மைதிரிபாலா சிரிசேனாவிற்கான ஆதரவு அளிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு , ஈழத்தமிழர்களை ’தொடர்-கொலைகளத்தின்’ விளிம்பில் நிறுத்தி இருக்கிறது .
விடுதலை வேட்கையை வேட்டையாடுவதை விட சமரசம் செய்வதன் மூலமே வெல்லமுடியும் என்பது மேற்குலகத்திற்கு தெரிந்திருக்கிறது.

ராஜபக்சேவிற்கு எதிரான மேற்குலகம்-இந்தியாவின் ராசதந்திர நகர்வுகள் விரைவாகவும், கூர்மையாகவும் நடக்க ஆரம்பித்திருக்கிறது.

தமிழினப்படுகொலைக்கு துணை செய்த இந்தியா-மேற்குலக கூட்டணி தமது ’காரியம்’ முடிந்தவுடன் கழுத்தறுப்பு பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. சண்டையிட ஒருவன் , சமாதானம் பேச ஒருவன் என தேர்வு செய்து வைத்திருக்கும் இந்த கூட்டணி. இதுவே இவர்களின் ராசதந்திரம். இதில் சிதறும் சில ’ஆதரவு’ வார்த்தைகளை நம்பி தமிழீழ விடுதலை அரசியலை இவர்களிடம் அடகு வைத்த ’அரசியல் தரகர்கள்’ அல்லது லாபியிஸ்டுகளை இன்னும் சிறிது காலத்தில் கைகழுவும் இந்த கூட்டணி.
மேற்குலகிற்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு ‘நல்லது’ செய்கிறேன் என சிறப்பாக நடிக்கும் மேற்குலக ‘பயிற்சி’ பெற்ற ஒரு அதிபரும் இலங்கையில் பொறுப்பேற்ற பின்னர், மேற்குலகமும்- இந்தியாவும் தனது முதலீடுகள்-ராணூவ உதவிகள் ஊடாக முழுமையாக இலங்கையை ஆக்கிரமிக்கும். இதில் தமிழீழம்- தமிழர் உரிமை என்றூ பேசுபவர்களை ‘ராஜபக்சே’வைக் காட்டிலும் கொடூரமாக ஒடுக்கும். தேவைப்பட்டால் அரசியலில் இருந்து அகற்றும்.

ராஜபக்சேவின் அரசியலுக்கே தூக்கு மாட்டும் மேற்குலக -இந்திய கூட்டணி எவ்வித மக்கள் ஆதரவும்-வலுவும் அற்ற தனிநபர் ‘லாபியிஸ்டுகளை’ அப்புறப்படுத்த இரண்டு நிமிடங்கள் போதுமானதாக இருக்கும்.
ஈழத்தமிழர்கள் தங்களது அரசியலையும், வாழ்வுரிமையையும், விடுதலை உணர்வினையும் குறைந்தபட்சம் எதிர்காலத்தையும் காக்கவேண்டுமென்றால் இந்த ’பேரினவாத’ தேர்தலை புறக்கணிப்பதே ஒரே வழி.
இலங்கையின் தேர்தலை புறக்கணிக்கும் அரசியலை வலிமையாக தமிழீழ இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டும்.

போராட்டமே வாழ்வதற்கான அடிப்படை உணர்வு.