உலகமுழுக்க வாழ்ந்து கொண்டிருக்கும் என் உயிருக்கு நிகரான தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.

உங்களை போலவே இயக்குனர். பாரதிராசா அவர்களின் இலங்கை பயணத்தை கண்டு நானும் அதிர்ச்சி அடைந்தேன். தமிழீழ தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் சொன்னது போல “தவறு யார் செய்தாலும் அது தவறு தான்”.

இயக்குனர். பாரதிராசா அவர்களிடம் உடனடியாக நான் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பொது “இந்த வயதில் நான் சோரம் போவேனா” என்று பேச தொடங்கி, என் இனத்திற்கும் நான் பெரிதும் மதிக்கும் தம்பி பிரபகரனுக்கும் ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டேன். சம்மந்தமே இல்லாமல் நான் இருக்கும் இடத்தை தேடிவந்து டக்ளஸ் தேவானந்தா என்னை சந்தித்த போது விருப்பம் இல்லாமலேயே பேச நேர்ந்தது. மீனவர் பிரச்சனை பற்றிப் பேச ஆரம்பித்த உடனே அரசியல் இப்போது பேச வேண்டாமே என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவர்களது ஆட்கள் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். ஒரு வழியாக அவரை பேசி அனுப்பிவிட்டு, அதன் பிறகு சென்று முதலமைச்சர் விக்னேசுவரன் அவர்களையும், அமைச்சர் ஐயங்கரன் நேசன் அவர்களையும் சந்தித்தேன்.

இவர்கள் இருவரையும் சந்திபதற்குள் அவசர அவசரமாக டக்ளஸ்  தேவானந்தா குழு எடுத்த புகைபடத்தை வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

அது மட்டும் அல்ல என்னை அழைத்தது லண்டன் கற்பக விநாயகர் ஆலயத்தை பராமரிக்கும் மரியாதைக்குரிய கோபால் அவர்கள் தான். அவர்களை தவிர என் இனத்திற்கு எதிரானவர்களின் அழைப்பின் பேரில் நான் இலங்கைக்கு செல்லவில்லை.

என்னுடைய தாய் தமிழ்நாட்டின் மண்ணை மிதிபதற்க்குள் நான் உயிராய் நேசிக்கும் உலகமெங்கும் வாழும் என் தமிழ் உறவுகளிடம் இந்த பயணத்தை பற்றிய விளக்கத்தை சொல்லிவிட்டுத் தான் இலங்கை மண்ணில் இருந்து புறப்படுவேன், என் உயிரே போனாலும் சரி என்ற வார்த்தைகளுடன் முடித்துக்கொண்டார்.

முள்ளிவாய்க்கால் இனபடுக்கொலை நடந்த காலகட்டத்தில் இயக்குனர் பாரதிராசா – என் இனத்தை அழிக்க காரணமாய் இருந்த இந்திய அரசு கொடுத்த தேசிய விருதையும், பத்மபூசன் விருதையும் பல்லாயிர கணக்கான தமிழ் உறவுகளின் முன்னால் இரு கைகளிலும் ஏந்தி உடைக்கவா இல்லை திருப்பி இந்திய அரசிடமே அனுப்பவா என்று கேட்டவர். ஆகவே அவரை பற்றி தீர ஆராய்ந்து பார்க்காமல் விமர்சனம் செய்வதை சிறிது யோசித்து செய்யுங்கள் என்று என் தாய் தமிழ் உறவுகளிடம் தாழ்மையோடும், உரிமையுடனுடம் கேட்டுகொள்கிறோன்.

அதே நேரத்தில் தவறு நடந்திருந்தால் என் தாய்க்கும், தாய் மொழிக்கும் சமமான என்னுடைய தமிழீழ் தேசிய தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்கள் சொன்னது போல சமரசம் இல்லாமல் விமர்சனம் செய்வோம்.

இப்படிக்கு,
வ.கௌதமன்
21.12.2014