விடுதலைக்காய் விதைந்தவர்களுக்காக யேர்மனியில் நினைவுத்தூபி

தேச விடுதலைக்காய் தம்மை முழுமையாக அர்ப்பணித்து , உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்து தமிழீழ மண்ணேங்கும் நினைவுச் சிலைகளாய் , ஓவியமாய் நின்ற எமது உறவுகளின் உறைவிடம் சிங்கள பேரினவாத அரசால் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் அந்த அற்புத உயிர்களை வணங்க அங்கு ஒரு இடமும் இல்லை .

புலம்பெயர் தேசத்தில் வாழ்ந்தாலும் எமது விடுதலைக்காய் விதைந்தவர்களுக்காக, அவர்களின் உணர்வுகள் , இலட்சியதாகம், கனவுகள் என்பன எம்மால் மறக்கப்பட முடியாதவையும், புனிதத் தன்மை வாய்ந்தவையும் ஆக எமது அடுத்த தலமுறை இந்த வரலாற்று சுவடியை காலம் காலமாக நினைவுகூரும் வகையிலும் யேர்மனியில் எஸ்சன் நகரில் இந் நினைவுத்தூபி நிறுவப்பட்டுள்ளது.

யேர்மனியில் அனைத்து மாநிலங்களிலும் இருந்து வருகை தந்த மக்கள் நினைவுத்தூபியை நோக்கி பேரணியாக சென்று மலர்வளையம் தாங்கி சுடர் ஏற்றி தமது உறவுகளுக்காக வணக்கம் செலுத்தினர் .

பொதுச்சுடரினை தமிழ் மக்களுக்காக நீண்ட காலமாக உறுதுணையாக செயற்படும் மதிப்புக்குரிய மதகுரு ஆல்பேர்ட் கோலண் மற்றும் இந் நினைவுத்தூபியை செதுக்கிய சிற்பி ஸ்சாப் அவர்களும் ஏற்றி வைக்க மண்ணுக்காக தங்கள் இன்னுயிர்களை கொடுத்த உறவுகளின் சகோதரிகள் திரைநீக்கம் செய்து வைத்தனர் . தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தாயகத்தில் அழிக்கப்பட்ட ஒவ்வொரு துயிலும் இல்லங்களின் நினைவாகவும் , முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவாகவும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர் .

தாயக விடுதலைக்காக மகத்தான தியாகங்களைப் புரிந்து தமிழீழ போரிலே தம்முயிர்களை ஈந்த காவிய நாயகர்களையும் மக்களையும் நினைவு கூருகின்ற இத் தூபி அடக்க முடியாத தமிழர் வீரத்தை அடையாளப்படுத்தி நிற்கின்றது .