kbARCfiKXlcசிங்களத்தின் தேர்தலும் – தமிழீழ மக்களும்-மே பதினேழு இயக்கம் December 27, 2014 News இலங்கையில் நிகழும் ஜனாதிபதி தேர்தல் இரு சிங்கள பேரினவாத ஆற்றல்களுக்கிடையே நிகழும் தேர்தல். தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, தமிழினப்படுகொலைக்கான நீதி, குற்றவாளிகளுக்கான தண்டனை என தமிழர்களின் எந்த ஒரு அடிப்படை அரசியல் கோரிக்கைகளுக்கும் விவாதத்தினை நேர்மையாக நிகழ்த்தாத சிங்களப் பேரினவாதத்திடம் தமிழர்கள் எந்தவகையான அரசியலை முன்னெடுக்கவேண்டும் என்பதை சிந்திக்க வேண்டிய தருணமாக மே17 இதை பார்க்கிறது. அதே தருணத்தில் ஐ.நாவின் மனித உரிமை கவுன்சிலில் இருதரப்பு விசாரணை என்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் நல்லிணக்கம் வேண்டி முன்னெடுக்கப்படும் விசாரணை எந்தவித நலனையும் தமிழர்களுக்கு வழங்கிடப் போவதில்லை. ஆட்சி மாற்றமே இலங்கையின் பிரச்சனைகளுக்கு தீர்வு என பேசும் மேற்குலகம், ராஜபக்சேவை தனது கைகளுக்குள் வைத்து ஆதிக்கம் செலுத்தவிரும்பும் சீனா, தமிழர்களை பகடைகாயாக பயன்படுத்தும் இந்தியா ஆகிய நிலைகளுக்கு இடையே நாம் ஒரு வலிமையான எதிர்குரலை எழுப்பி நமது அரசியலை முன்னெடுக்க மே17 இயக்கம் அறைகூவல் விடுக்கிறது. தமிழர்களின் தன்னாட்சி பிரதேசம் 2002 அமைதி ஒப்பந்தம் மூலமாக கிடைக்கப்பெற்ற குறைந்த பட்ச அதிகாரத்தினை திரும்பவும் மீளப்பெரும் கோரிக்கையினை முன்வைப்போம். இருதரப்பு விசாரணையை ஐ.நா மனித உரிமை கமிசன் முன்வைப்பது நியாயம் எனில் இரண்டு தரப்பு அதிகாரங்கள் இருந்தன என்பதும் உண்மையே. இதில் ஒரு தரப்பினை மட்டும் அதிகார மையமாக சர்வதேசம் அங்கீகரிப்பது அயோக்கியத்தனம் என்பதை உரக்கச் சொல்வோம். தமிழர்களுக்கான நீதியை – விடுதலையை முன்னெடுக்கும் தருணத்தில் சமரச அரசியலை முன்மொழிபவர்களை புறக்கணித்து விடுதலை அரசியலை முன்னெடுக்க தமிழீழ இளைஞர்கள்- பெண்களை மே 17 இயக்கம் அழைக்கிறது. இளைஞர்களே இந்த தருணத்தில் விடுதலை போராட்டத்தினை முன்னெடுக்கும் பெரும் ஆற்றல். அவர்களை முன்னரங்கிற்கு கொண்டு செலுத்துவதும், பக்கதுணையாக நாம் பின்னிற்பதுவுமே இன்றய அவசியம். அடுத்த தலைமுறைகளின் அரசியல் முன்னெடுப்பு சமரசமின்றி இலங்கையின் ஒற்றை ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டு வரும் அரசியலை செய்து முடிக்கவேண்டும். வலிமையான ஜனநாயக மக்கள் திரள் போராட்டங்கள் தமிழீழப் பகுதிகளில் வெடித்துக்கிளம்பவேண்டும். இலங்கையோடு சமரசம் செய்வது அயோக்கியத்தனமான அரசியல், ஈழப்போரில் முன்னின்ற விடுதலை போராளிகளுக்கு நாம் செய்யும் பின்னடைவு அரசியல் என்பதை வ்லிமையாக பதிவு செய்வோம். இந்த தேர்தலை புறக்கணித்து , தமிழீழ தன்னாட்சி பிரதேசத்தினை மக்கள் திரள் மூலமாக கைப்பற்றும் பணியை மேற்கொள்ள அறைகூவல் விடுப்போம். தமிழீழ தன்னாட்சி பிரதேசம், பொது வாக்கெடுப்பு நிகழும் வரையில் உருவாக்கப்பட வேண்டும். கட்டுப்பாட்டு பிரதேசத்தினை இந்தியா-பாகிஸ்தான் – மேற்குலகம்-அமெரிக்க-சீனா-ரசியா இல்லாத மூன்றாம் உலக நாடுகளின் படைகளைக்கொண்டு பாதுகாத்து வாக்கெடுப்பினை நிகழ்த்தக் கோரும் வலிமையான போராட்டத்தினை முன்னெடுக்க இதுவே சரியான தருணம். தமிழீழமே நமது கோரிக்கை. அதில் சமரசம் கிடையாது மே பதினேழு இயக்கம்