யாழ். ஊடகவியலாளர்கள் ஐவருக்கு இராணுவத்தினரால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் சமபந்தமாக ஊடகவியலாளர்களினால் கடந்த வருடம் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொடுக்கப்பட்ட முறைப்பாடு இன்று கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்தில் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைக்கு யாழ்.ஊடகவியலாளர்கள் சமுகமளித்திருந்த போதும் மனித உரிமை ஆணைக்குழுவினால் முறைப்பாட்டில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இராணுவத்தினர் சார்பாக இலங்கை இரானுவத் தளபதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் இராணுவத்தினர் சார்பாக எவரும் சமுகமளித்திருக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வலி வடக்கில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயம் என்று அடையாளமிடப்பட்டு முற்கம்பி வேலி போடப்பட்டுள்ள கட்டுவன் பகுதியில் பொதுமக்களுகச்கு சொந்தமான வீடுகள் கடந்த 2013ம் ஆண்டு 10ம் மாதம் 28ம் திகதி இராணுவத்தினரால் கனரக வாகனங்களின் துணையுடன் இராணுவ மனித வலுவைப் பயன்படுத்தி மக்களின் வீடுகள் இடித்து அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது குறிப்பிட்ட பிரதேச மக்களினால் ஊடகங்களிற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் செய்தி சேகரிப்பதற்காக ஊடவவியலாளர்கள் அப்பிரதேசத்திற்கு சென்றிருந்தனர்.

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்களான தர்மலிங்கம் சிர்த்தார்த்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், வடக்கு மாகாணசபையின் ஆளும்கட்சி உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வலி.தெற்கு பிரதேசசபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஸ் உள்ளிட்டவர்கள் சமுகமளித்திருந்தனர்.

இந்தச் சந்தர்பத்தில் மக்களின் வீடுகளை புல்டோசர் வாகனங்களைக் கொண்டு இராணுவத்தினர் இடித்து அழித்துக் கொண்டிருந்தனர். இதனை செய்தியாக அறிக்கையிடும் பணியில் ஈடுபட்டிருந்த யாழ்.உதயன் பத்திரிகையின் புகைப்படச் செய்தியாளர் எஸ்.தர்சன், தினக்குரல் பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளர் எஸ்.நிதர்சன், மற்றும் சக்தி தொலைக்காட்சியின் யாழ்.பிராந்திய செய்தியாளர் வி.கஜீபன் மற்றும் இணையத்தள செய்தியாளர் உட்பட ஐந்து ஊடகவியலாளர்கள் இராணுவத்திரால் முற்றுகையிடப்பட்டனர்.

இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்ட ஊடகவியலாளர்களின் புகைப்படக்கருவிகள் இராணுவப்பாணியில் சோதனையிடப்பட்ட அதேவேளை புகைப்படக்கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டு அதிலிருந்த புகைப்படங்களும் அழிக்கப்ட்டன.

இது மட்டுமின்றி அங்கு பிரசன்னமாகியிருந்த 25 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் முற்றுகைக்குள் வைத்து 515 ஆவது படைப்பிரிவைச்சேர்ந்த உயர் இராணுவ அதிகாரியினால் ஊடகவியலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தலும் விடப்பட்டிருந்தது.

மக்களின் வீடுகள் இடிக்கப்படுவது தொடர்பான புகைப்படங்களோ அல்லது செய்திகளோ நீங்கள் பணிபுரியும் ஊடகங்களில் நாளை அதாவது மறுநாள் பிரசுரமானால் நான் இப்போது மனிதத்தன்மையுடன் பேசிக்கொண்டிருக்க மாட்டேன். எனது இராணுவப்பலத்தை பிரயோகிக்க வேண்டிவரும் என்று ஊடகவியலாளர்களுக்கு கடும்தொனியில் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் மறுநாள் ஊடகங்களில் மிகவும் முக்கியத்துவப் படுத்தபட்பட்டு இச்செய்தி வெளியிடப்பட்டது. இதனால் இராணுவத்தினரால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் எனக்கருதி 2013.10.28 அன்று குறித்த ஐந்து ஊடகவியலாளர்களும் இணைந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்தனர்.

இந்நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பான வழக்கு முதன் முறையாக 2014.12.09 இன்று கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தின் புலன்விசாரணை அதிகாரி என்.எல்.ஏ.ஹலாம் முன்னிலையில் முற்பகல் 11 மணியிலிருந்து ஒரு மணிவரையிலான சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்றன.

இதன்போது மேற்படி முறைப்பாடு தொடர்பான விசாரணை தாமதமானதற்கான காரணத்தை புலன்விசாரணை அதிகாரி முதலில் ஊடகவியலாளர்களுக்கு விளங்கப்படுத்தியிருந்தார்.

மேலும் 2014ம் ஆண்டு 10 ம் மாதம் 24 ம் திகதியே தன்னிடம் மேற்படி முறைப்பாடு தொடர்பாக விசாரணை ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறினார்.

அதுமட்டுமின்றி ஊடகவியலாளர்களினால் இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக ஆணைக்குழுவினால் கடந்த 2013 ம் ஆண்டு 11 ம் மாதம் 7 ம் திகதி எழுத்துமூலம் இராணுவத்தளபதியிடம் விளக்கம் கோரப்பட்டதாகவும் அதற்கு இராணுவத்தளபதியினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடந்த 2013 ம் திகதி 12 ம் மாதம் 23 ம் திகதி பதில் கடிதம் அனுப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இராணுவத்தளபதியினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பட்ட பதில் கடிதத்தில் , ஊடகவியலாளர்களினால் இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மறுக்கப்பட்டுள்ள அதேவேளை ஊடகவியலாளர்கள் அத்துமீறி பலாலி இராணுவ முகாமிற்குள் நுழைய முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் ஊடகவியலாளர்களினால் குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தரப்பு சார்பில் எவரும் விசாரணைக்கு சமுகமளித்திராத நிலையில் ஊடகவியலாளர்களிடம் கேள்வி பதில் முறையில் விசாரணைகளை அதிகாரி மேற்கொண்டிருந்தார் என்பதோடு குறிப்பிட்ட விசாரணை தொடர்பான அறிக்கை சட்டச்செயலாளரிடம் ஒப்படைக்கப்டும் என்றும் அவருடைய ஆலோசனையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்ககைகள் அறியத்தரும் படியும் புலன் விசாரணை அதிகாரி என்.எல்.ஏ.ஹலாம் தெரிவித்தார்.