பார்க்க வேண்டிய பகுதிகளுக்கு அழைத்து செல்ல ராஜபக்ச அனுமதித்தால் இலங்கை வரத் தயார்: நெடுமாறன் December 31, 2014 News இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழக தலைவர்கள் இலங்கை வந்து ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் பற்றி அறியலாம் என கூறியிருந்தார். அதன்பிரகாரம் நாம் அங்கு சென்று பார்க்க வேண்டிய பகுதிகளுக்கு அழைத்து செல்ல ராஜபக்ச தயாரா? என பழ. நெடுமாறன் கேள்வியெழுப்பியுள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரித்து ஹிந்தி நடிகர்–நடிகைகள் பரப்புரைக்கு சென்று இருப்பது தவறான முன் உதாரணமாக அமைந்து விடும். எனவே இலங்கை வந்துள்ள இவர்கள் உடனடியாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார். அதேவேளை, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழக தலைவர்கள் இலங்கை வந்து ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் பற்றி அறியலாம் என கூறினார். இதை வரவேற்று தமிழக தலைவர்களுடன் இலங்கை செல்ல தயார். ஆனால் பேச வேண்டிய, பார்க்க வேண்டிய பகுதிகளுக்கு தடை விதிக்காமல் அழைத்து செல்ல ராஜபக்ச தயாரா? அதேபோல இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை ஐ.நா.குழு மேற்பார்வையிட அவர் அனுமதி அளிப்பாரா? என கேள்வி எழுப்பினார்.