உலகில் உள்ள ஒவ்வொரு இனங்களும் வரலாற்றின் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொற்காலத்தைத் தரிசித்தவைதான். தமக்கான அரசு இன்றி உலகெங்கும் இன்று அலைந்து உழலும் இனங்களாக இருந்தாலும்சரி, தமக்கான அரசைக் கொண்டுள்ள இனங்களாக இருந்தாலும்சரி இவையெல்லாம் ஏதோவொரு காலகட்டத்தில் தமது பிராந்தியத்திலோ அல்லது உலக அளவிலோ பேரரசுகளாகத் திகழ்ந்தவையே. இவ்வாறான நிலையை இவ் இனங்கள் எய்தியமை என்பது தற்செயலாக நிகழ்ந்தவையன்று. இந்நிகழ்வுகளிற்கு ஆதர்சமாக இவ் இனங்களிலிருந்து தோற்றம் பெற்ற புகழ்பூத்த தலைவர்களே காரணமாக இருந்துள்ளார்கள்.

தமிழர்களின் வரலாறும் இவ்வாறான ஒன்றுதான். வீரம் என்பது பண்டைத் தமிழர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்திருந்தது. பண்டைத் தமிழர்களின் வீரத்திற்கு சான்றாகத் திகழ்வது புறநானூறு. அதில் மிளிரும் வீரம்செறிந்த தமிழ் மன்னர்களில் முதன்மையானவன் கரிகாற்பெருவளவன் என்ற சோழப் பேரரசன். தமிழகத்தையும், ஈழத்தீவு முழுவதையும் ஆட்சி செய்த இம்மன்னன், இமயத்திலும் புலிக்கொடி நாட்டிய பெருமைக்குரியவன். இற்றைக்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்கூறும் நல்லுலகை ஆட்சி செய்த இம்மன்னனின் காலம் பண்டைத் தமிழர் வரலாற்றில் பொற்காலமாகக் கணிக்கப்படுகின்றது.

கரிகாற்பெருவளனுக்குப் பின்னர் தமிழர்களின் வரலாற்றில் பொற்காலத் தரிசனத்தைக் கொண்டு வந்தவர்கள் இருவர். ஒருவர் இராசராச சோழன். மற்றையவர் அவரது புதல்வனான இராசேந்திர சோழன். இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்கூறும் நல்லுலகை ஆட்சி செய்த இவர்கள் வரலாற்றின் பொன்னேடுகளில் பதியப்பட்டுள்ளனர்.

இதில் குறிப்பாக இராசேந்திர சோழனின் ஆட்சி என்பது முழுத் தமிழகத்தையும், ஈழத்தீவையும் மட்டும் உள்ளடக்கவில்லை. கடல்கடந்து தென்மேற்கே மாலைதீவு, லக்~தீவு ஆகியவற்றையும், தென்கிழக்கே அந்தமான்-நிக்கோபார் தீவுகளையும், வடகிழக்கே கலிங்கம், வங்கதேசம் (பங்களாதே~;), இன்றைய பீகார் மாநிலம், பர்மாவின் கடலோரப் பகுதி, சுமேத்திரா, ஜாவா, மலாயக் குடாப் பகுதி ஆகியவற்றையும் உள்ளடக்கியிருந்தது. அத்தோடு இம்மன்னனிற்கு திறைசெலுத்தும் நாடுகளாக தாய்லாந்து, கம்போடியா ஆகிய தேசங்களும் திகழ்ந்தன.

இவ்வாறு தமிழர்களின் வரலாற்றில் பொற்காலத் தரிசனத்தைக் கொண்டு வந்த பெருமை இம்மூன்று மன்னர்களுக்கு இருந்தாலும், இவர்களின் காலத்தில் அடக்குமுறைத் தளைகளிலிருந்து தமிழர்கள் விடுபட்டதாக நாம் கூற முடியாது. இவர்களின் காலத்தில் பெண்ணடக்குமுறையும், சாதிய அடக்குமுறையும் தாரளமாகவே தலைவிரித்தாடின. தொலைதூர அந்நிய தேசங்கள் மீது படையெடுத்துத் தமிழர்களின் படைவலிமையையும், வீரத்தையும் வரலாற்றின் பொன்னேடுகளில் இவர்கள் பதிவு செய்தாலும்கூட, தமிழ்ப் பெண்ணினமும், தமிழ்ச் சமூகத்தின் ஆணிவேராகத் திகழ்ந்த உழைக்கும் மக்களும் இவர்களின் சாதனைகளால் பயன்பெற்றார்கள் என்று நாம் கூற முடியாது.

ஆனாலும் வரலாறு என்பது எப்பொழுதும் தவறுகளை மட்டும் செய்து கொண்டிருப்பதில்லை. தனது தவறுகளை சீர்செய்யும் வகையில் புதுமைகளைப் பிரசவிக்கும் ஆற்றலும் வரலாற்றிற்கு உண்டு. அவ்வாறு வரலாறு பிரசவித்த புதுமையான தமிழ்மகன்தான் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். பண்டைக் காலத்திலும், இடைக்காலத்திலும் பொற்கால தரிசனத்தைத் தமிழர்கள் எதிர்கொண்ட பொழுது நிகழ்ந்த வரலாற்றுத் தவறுகளை சீர்செய்யும் ஒருவராகத் தமிழ்கூறும் நல்லுலகில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிரவேசித்தார்.

புறநானூற்றையும், ஏனைய சங்க கால இலக்கியங்களையும், இடைக்காலச் சோழ மன்னர்களின் வரலாற்றையும் படித்துத் தமது மூதாதையர்களின் வீரத்தை மெச்சிப் பெருமூச்செறிவதைத் தவிர வேறெதனையும் செய்ய முடியாது கூனிக்குறுகி நின்ற தமிழர்களுக்கு வீரத்தின் நவகால வடிவத்;தைத் தமிழீழத் தேசியத் தலைவர் காண்பித்தார். தலைமறைவு கெரில்லா இயக்கமாகத் தமிழ்த் தேசிய ஆயுத எதிர்ப்பியத்தைத் தோற்றுவித்த தலைவர் அவர்கள், தொடர்ந்து அவ் எதிர்ப்பியக்கத்தை நவீன மரபுவழிப் படையமைப்பாகக் கட்டியெழுப்பினார்.

ஆனால் வீரத்தின் நவகால வடிவத்தைத் தமிழினத்திற்குக் காண்பிப்பதோடு மட்டும் தலைவர் அவர்கள் நின்றிருந்தால் கரிகாற்பெருவளவன், இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் வரிசையில் பொற்கால தரிசனத்தைத் தமிழர்களுக்கு அளித்த ஒருவராக மட்டும் அவரை வரலாறு பதிவு செய்திருக்கும். மாறாகத் தமிழ்த் தேசிய ஆன்மாவை ஒவ்வொரு தமிழர்களின் இதயங்களிலும் தட்டியெழுப்பி, சமூகக் களத்தில் பெண்ணடிமைத்தனத்திற்கும், சாதிய ஒடுக்குமுறைக்கும் எதிராகப் போர்தொடுத்து, நீதியான முறையில் இயங்கக்கூடிய தமிழீழ நடைமுறை அரசை நிர்வகித்தவர் என்ற வகையில் அவரைத் தமிழினத்தின் பெருந்தலைவராகவே நவகால வரலாறு பதிவு செய்திருக்கின்றது.

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் தலைமையில் தமிழரசுக் கட்சி இயங்கிய காலப்பகுதியாகிய 1961ஆம் ஆண்டு சிங்கள-பௌத்த மேலாதிக்கத்திற்கு எதிராக வெடித்தெழுந்த அறவழிக் கிளர்ச்சி ஈழத்தீவின் வரலாற்றில் தமிழ்த் தேசிய இனம் சந்தித்த முதலாவது எழுச்சியாக அமைந்தது என்பதும், அதனைத் தொடர்ந்து தமிழீழத் தனியரசுக்கு மக்களாணை வேண்டி 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும், அதனைத் தொடர்ந்து மறுஆண்டு தேர்தல் களத்தில் அவ்வாணைக்குத் தமிழ் மக்கள் அங்கீகாரம் அளித்ததும் தமிழீழ தேசம் எழுச்சி கொண்ட முக்கிய காலகட்டங்கள் என்பதும் உண்மையே.

ஆனால் இக்காலகட்டங்களில் ஏற்பட்ட எழுச்சியை விடத் தமிழீழத் தேசியத் தலைவரின் முழுமையான நேரடி வழிநடத்தலில் தமிழீழ தேசம் எழுச்சி கொண்ட காலகட்டங்கள் வீரியம் மிக்கவை: தனித்துவமானவை.

04.08.1987 அன்று சுதுமலையில் மக்கள் மத்தியில் முதற்தடவையாகத் தோன்றி உரைநிகழ்த்தியதிலிருந்து, 27.11.2008 அன்று நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி உலகத் தமிழர்கள் மத்தியில் ஆற்றிய மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரை வரை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் ஆற்றிய ஒவ்வொரு உரைகளும் தமிழினத்தை வீறுகொண்டெழ வைக்கும் சக்தி மிக்கவையாக இருந்தன.

நவகாலத் தமிழினத்தின் வரலாற்றில் தலைவர் பிரபாகரன் அவர்களைத் தவிர வேறெந்தத் தலைவரின் பின்னாலும் ஒரேகுடையின் கீழ் தமிழினம் அணிதிரண்டு நின்றதில்லை. தலைவர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட பலரைத் தமிழினம் சந்தித்திருக்கின்றது. இன்றும் தலைவர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலரைத் தமிழினம் சந்திக்கின்றது. ஆனால் இவர்கள் எவராலும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் முடிதரித்த உச்சியை எட்ட முடியவில்லை.

இதற்குப் பல காரணங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றை விபரித்துக் கூறுவதற்கு இந்தப் பத்தியில் இடம் போதாது. ஆனாலும் தலைவர் அவர்களின் சிறப்புக்கான மூன்று முக்கிய காரணங்களை இவ்விடத்தில் சற்று விபரித்துக் கூறுவது பொருத்தமானது.

முதலாவதாக ஒரு தலைவனாகத் தனக்குத் தானே முடிசூடிநின்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தலைவர் பிரபாகரன் அவர்கள் முன்னெடுக்கவில்லை. மாறாக, மக்களின் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் போராடும் ஒரு போராளியாகத் தன்னைக் கருதியவாறு தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைவர் தலைமையேற்றார். ‘நீங்கள் முன்னே செல்லுங்கள். நான் பின்னால் வருகின்றேன்’ என்று ஒவ்வொரு தடவையும் இறுதியாகக் கரும்புலிகளைச் சந்திக்கும் பொழுது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கூறும் வார்த்தைகள் அவரது தன்னலமற்ற தலைமைப் பாங்கிற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

அடுத்ததாகத் தலைவர் அவர்கள் வரித்துக் கொண்ட புரட்சிகர சிந்தனை. தமிழீழ விடுதலை என்பது வெறுமனே தனியரசை அமைப்பது என்று குறுகிய சிந்தனையுடன் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் முன்னெடுக்கவில்லை. மாறாக தமிழீழ விடுதலை என்பது தேச விடுதலை, சமூக விடுதலை என்ற இரண்டு பரிமாணங்களைக் கொண்டது என்ற தெளிவான பார்வை தலைவர் அவர்களுக்கு இருந்தது. தேச விடுதலை எனும் பொழுது அது சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்தும், ஆதிக்கத்திலிருந்தும் தமிழீழ நிலப்பகுதிகளையும், மக்களையும் விடுவிப்பதைக் குறிக்கும். அதேபோன்று சமூக விடுதலை என்பது தமிழீழ சமூகத்தில் தமிழர்களே தமிழர்களை அடக்கியொடுக்கும் சகல விதமான அடக்குமுறைகளையும் இல்லாதொழிப்பதைக் குறிக்கும்.

இது பற்றி அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு 08.03.1991 அன்று வெளியிடப்பட்ட தனது அதிகாரபூர்வ அறிக்கையில் பின்வருமாறு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்:

‘‘நாம் ஒடுக்கப்பட்டு வரும் ஒரு மக்கள் இனம். அந்நியனின் அடக்குமுறையால் நாம் அழிக்கப்பட்டு வந்தபோதும், எமக்குள்ளே, எமது சமூக வாழ்வில் நாம் எம்மவர்களை மோசமான முறையில் அடக்கியொடுக்கி வருகிறோம். இப்படியாக எம் மத்தியில் நிலவி வரும் ஓர் ஒடுக்குமுறை வடிவம்தான் பெண் ஒடுக்குமுறை. பழமைவாதத்தில், மூடநம்பிக்கைகளில் ஊறிப்போன எமது சமூக அமைப்பில் நீண்ட நெடுங்காலமாகப் பெண்ணினம் ஒடுக்கப்பட்டு வருகிறது. எமது வேதாந்தங்களும், மனுநீதி சாஸ்திரங்களும் அந்தக் காலந்தொட்டே பெண் அடிமைத்தனத்தை நியாயப்படுத்தி வந்திருக்கின்றன. ஆணாதிக்கம், சாதியம், சீதனம் என்று பல்வேறு பரிமாணங்களில் இந்த ஒடுக்குமுறையானது பெண்களின் வாழ்க்கையை ஊடுருவி நிற்கிறது. அவர்களது வாழ்க்கையைச் சிதைத்து வருகிறது.

…நாம் ஒன்றுபட்ட மக்களாக, ஒரே தேசிய சக்தியாக அணிதிரண்டு எமது எதிரியின் சவாலை எதிர்கொள்ள வேண்டும். மலைபோல உறுதியுடன் நாம் ஒன்றுகுவிந்து நின்றால் எம்மை எத்தகைய சக்தியாலும் அழித்துவிட முடியாது.

இந்த ஒற்றுமையையும், இன ஒருமைப்பாட்டையும் ஒரு வலுவான அத்திவாரத்தில் கட்டி எழுப்புவதென்றால் எம் மத்தியில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டும். சமூக முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும். சமூக அநீதிகள் அழிக்கப்பட வேண்டும்.’’

இவ்விடயம் தொடர்பாக 1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘சண்டே’ சஞ்சிகைக்கு வழங்கிய தனது முதலாவது ஊடகச் செவ்வியிலும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அச்செவ்வியின் பொழுது எதிர்காலத்தில் மலரும் தமிழீழம் எவ்வாறான நாடாக அமையும் என்று அனித்தா பிரதாப் அவர்கள் வினவிய பொழுது அதற்குப் பதிலளித்த தமிழீழ தேசியத் தலைவர்: ‘‘தமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப்பெறும். சோசலிசம் என்பதன் மூலம் சமத்துவமான சமூக அமைப்பை நான் கருதுகிறேன். இதில் மனித சுதந்திரத்திற்கும், தனிநபர் உரிமைகளுக்கு உத்தரவாதமுண்டு. எல்லாவிதமான ஒடுக்குமுறையும், சுரண்டலும் ஒழிக்கப்பட்ட மக்களின் உண்மையான ஜனநாயகமாக அது திகழும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு தமிழீழ விடுதலை பற்றிய புரட்சிகரமான சிந்தனையைக் கொண்டிருந்த தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலம் பற்றிய தீர்க்கதரிசனமான பார்வையையும் கொண்டிருந்தார். இதுபற்றி 1985ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் ‘சண்டே’ சஞ்சிகைக்கு வழங்கிய பிறிதொரு செவ்வியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் நீண்ட காலத்திற்கு இழுபட்டுச் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றி வினவப்பட்ட பொழுது அதற்குப் பதிலித்த தலைவர் அவர்கள்: ‘‘எமது வாழ்நாளிலேயே தமிழீழத்தை அடையலாம் என்ற நம்பிக்கையில் நாம் போராடுகிறோம். எமது விடுதலைப் போராட்டத்தின் பழுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.’’

அன்று இச்செவ்வியைத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வழங்கிய பொழுது அவருக்கு அகவை இருபத்தொன்பது. ஒரு இளைஞனான நின்று தமிழ்த் தேசிய இனத்தின் ஆன்மாவை அன்று வீறுகொண்டெழ வைத்த தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு இப்பொழுது அகவை அறுபது. அன்று 1980களில் தம்பியாக நின்ற தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் 1990களில் அண்ணனாகப் பரிணமித்தார். சக போராளிகள் பலர் அவரை அண்ணா என்று அழைக்கத் தொடங்கினார்கள். ஆனால் 2006ஆம் ஆண்டு நான்காம் கட்ட ஈழப்போர் வெடித்த பொழுது இதில் இன்னுமொரு மாற்றம் ஏற்பட்டது. அன்று விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்ட புதிய தலைமுறை அவரை தம்பி என்றோ அண்ணா என்றோ அழைக்கவில்லை. மாறாக ‘அப்பா’ என்று அழைக்கத் தொடங்கியது. தம்பியாகிப் பின்னர் அண்ணனாகப் பரிணமித்த தமிழீழ தேசியத் தலைவர் இன்று அப்பாவாக புதிய தலைமுறையின் இதயங்களில் நிறைந்து நிற்கிறார். இது தமிழீழத்தில் தோற்றம் பெற்றுள்ள புதிய தலைமுறைக்கு மட்டும் பொருத்தமானதன்று: புலம்பெயர் தேசங்களில் உள்ள இளைய தலைமுறையினருக்கும் இது பொருத்தமானது.

இவ்வாறு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தீர்க்கதரிசனம் மிக்க பார்வையும், அவரது புரட்சிகர சிந்தனையும், தன்னலமலற்ற ஒரு போராளிக்குரிய பாங்குமே அவரைத் தமிழினத்திற்குப் பொற்கால தரிசனத்தைத் தந்த வீரத் தலைவன் என்பதற்கு அப்பால் தமிழினத்தின் பெருந்தலைவனாக உயர்த்தி விட்டுள்ளது எனலாம். அந்த வகையில் வரலாறு பிரசவித்த புதுமையாகவே தமிழீழ தேசியத் தலைவர் திகழ்கிறார்.

கலாநிதி சேரமான்

நன்றி: உலகத்தமிழர்