம் முயல்கின்றது. ஆனால் இதன் பிரதிபலன்கள் எதிர்காலத்தில் நாட்டை மிகவும் மோசமாக பாதிக்கும். இதனை தற்போதுள்ள ஆட்சியாளர்களை பொருட்படுத்துவதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

சுனில் ஜயசேகர

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கைக்கு இருக்கும் நன்மதிப்பையே பாதிக்கும் என்று சுதந்திர ஊடக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுனில் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்திற்குப் பின்னர் ஒரு சில சந்தர்ப்பங்களிலேயே இலங்கை தனது நற்பெயரை சர்வதேச அரங்கில் உறுதிபடுத்திக்கொண்டதாக கூறும் அவர், அண்மைக்காலமாக மேற்குலக நாடுகள் உட்பட சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை நற்பெயரை இழந்து நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிராந்திய நாடுகள்இ மத்திய கிழக்கு நாடுகள் மத்தியிலும் இலங்கைக்கு அவப்பெயரே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு இந்த நாடுகளுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாடுகளை தற்போதைய அரசாங்கம் முழுமையாக மீறியூள்ளமையே காரணம் என்றும் அவர் கூறுகின்றார்.
இதனைவிட சர்வதேச சமூகத்துடன் மிகவும் மட்டமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி பிரச்சினைகளை கையாள முனைவதும் இதற்கு பிரதான காரணம் என்றும் சுனில் ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.