பிரான்சில் தியாகதீபம் லெப். கேணல். திலீபனுக்கு நினைவுக்கல் நடுகையும், திரைநீக்கமும் December 15, 2014 News பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான ஆர்ஜெந்தே நகரத்தில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களுக்கு ஆர்nஐந்தே பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினரால் நினைவுக்கல் நாட்டப்பட்டு தமிழீழ தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8 வது ஆண்டு நினைவேந்தல் நாளில் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. 14.12.2014 கடும்குளிர், பனிமூட்டத்திற்கு மத்தியில் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக 11.00 மணிக்கு பொதுச்சுடரினை எதிர்க்கட்சியின் மாநகர முதல்வர் மதிப்புக்குரிய Maire Geoges Mothron ( UMP) கட்சி அவர்கள் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் Philippe DOVCET ( PS) கட்சி அவர்கள் நினைவுக்கல்லினை திரைநீக்கம் செய்தும் வைத்தார். அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரினை ஆர்ஜெந்தே பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்து கடந்த நவம்பர் 24 ம் நாள் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் மாணிக்கம் ஜெயசோதி அவர்களுடைய துணைவியார் அவர்கள் ஏற்றி வைக்க, அவருடைய மகள் மலர்வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து ஆர்ஜெந்தே வாழ் சகோதரி தியாக தீபம் திலீபனின் ஈகம் பற்றி கூறியிருந்தார். தொடர்ந்து உரையாற்றிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களின் வரலாற்றில் இன்றைய நாள் ஓர் வரலாற்றுப் பதிவைக் கொண்ட நாளாகும் என்றும் தியாகதீபம் திலீபனின் ஈகத்தைப்பற்றியும், திலீபனை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்த தமிழீழ தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாளில் ஆர்ஜெந்தே வாழ் தமிழீழ மக்களால் நினைவு தூபி எழுப்பப்பட்டுள்ளது ஓர் பெருமைக்குரிய விடயம் என்றும் அதேநேரத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாநகர முதல்வரும், ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் ஓரே இடத்தில் நின்று ஒன்று சேர்ந்து இந்த புனித செயற்பாட்டை செய்திருப்பது போன்றுதலுக்குரிய தொரு விடயமாகவும் பார்க்கப்படுவதுடன் நாளைய எமது சந்ததியினர் எமது மண்ணின் விடுதலையையும், அந்த விடுதலைப்போராட்டத்திற்கு எம்மவர்கள் செய்த உயிர் கொடைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அதனை எமது சந்ததியும் உலகப்பந்தில் ஒரு தமிழன் உயிருடன் வாழும் வரை அந்த நினைவுகள் இருக்க வேண்டும் என்றும், இந்த உயரிய பணியை செய்ய வேண்டிய கடப்பாடு எமது அடுத்து வருகின்ற தலைமுறையினருக்கே உண்டு எனக்கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றியிருந்தார் அவர் தமது உரையில் தனது பகுதியில் வாழும் தமிழ்மக்கள் பற்றி தான் நன்கு அறிந்து கொண்டவர் என்றும் தமிழர்கள் பிறந்த மண்ணில் எவ்வளவு துன்பத்துக்கு ஆளாக்கப்பட்டிருந்தார்கள் உயிர் பறிக்கப்பட்டார்கள் என்றும் அவர்களுக்கு எல்லாவிதத்திலும் உதவவேண்டும் என்ற நோக்கில் அவர்களால் முன்வைக்கப்பட்ட இந்த செயற்திட்டம் தம்மால் செய்யப்பட்டதையிட்டு மிகுந்த சந்தேசத்தையும் தான் அடைவதாகவும் கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து உரையாற்றிய ஆர்ஜெந்தே மாநகர முதல்வர் உரையாற்றுகையில் தமிழீழ மக்களின் பல்வேறு செயற்திட்டங்கள் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்டது என்றும், இந்த நினைவுக்கல் வைப்பதற்கு அயராது உழைத்த சங்கத்தின் தலைவர் அவர்களின் இழப்பு கவலையளிக்கின்றது என்றும் அவர்களின் குடும்பத்தின் மற்றும் உறவினர்களின் துயரத்தில் தானும் பங்கு கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். அவர்களைத் தொடர்ந்து பிரெஞ்சு மொழியில் மாணவர்களாலும், தமிழ்ச்சங்கங்கக் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்களும், தமிழ்ச்சோலை தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு. ஜெயக்குமாரன் அவர்களும், தமிழீழ மக்கள் பேரவையின் பொறுப்பாளர் திரு. திருச்சோதி அவர்களும் உரையாற்றியிருந்தனர். இது ஆர்ஜெந்தே மக்களின் விருப்பும் என்றும், அதனை நிறைவேற்ற சங்கத்தலைவராக இருந்து நாட்டுப்பற்றாளர் மாணிக்கம். ஜெயசோதி அவர்கள் ஆற்றிய பணி பற்றியும், உடனடியாக இந்த உயரிய பணியை நிறைவேற்றுவதற்கு இடத்தை ( காணி ) யும், அனுமதியையும், மட்டும் வழங்கிய அரசுக்கும், நினைவுக்கல்லுக்கான பொருளாதார பங்களிப்பை வழங்கிய அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நன்றியை தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகி திருமதி. ராணி அவர்கள் தெரிவித்திருந்தார். பலநூற்றுக்கணக்கான மக்கள் குழந்தைகள், இளையவர்கள், பெரியவர்கள் என கலந்து கொண்டு மலர் வணக்கம் செய்ததுடன் தியாக தீபம் திலீபனின் இறுதி மூச்சும் பேச்சுமான மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற இறுதி வாக்கியத்திற்கமைய மக்கள் புரட்சியுடன், நம்புங்கள் தமிழீழம் பாடலுடன், தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.