அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஆகிய நாம், புலம்பெயர் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், எதிர்வரும் ஜனவரி 8, 2015 அன்று இலங்கையில் நடைபெறவிருக்கும் சனாதிபதி தேர்தல் தொடர்பாக தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் வாழும் எமது மக்கள் மத்தியிலும் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் எழுந்திருக்கும் கேள்விகளுக்கான எமது நிலைப்பாட்டை முழுமையான தமிழ்த் தேசியத்தின் விடுதலை நோக்கிய நிலையில் இருந்து அறிவிக்கின்றோம்.
எமது நிலைப்பாடு என்பது நீண்டகால நோக்கின் அடிப்படையில், எமக்கு எமது மக்கள் தந்த ஆணையின் அடிப்படையில், அவர்களின் அரசியல் வேணவாவை பிரதிபலிக்கும் வகையில், நாடுகள் வாரியான மக்கள் அவைகளுக்கு இடையேயும் மற்றும் பல்வேறு தரப்புகளுடனும் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் பெறுபேறாகவே அமைகிறது.

காலவோட்டத்தில் உலகம் மாறியிருக்கிறது. உலக அரசியலும் மாறியிருக்கிறது. ஆனால் சிங்களத் தேசத்து அரசியலில் மாற்றம் நிகழவில்லை. தமிழர் தாயகத்தில் இன்றும் இன அழிப்பு தொடர்ந்து நடைபெறுவதற்கு சிங்கள-பௌத்த இனவாதத்தின் தமிழர் விரோதக் கொள்கையே அடிப்படைக் காரணமாகும்.

கடந்த பல தசாப்தங்களாக ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளும், இன அழிப்பும் சாட்சிகளுடனும் ஆதரங்களுடனும் அனைத்துலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது தவிர அனைத்துலக சமூகம் தமது உத்தியோகபூர்வ தொடர்புகள் ஊடாகவும் செய்மதி புகைப்பட ஆதாரங்களூடாகவும் ஈழத்தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் பேரவலத்தை பற்றி நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றன. எனினும், ஈழத்தமிழ் மக்கள் தமது பட்டறிவினடிப்படையில் வேண்டி நிற்கும் சரியான அரசியல் தீர்வைப் பற்றி அனைத்துலகம் அக்கறை கொள்ளாதது எமக்கு வேதனையைத் தருகிறது.

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத் தீவில் சிங்கள பௌத்த பேரினவாதிகள் மாறி மாறி ஆட்சிப்பீடம் ஏறிய காலத்திலிருந்து தமிழர் நிலம் விழுங்கப்பட்டு வருகிறது. தமிழர் நிலத்தை அபகரித்துச் சிங்கள மயமாக்குவது ஒருபுறமும், தமிழர் நிலத்தை ஆக்கிரமித்து அதன் வளங்களை சூறையாடி அங்கு வாழ்ந்த மக்களை அழிப்பது மறுபுறமாகவும் நடந்தேறுகிறது.

ஈழத்தமிழர்களை பொறுத்தவரை சிங்கள பேரினவாதத்தின் ஓற்றையாட்சி அரசியலமைப்பும் அவர்கள் மீதான இன அழிப்புக்கு காரணியாக அமைகிறது. இலங்கை அரசியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் இரண்டு பிரதான கட்சிகளும் சிங்கள பௌத்த பேரினவாதச் சித்தாந்தத்தில் வேரூன்றி வளர்ந்த இனவாதக் கட்சிகள்.

எதிர்வரும் தேர்தலில் கூட ஆட்சியில் இருப்பவர்களும், ஆட்சிக்கு வரத் துடிப்பவர்களும் சிங்கள பௌத்த பேரினவாத வாக்கு வங்கியை இலக்கு வைத்தே தமது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். இதையே அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் உறுதிப்படுத்துகின்றது. இவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனம் ஈழத்தமிழர்களுக்கான நீதியையோ அல்லது இயல்பு நிலையை உருவாக்குவதற்கான பொறிமுறையையோ உள்ளடக்கவில்லை.

இத் தேர்தலின் ஊடாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பானது, வரலாற்று ரீதியாக நாம் கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையில் பொய்யானதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இத் தேர்தலில் முதன்மை வேட்பாளர்களாக நிற்கும் மகிந்த ராஜபக்சவின் செயற்பாட்டையும், பதவிக்கு வரத்துடிக்கும் மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களையும் ஆழமாக ஆராய்ந்து கலந்துரையாடலுக்கு உட்படுத்தியதன் அடிப்படையில், தமிழ் மக்களின் தெரிவாக இருவரும் இருக்கமுடியாது என்பதையும் இங்கு தெரிவிக்கின்றோம்.

வரலாற்று ரீதியாக இனவாதக் கடும் போக்காளர்களே சிறீலங்கா அரசின் முக்கியப் பொறுப்புகளை வகித்திருக்கிறார்கள், வகிக்கிறார்கள், எதிர்காலத்திலும் வகிப்பார்கள். தமிழர்களுக்கு எதிராகத் தென்னிலங்கையில் குமுறும் இனக்குரோத வெறியாட்டங்கள், ஆட்சியதிகாரத்தில் பேரினவாத சக்திகளின் மேலாண்மை எக்காலத்திலும் தமிழர்களின் தேசிய இருப்புக்கு உடன்படப் போவதில்லை என்பதை உலக நாடுகள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக்கான தற்காப்பு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு நீதி வேண்டி தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் எமது உறவுகள் செய்துவரும் போராட்டங்கள் ஊடாக எமது தேசிய பிரச்சினை இப்பொழுது உலக நாடுகளின் கவனத்தையும் ஆர்வத்தையும் ஈர்ந்துவருகின்றது.
சகல சிங்கள பேரினவாத அரசாங்கங்களும் தமிழின அழிப்பு மனப்பாங்கையே கொண்டுள்ளதால், சிறீலங்கா அரசென்பது தமிழ்மக்களுக்கு நியாயமான தீர்வினை வழங்காதென்ற புரிதலின் அடிப்படையில் அனைத்துலகம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதே இலங்கைத் தீவில் நீதியுடன் கூடிய நிலையான சமாதானம் உருவாகுவதற்கு வழிவகுக்கும் என நாம் கருதுகிறோம்.

அந்தவகையில் எதிர்வரும் ஜனவரி 8, 2015 அன்று நடைபெறவிருக்கும் சனாதிபதி தேர்தல் தொடர்பாக தாயகத்தில் உயிராபத்துக்குள் வாழ்ந்துகொண்டு தமது நிலைப்பாட்டை தமிழ்த் தேசிய இருப்பை நோக்கி உறுதிபடத் தெரிவித்திருக்கும் தரப்பினருக்கு நாம் தலைவணங்குகின்றோம்.

இராணுவ ஆக்கிரமிப்பு மூலம் தமிழரின் தேசத்தில் சிங்களத்தின் இறையாண்மையைத் திணித்து விட முடியாது என்பதை எமக்காக தமது உயிர்களை அர்ப்பணித்த உறவுகள் தெளிவாக கூறிசென்றுள்ளனர். அதே போல், தமிழர்கள் மீதான சிங்கள தேசத்தின் திணிப்புக்கு எமது தாயகத்து உறவுகள் இடமளிக்கப் போவதில்லை என நாம் திடமாக நம்பும் இவ்வேளையில், தமிழர் தேசத்தின் விடுதலை உயிர்ப்போடு இருப்பதையும் அவர்கள் உறுதிசெய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

ஆகவே, இத் தேர்தலில் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரும் தூரநோக்கு சிந்தனையோடு செயற்படுவதோடு, தமிழர் தேசத்தின் இருப்பும் பாதுகாப்பும் கருதி மட்டுமே தமது நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு தெளிவாக பறைசாற்ற வேண்டும் என நாம் வேண்டிநிற்கின்றோம் .

(ஒப்பம்)
பேராசிரியர் சிறிரஞ்சன்
இணைத்தலைவர், அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை(ICET)

தமிழர் பண்பாட்டு கழகம் – பெல்ஜியம்
கனடியத் தமிழர் தேசிய அவை
டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்
தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு
யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை
இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை
நியூசீலாந்து தமிழர் தேசிய அவை
நெதர்லாண்ட் ஈழத்தமிழர் பேரவை
நோர்வே ஈழத்தமிழர் அவை
சுவிஸ் ஈழத்தமிழரவை