வடமாகாணசபை கேட்ட நிதியினை மத்திய அரசாங்கம் வழங்காத நிலையில் குறித்தளவு நிதியுடன் 2015ம் ஆண்டுக்கான எங்கள் செயற்பாடுகளை மிகுந்த நெருக்கடிகளுக்குள் செயற்படுத்த வேண்டிய கடப்பாட்டிற்குள் நாங்கள் இருக்கின்றோம். என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் 2ம் நாள் அமர்வு இன்றைய தினம் இடம்பெற்ற நி லையில் குறித்த அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

அமர்வில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

நாங்கள் மத்திய அரசாங்கத்திடம் எனது அமைச்சின் கீழ் உள்ள துறைகளுக்காக சுமார் 1499.5 மில்லியன் ரூபா நிதியினை கோரியிருந்தோம். ஆனால் நிதி ஆணைக்குழு எமக்கு கொடுத்திருக்கும் தொகையானது 272 மில்லியன் ரூபாய் மட்டுமே.

இந்த நிதியை கொண்டு 2015ம் ஆண்டுக்கான செயற்பாடுகள், மிகுந்த நெருக்குவாரங்களை கொடுக்கப் போகின்றது. ஆனாலும் 2014ம் ஆண்டை விடவும் அதிகளவு வினைத்திறனுடன் எங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம்.

குறிப்பாக நாங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் வீதி அபிவிருத்திக்கு 770 மில்லியன் ரூபாய் நிதியினை கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் 74மில்லியன் ரூபா நிதியினை மட்டுமே கொடுத்திருக்கின்றார்கள்.

இதேபோன்று போரினால் பாதிக்கப்பட்ட எங்கள் மக்களுக்கு வீடமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 10 மில்லியன் ரூபாய் நிதியை கேட்டிருந்தோம். அவர்கள் 5மில்லியன் ரூபாய் நிதியை கொடுத்திருக் கின்றார்கள்.

ஆனால் நாங்கள் கேட்காமலேயே வாராந்த சந்தை, சமூக நீர்வழங்கல், மயானங்கள் விருத்தி, மற்றும் தகமை விருத்திக் கட்டமைப்பு ஆகியவற்றுக்கு 54 மில்லின் ரூபா நிதியினை கொடுத்திருக்கின்றார்கள்.

ஆனால் முன்னுரிமை அடிப்படையில் நாம் கோரிய நிதியினை மட்டும் அவர்கள் வழங்கவில்லை. என அவர் மேலும் தெரிவித்தார்.