போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பது குறித்து நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர். சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்று அறியப்பட்ட இடம், இன்று குற்றவாளிகளும், சட்டத்தை மீறுவோரும் மகிழ்ச்சியாக வேட்டையாடும் இடமாக மாறியுள்ளது.

“குற்றச்செயல்களின் வீதம் மிக அதிகமாக உள்ளது. யாழ்.நகரப் பகுதியில் மட்டும், நாளொன்றுக்கு 20 தொடக்கம் 30 வரையிலான மிதிவண்டிகள் திருடப்படுகின்றன.

70 வீதமான உந்துருளிகளுக்கு அனுமதிப்பத்திரம் கிடையாது. பெரும்பாலும், தமிழரல்லாத சிறிலங்கா காவல்துறையினர், இதுகுறித்து கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

சிறைச்சாலையில் இடமின்மையால், நீதிமன்றங்கள் பிணையில் விட்டு விடுகின்றன.” என்று பிரித்தானியக் காவல்துறையில் பணியாற்றிய- யாழ்ப்பாணத்தை வதிவிடமாக கொண்ட, செபஸ்ரியன் நேரு கூறுகிறார்.

இதற்கு உயர்வாக இருக்கும் வேலையின்மையும் ஒரு காரணம் என்கிறார், அபிவிருத்திக்கான பருத்தித்துறை நிறுவகத்தைச் சேர்ந்த கலாநிதி முத்துக்கிருஸ்ண சர்வானந்தன்.

“சிறிலங்காவில் வேலையின்மை 18 வீதமாக இருக்கிறது. தமிழர்கள் அதிகம் வாழும், வடக்கு மாகாணத்தில் வேலையின்மை, 31.2 வீதமாக இருக்கிறது.

வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதிச் செலவினங்கள் 76 வீதமாக இருக்கின்ற போதிலும், இந்த முதலீடுகளால், 5 வீதம் மட்டுமே, வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.

“இளைஞர்கள் தொழிலாளர்களாக பணியாற்றத் தயாராக இல்லாமையும் வேலையின்மைக்கு ஒரு காரணம்” என்கிறார், யாழ்ப்பாணத்தில் உள்ள முதலீட்டுச்சபையைச் சேர்ந்த ஏ.ஆர்.ஜெயமோகன்.

“வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் அனுப்பும் பணம் இங்குள்ள இளைஞர்களைக் கெடுத்து விட்டது. அவர்கள் வெள்ளைச்சட்டை வேலையைத் தான் எதிர்பார்க்கிறார்கள்.

இதன் விளைவாக, கைத்தொழில் நிறுவனங்கள் இங்கு வரவில்லை.” என்றும் ஜெயமோகன் குறிப்பிட்டார்.

“போருக்குப் பிந்திய சூழலில், முன்மாதிரியாளர்கள், கோட்பாட்டாளர்கள் பற்றாக்குறையும் இந்த நிலை ஒரு காரணம் என்று கூறுகிறார் சமூகச் செயற்பாட்டாளரான தியாகராஜா நிரோஷ்.

“போரின் போது, விடுதலை இயக்கம் கோட்பாடு மற்றும் இலக்குகளை வழங்கியது. போருக்குப் பின்னர், ஏற்பட்ட அந்த வெற்றிடத்தை ஆக்கபூர்வமற்ற, குற்றவியல் செயற்பாடுகள் நிரப்பிக் கொண்டுள்ளன.” என்றும் அவர் கூறுகிறார்.

அரசாங்கமும், சிவில் சமூகமும், இளைஞர்களை தலைவர்களாக கட்டியெழுப்பும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும், அதன் மூலம் ஏனையோரை ஊக்குவிக்க முடியும் என்றும் கூறுகிறார் யாழ்.பல்கலைக்கழக உளநலத்துறை பேராசிரியரான மருத்துவ கலாநிதி தயா சோமசுந்தரம்.

நன்றி ; New Indian Express