162 பேருடன் மாயமானதாக கூறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்று மீட்பு குழு தலைவர் தெரிவித்துள்ளார்.. இதனால் விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மலேசியாவைச் சேர்ந்த ‘ஏர் ஆசியா’ நிறுவனம் மலிவு கட்டண விமானங்களை இயக்கி பிரசித்தி பெற்றதாகும். இந்த விமான நிறுவனத்தின் ‘ஏ320–200’ ஏர் பஸ் விமானம், இந்தோனேஷியாவில் உள்ள சுரபவா என்ற இடத்தில் இருந்து சிங்கப்பூரை நோக்கி உள்ளூர் நேரப்படி நேற்று காலை 5.20 மணிக்கு புறப்பட்டு சென்றது.

இந்த விமானத்தில், 155 பயணிகள், 7 சிப்பந்திகள் என மொத்தம் 162 பேர் பயணம் செய்தனர். 162 பேரில் 156 பேர் இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள். இந்த விமானம், நேற்று காலை 8.30 மணிக்கு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தை சென்று அடைந்திருக்க வேண்டும்.

ஆனால், புறப்பட்டு சென்ற 42 நிமிடங்களில் அது மாயமானது. அதாவது காலை 7.24 மணிக்கு (இந்திய நேரம் அதிகாலை 4.54 மணி), இந்த விமானம், விமான கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை திடீரென இழந்தது. இந்தோனேஷிய விமான தகவல் பிராந்தியத்தில்– சிங்கப்பூருக்கு 200 கடல் மைல் தொலைவில், சிங்கப்பூர்–ஜகார்த்தா விமான தகவல் பிராந்தியத்தில் பறந்து கொண்டிருந்தபோது, தகவல் தொடர்பை இழந்ததாக சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்தது.

காணாமல் போன விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் இந்தோனேஷியா 5 கப்பல்களையும், 15 விமானப்படை வீரர்களுடன் ஒரு கண்காணிப்பு விமானத்தையும் ஈடுபடுத்தி இருக்கிறது. நேற்று இரவு தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், காலை மீண்டும் தேடுதல் பணி தொடங்கியுள்ளது.

”பெலிடங் தீவின் கிழக்கு மற்றும் வடக்கு கடல் பகுதிகளில் நாங்கள் உன்னிப்பாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறோம்” என்று தேடுதல் பணியில் ஈடுபட்ட அதிகாரி தெரிவித்தார். சிங்கப்பூர், மலேசியா ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படை இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

இதனிடையே, விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்று மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்பு குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். ”மாயமான இந்தோனேஷிய விமானம் கடலில் மூழ்கியிருக்கலாம் என்றும் அதன் பாகங்கள் கடலின் அடிப்பகுதியில் இருக்கலாம் என்று எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன” என்று மாயனமான விமானத்தை தேடி வரும் மீட்பு குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனால் விமானத்தில் பயணித்த 162 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது