அந்த நேரம்தான் அந்த முகாமில் அறுவடை செய்யப்பட்டிருந்த உழுந்து மூட்டைமூட்டையாக இருந்தது.

அத்தனையையும் விட்டுவிட்டு எப்படி செல்வது என்று மற்றவர்கள் கேட்டபோது தலைவர் சொன்னார் ‘பொருட்கள் பிறகும் வாங்கலாம்,ஆனால் உங்களில் யாரையும் இழக்க நான் தயாரில்லை’ என்று.

எல்லோரும் புறப்பட்டு சென்று ஒரு கிழமைக்குள் அரசாங்க பத்திரிகை தினகரனில் அந்த முகாம் சிங்கள பொலீஸ்படையால் பிடிக்கப்பட்டு அதில் இருந்த உழுந்துமூட்டைகள் எடுக்கப்படடதான செய்தி வெளிவந்திருந்தது.

இப்போது இதனை நினைத்து பார்த்தாலும் ஆச்சர்யமே மேலெழும்புகிறது. எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்த ஒரு தகவல் அவருக்கு மட்டுமே விடுதலைக்கான ஏதோ ஒன்றாக இருக்கிறது.

இந்த நுண்ணுனர்வு என்பது அவரது ஆழமான இலட்சிய தாகத்தில் இருந்தே உதயமாவதாக நான் நினைக்கிறேன்.முழுமையான ஈடுபாடு ஒருவிடயத்தில் இருந்தால் இயல்பாகவே அந்த விடயம் சம்பந்தமான உள்ளுணர்வுகள் வந்து விடும் என்பது விஞ்ஞான முடிபு.

இன்னொருமுறை பொலிகண்டி புதியகுடியேற்றத்தின் வீடுகளில் ஒன்றில் 83பெப்ரவரியில் தங்கி இருந்தபோது எல்லோரும் தூங்கி கொண்டிருந்த நேரம்.தலைவரும் தூங்கித்தான் இருந்தார்.

ஆனால் திடீரென எல்லோரையும் எழுப்பி ஒரு வெகுதூரத்தில் ஒரு வாகன சத்தம் வித்தியாசமாக இருப்பதை சொன்னார்.அந்த வீதி வாகனங்கள் அடிக்கடி செல்லும் வீதி என்பதால் மற்றவர்கள் அது சாதாரண வாகனம் என்றே சொல்லி மீண்டும் தூங்க எத்தனித்தனர்.

ஆனால் தலைவரோ ‘ இல்லை அந்த வாகனம் இந்த குடியேற்றத்துக்கு வரும் வழியில் நிற்கிறது’ என்று உறுதியாக சொல்லி இரண்டு போராளிகளை உடனே போய் என்ன என்று பார்த்து வரும்படி சொன்னார்.

போராளிகள் அங்கு சென்றபோது ‘ஒரு  ஹையஸ் ரக வான் ஒன்று தலைவர் சொன்ன இடத்தில் நின்றிருந்தது. அது மண்ணுக்குள் புதைந்து நின்றதால் வாகனஓட்டி இன்ஜினை ரேஸ் பண்ணி கொண்டிருந்தார்.

போராளிகளுக்கு தெரிந்த வாகன ஓட்டி என்பதால் அது ஆபத்தான வாகனம் இல்லை என்று திரும்பி வந்தனர்.

மறுநாள் தலைவரிடம் அது எப்படி அத்தனை உறுதியாக அந்த இடத்தில்தான் வாகனம் நிற்கிறது என்று எப்படி இங்கிருந்தே சொன்னீங்கள் என்று கேட்டபோது ‘நேற்று இந்த இடத்துக்கு வரும்போது கவனித்தேன்.

அந்த இடத்தில் பாதையை மூடி மணல் கிடந்தது. அதில் ஏதோ ஒரு வாகனம் புதைந்து நிற்கிறது என்பதை கணித்தேன்’ என்றார்.

எல்லோருக்கும் அது வீதி.தலைவர் அதனையும் எவ்வளவு நுணுக்கமாக கவனித்து இருக்கிறார் என்று அதிசயமாக இருந்தது.

அமைப்பு, அதன் கட்டுபாடுகள், நடைமுறை என்பனவற்றில் கண்டிப்பானவராக இருக்கும் அதே மனிதனது இன்னொரு பக்கம் ஈரம் நிறைந்தது. கிட்டு ஒருமுறை பேட்டியில் சொன்னதுபோல ‘ இளகிய மனம் படைத்தவர்களே மற்றவர்களுக்கு நடக்கும் கொடுமைகள், அநீதிகளை கண்டு பொறுக்க முடியாமல் போராட வருகிறார்கள்.

போராளிகள் இளகிய மனம் கொண்டவர்கள்’ என்று சொன்னது போல தலைவரின் இன்னொரு பக்கம் முழுக்க முழுக்க பாசமும், அன்பும், அரவணைப்பும், நேசிப்பும் நிறைந்தவை.

ஆரம்பநாட்களில் காடுகளில் யாருக்கும் மலேரியா,அல்லது வேறு காய்ச்சல் வந்துவிட்டால் தலைவரே அருகில் இருந்து கவனிக்கும் காட்சிகள் இன்னும் மனதுள் நிற்கிறது.

‘மகனுக்கு என்ன செய்யுது’ மகன் இதை குடி’ ‘இந்த போர்வையை போர்த்து ‘ என்று இருக்கின்ற அற்ப வசதிகளுள் நல்லதை தரும் அந்த மனிதன் எல்லோரையும்விட மிகச்சிறந்த தந்தை போன்றவர். வீடுகளை துறந்து தன்னிடம் வரும் இவர்களுக்கு தானே ஒரு தாயாக தந்தையாக நிற்கவேணும் என்பதே அவரது நடைமுறை.

வெறுமனே ஆயுதங்களை இயக்குவதற்கு மட்டும் சொல்லித் தந்தவர் அல்ல அவர்.மிகச்சிறந்த இலக்கியங்களை படிக்க கொண்டுவந்து தந்தவர்.லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் போன்ற உலக இலக்கியங்கள் முதற்கொண்டு மைக்கல்கோலின்ஸ் போன்ற விடுதலை வரலாறுகள் வரைக்கும் படிக்க சொல்லி பிறகு அதில் கேள்வியும் கேட்பார்.

தான் தவறவிட்ட ஆங்கிலமொழிக்கல்வியை கற்கவேணும் என்பதற்காக உடுப்பிட்டி அரியம் மாஸ்ரரிடம் கிட்டுவையும் எம்மையும் ரியூசனுக்கு அனுப்பியவர் அவர்.

இவை எல்லாவற்றினும் இன்னுமொரு அவரது ஆளுமை மீண்டும் மீண்டும் சொல்லத்தக்கது.எல்லாவற்றிலும் முக்கியமானது அவர் முடிவெடுப்பது என்பது ஒரு தனிமனித முடிவாக ஒருபோதும் இருந்தது இல்லை..எல்லோருடனும் கூடி கதைத்தே முடிவுகளை எடுக்கும் பண்பு நிறைந்தவர்.

.உதாரணத்துக்கு ஒரு சம்பவம்,83ம் ஆண்டு மேமாதம் யாழ். குடாவின் மூன்று நகரசபைகளுக்கும், யாழ். மாநகரசபைக்கும் தேர்தல் நடாத்தப் போவதாக சிங்கள தேசம் அறிவித்ததும் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கருத்துகள் அப்போதிருந்த போராளிகளிடம் கதைத்தே எடுக்கப்பட்டது என்பது பலருக்கும் வெளித்தெரியாத உண்மை.

அந்த தேர்தலை நிராகரிக்கும்படி,வாக்களிப்பை புறக்கணிக்கும்படி மக்களை கோருவது என்று மக்களிடம் கோரவேண்டும் என்ற தலைவரின் கருத்து பலமணி நேரம் பல உறுப்பினர்களால் விவாதத்துக்கும் உட்படுத்தப்பட்டது.

நாமோ 28பேர். முப்படைகளினதும் பொலீஸ்படையினதும் உதவியுடன் தேர்தலை நடாத்த சிங்களம் தேசம் முற்பட்டால் எவ்வாறு நாம் வெல்லமுடியும் என்ற அவநம்பிக்கை குரல்கள் எழுந்தன.

மக்கள் எமது கோரிக்கையை நிராகரித்து தேர்தலில் வாக்களித்தால் சிங்களதேசம் அதனை வைத்து போராளிகளை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பிரச்சாரம் செய்யும்.அது அமைப்பை அழிவுக்கு கொண்டு சென்று விடும் என்று சில உறுப்பினர்கள் தயக்கத்துடன் கதைத்தனர்.

நாம் பலமான பின்னர் இத்தகைய முயற்சிகளை செய்யலாம் என்று கருத்து தெரிவித்தனர்.

தலைவர் மிக ஆறுதலாக மிகமிக தெளிவாக விளக்கம் கொடுத்தார்.மறுநாள்கூட நீண்டது அந்த விவாதம். அப்போது தலைவர் சொன்ன ஒருவிடயம் ‘ அவன் எல்லா படையையும் வைத்திருக்கிறான் என்று பயந்து கொண்டிருந்தால் எங்களால் ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விடும்.

நாம் எமது மக்களை நம்பி இறங்குவோம். இருக்கின்ற எல்லா போராளிகளும் இருபத்துநான்கு மணிநேரமும் இதனை மட்டுமே இலக்காக வைத்து வேலை செய்தால் இது முடியும் ‘ என்றார்.

இறுதியில் எல்லோரது சம்மதத்துடன் தலைவரது கருத்தே ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் நிராகரிப்புக்கு மக்களை கோருவது என்று தீர்மானிக்கப்பட்டது.சிங்களஅரச இயந்திரத்துக்கான அனைத்து தேர்தல்களையும் நிராகரிப்போம் என்ற தலைப்புடன் மறுநாளே துண்டுப்பிரசுரம் எம்மால் வெளியிடப்பட்டது.

தொடர்ச்சியான வேலைகளை தலைவரே முன்னின்று செய்தார். செய்வித்தார்.

83மே 18ம்திகதி தேர்தல் முடிவு வந்தபோது 94 வீதமான மக்கள் எம் கோரிக்கையை ஏற்று தேர்தலை நிராகரித்திருந்தனர். நாம் எல்லோரும் வெற்றி குதூகலிப்பில் இருந்த போது தலைவர் அடுத்த கட்டத்துக்கான வேலையில் இருந்தார்.

இன்றும் தலைவர் சொன்ன அதே வசனம்தான் இந்த இனத்துக்கு மிக முக்கியமாக தேவைப்படுகிறது.

‘இலக்கை நிர்ணயித்து அர்ப்பண உணர்வோடு வேலை செய்தால் எந்த படைபலத்தையும் வெல்லலாம்’ அறுபது அகவை காணும் அந்த அதிமானுடன் எமக்கு நேற்றும் இன்றும் இனி என்றும் வழிகாட்டியாக முன் செல்வார்.

அதுவே இந்த இனத்தின் விடுதலைக்கான பாதை. அவரே இந்த இனத்தின் பேரொளி

ச.ச.முத்த
ilamparavai@hotmail.com