வடக்கு கிழக்கை தாயகமாக் கொண்டிருக்கும் தமிழ் மக்களால், 2009க்கு மே மாதத்திற்கு பின்னர் தங்களது தேசியத் தலைமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெறவுள்ள சிறிலங்காவிற்கான ஜனாதிபதி தேர்தலில், பொது எதிரணி வேட்பாளரென்று அழைக்கப்படும், மைத்திரிபால சிறிசேனவிற்கு எவ்விதமான நிபந்தனைகளுமின்றி பகிரங்க ஆதரவை வழங்கியமையானது, அரசியல் நோக்கில் ஒரு வரலாற்று தவறென்று கூறுவதுடன், இன்று எமது கட்சித் தலைமை எடுத்திருக்கும் மேற்படி முடிவானது, கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலான எமது மக்களின், போராளிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் செயலென்றும் கூறுகின்றோம். இதனை நாம் வன்மையாக கண்டிப்பதுடன், எமது தாயக மக்கள் இந்த வரலாற்று தவறிற்கு உடன்படப் போகின்றனரா என்னும் கேள்வியையும் தூய தமிழ்த் தேசிய உரிமையுடன் கேட்டுநிற்கிறோம். நெஞ்சு பொறுக்கவில்லை.

தமிழ்த் தேசியத்தில் தீவிர பற்றுறுதி கொண்டவர்கள் என்னும் வகையில் நாம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எமது கட்சிக்;குள் விவாதித்து வந்திருக்கிறோம். சிறிலங்காவில் ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கான தயாரிப்புக்கள் வெளித்தெரிந்த பின்னணியில் தான் நாம் இந்த விவகாரத்தை கட்சிக்குள் பேசு பொருளாக்கினோம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு நிதானமாகவும், தமிழ் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் மட்டுமே முடிவு எடுக்க வேண்டுமென்று வாதாடினோம். கட்சித் தலைமையுடன் போராடினோம். இந்த பின்புலத்தில்தான் மகிந்த ராஜபக்சவின் நண்பரும், மகிந்தவின் அரசாங்கத்தில் சுகாதார அமைச்சரகாகவும் பிரதி பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, தீவிர இனவாத எதிரணியுடன் இணைந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து தெற்கின் தேர்தல் களம் சூடடைந்தது. சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய தீவிர இனவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த அத்துரலிய ரத்ன தேரர், பாட்டலி சம்பிக்க ரணவக்க, தமிழீ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் முதன்மையாக பக்களித்த முன்னைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் ஒரணியில் திரண்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு பகிரங்கமாக பங்குகொள்வதை நாம் வன்மையாக எதிர்த்து நின்றோம். எதிரணி வேட்பாளர் மைத்திரிபாலவிற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் விவாதம் எழுந்த போதும், அதனையும் நாம் வன்மையாக எதிர்த்தோம். கடந்த காலத்தில் நடந்த கூட்டங்களான 28.09.2014, 17.10.2014, 14.12.2014 ஆகியவற்றில் வலியுறுத்தியிருந்தோம். மகிந்த ராஜபக்ச என்னும் பெயரை நாம் உச்சரிக்க கூட விரும்பவில்லை அவர் தமிழனப் படுகொலை துரோகி ஏனெனில் அது உச்சரிக்கக் கூட தகுதியான ஒன்றல்ல என்பதே எங்களின் நிலைப்பாடு. எம்மைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி தேர்தலில் பங்குகொள்ளுமாறு எங்கள் மக்களை கோருவதானது, அவர்கள் தலையில் மண்ணை வாரி நாசமாகப் போங்கள் என்று கூறுவதற்கு ஒப்பானதென்று வாதிட்டோம். ஒரு சிலரது கொழும்பு மட்ட உயர்வர்க்கத் தொடர்புகளைக் கொண்டு, தமிழ் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாதென்றும் நாம் வாதிட்டோம் அத்துடன் கண்ணை விற்று சித்திரம் கீறுவதற்கு ஒப்பானது என்றோம். ஆனால் கட்சியின் தலைமைப்பீடம் எங்களது கோரிக்கைகளுக்கு எந்த விதமான மதிப்பும் அளிக்காமல், தற்போது மைத்திரிபால சிறிசேனவிற்கு எவ்வித நிபந்தனைகளுமின்றி, பகிரங்க ஆதரவை வழங்கியிருக்கிறது. மேலும் கட்சியின் உறுப்பினர்களை பகிரங்கமாக மைத்திரிபாலவிற்காக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவும் உத்தரவிட்டிருக்கிறது.

இத்தனை அழிவுகளுக்கும், படிப்பினைகளுக்குப் பின்னரும் கூட, தெற்கின் சிங்கள தலைவர், அதிலும் நேற்றுவரை மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளுக்கு தோளோடு தோள் நின்று தமிழினப்படு கொலைக்கு உடந்தையாக இருந்த மைத்திரிபால சிறிசேனவிற்காக தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்குமாறு எங்கள் தலைமை பணித்திருக்கின்றதென்றால், இதனை எவ்வாறு மனச்சாட்சியுள்ளவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும்.?

எவ்வாறு நாம் இந்த அநீதி குறித்து வாய் திறவாது இருக்க முடியுமா? நாம் பதவிக்கு ஆசைப்பட்டவர்களல்ல தேசம் பறி போய் விட்டது. தேசியத்தையும் இழக்கலாமா?

நாம் ஏன் மைத்திரிபாலவிற்கு பகிரங்க ஆதரவு வழங்கக் கூடாதென்று வாதிடுகிறோம்?

மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையை கூர்ந்து அவதானித்தால், அதில் ஒரு இடத்தில் கூட வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்ட எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஒரு வார்த்தைதானும் இல்லை. ஆனால் அதற்கு மாறாக, சிங்கள மக்களின் வாக்குகளை கவர்ந்திழுக்கும் நோக்கில், சர்வாதிகாரம் தலைதூக்கி விட்டதாகாகவும், ஊழல் மலிந்துவிட்டதாகவும் கூறி, அதனை தன்னால் மட்டுமே மாற்றியமைக்க முடியுமென்றும் வாதிட்டிருக்கின்றார். சுருங்கச் சொன்னால், தான் கதிரையில் அமர்ந்தால் சிங்கள மக்களின் வாழ்வில் புத்தெழுச்சி ஏற்படும் என்பதே அவரது விஞ்ஞாபனத்தின் சாரம். இதனை பிறிதொரு கோணத்தில் நோக்கினால் இலங்கையில் இன்று நிலவும் பிரச்சினைகள் அனைத்திற்குமான சர்வலோக நிவாரணியாக ஆட்சி மாற்றம் ஒன்றே பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சாதாரண சிங்கள குடிமகனின் கண்ணோட்டத்தில் நோக்கினால் இது சரியானதொரு பார்வையாக இருக்கலாம். ஆனால் ஒரு சிங்கள குடிமகன் எதிர்கொண்டுவரும் பிரச்சினையும், வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்டு வாழ்ந்துவரும் தமிழ் குடிமகன் எதிர்கொண்டுநிற்கும் பிரச்சினையும் ஒன்றுதானா? மைத்திரிபாலவை பொறுத்தவரையில் அவரது முழுக் கவனமும் சிங்கள மக்களை கருத்தில் கொண்டதாகவே இருக்கிறது. யுத்த வெற்றியையே முதன்மைப்படுத்தி வருகிறார். ஜாதிக ஹெல உறுமயவுடன் அவர் செய்துகொண்ட உடன்படிக்கை, தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான கோரிக்கையான சமஸ்டிக் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பதாக தெரிவித்திருக்கின்றார். தமிழ் மக்களின் சமஸ்டி கோரிக்கையை பகிரங்கமாகவே நிராகரித்திருக்கும் ஒருவருக்கு வாக்களிக்குமாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆணையிடுவது சரியானதொரு அரசியல் முடிவுதானா? இப்படியான கேள்விகளின் அடிப்படையில் தான் நாம், மைத்திரிபால சிறிசேனவிற்கு பகிரங்க ஆதரவை வழங்குவதை கட்சிக்குள் எதிர்த்தோம்.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான முடிவின் பேரில் இவ்வாறானதொரு முடிவை எடுத்திருக்கின்றனர். நாங்கள் தலைமையின் முடிவு குறித்து அதிருப்பதியில் இருந்துகொண்டிருந்த போதே, எங்களது கணிப்பு முற்றிலும் சரியென்பதை நிரூபிக்கும் வகையில், பொது எதிரணியில் அங்கத்துவம் வகித்துவரும் பிரதான கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, 13வது திருத்தச்சட்டத்தின் அதிகாரத்தை குறைத்து, ஆளுனரின் அதிகாரத்தை அதிகப்படுத்துவதற்கு மகிந்த ராஜபக்ச இணங்கினால், தங்களால் அவருக்கு ஆதரவு வழங்க முடியுமென்று பகிரங்கமாக கூறியிருக்கின்றார். அவ்வாறாயின் இன்று ஹெல உறுமய மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பது ஏலவே தமிழ் மக்களுக்கு பெயரளவில் இருக்கின்ற அதிகாரங்களைக் கூட பறிப்பதற்கான ஒரு உடன்பாட்டின் அடிப்படையில்தானா? இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான ஒரு அதிகாரப் பகிர்வு என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இதற்காக எமது மக்கள் கொடுத்த விலை சொல்லில் வடிக்க முடியாதவை. ஆனால் பொது எதிரணியில் இணைந்து கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரோ, வடக்கு கிழக்கு இணைப்பிற்கு தாம் ஒரு போதும் உடன்படப் போவதில்லை, வடக்கிலிருந்து கிழக்கை பிரிக்க வேண்டும் என்னும் அடிப்படையில் தான் தமது கட்சியே உருப்பெற்றிருக்கிறது என்ற குறிப்பிட்டிருக்கின்றார்.

இப்படியான அறிவித்தல்களின் பொருள் என்ன? சிங்கள இனவாதம் மிகவும் நுட்பமாக தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை வலுவிழக்கச் செய்யும் சூழ்சிiயை அரங்கேற்றியுள்ளது. கூட்டமைப்பின் தலைமையின் பகிரங்க ஆதரவிற்கான அறிக்கையின் பின்னர்தான் அவர்கள் இந்த கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர். இப்போது கூட்டமைப்பின் தலைமையால் இது தொடர்பில் எந்தவொரு பதிலையும் சொல்ல முடியாது. சிங்கள இனவாதத்தின் நுட்பமான சூழ்சித்திறனை கருத்தில் கொண்டுதான் நாம் ஏற்கனவே கட்சித் தலைமையை எச்சரித்திருந்;தோம். பகிரங்க ஆதரவு வழங்க வேண்டாமென்று மன்றாடினோம். ஆனால் இன்று நாங்கள் எதைக் குறித்து அச்சப்பட்டோமோ, அதுவே இறுதியில் நிகழ்ந்திருக்கிறது.

இலங்கை காலனித்துவத்தின் பிடியிலிருந்து விடுபட்ட நாளிலிருந்து, எங்கள் மக்கள், தங்களின் உரிமைகளுக்காக போராடி வந்திருக்கின்றனர். இந்த போராட்டத்தில் ஆகுதியாகிப் போனோர் பல்லாயிரம் ஆகும். அவர்களின் உரிமை வேட்கையும் தியாகங்களும் ஒரு சில சுகபோகிகளின் காலில் மிதிபட்டு நசிவதை எங்களால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. நீங்களே சொல்லுங்கள் இதனை ஏற்றுக் கொள்ளலாமா? மைத்திரிபால சிறிசேன தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில், ‘தீவிரவாதத்தால் நாடு மூன்று தசாப்தங்களாக, சமூக மற்றும் பொருளாதார ரீதியான சவால்களுக்கு முகம் கொடுத்தாக குறிப்பிட்டிருக்கின்றார். (ப-ம் 8). ஆனால் எங்கள் இளைஞர்கள் அத்தகையதொரு வன்முறைப் பாதையை ஒரேயொரு மார்க்கமாக தெரிவு செய்வதற்கு பின்னாலிருந்த நியாயமான காரணங்கள் தொடர்பில் அவர் கிஞ்சித்தும் கரிசனை கொள்ளவில்லை. இதுதான் தெற்கின் சிங்கள தலைவர்களின் ஒருமித்த மனோபாவம். அன்று தந்தை செல்வாவினால் முன்வைக்கப்பட்ட சமஸ்டிக் கோரிக்கையை அன்றைய சிங்களத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால், இத்தீவில் இரத்தம் சிந்தவேண்டிய சூழல் உருவாகியிருந்திருக்காது. ஆனால் நாட்டில் ஜனநாயகத்தை மலரச் செய்யவுள்ளதாகவும், அதற்காக தன்னுடன் கைகோர்க்குமாறும் தமிழ் மக்களுக்கு அழைப்புவிடும் மைத்திரிபால சிறிசேனவினால் தமிழ் மக்களின் சமஸ்டிக் கோரிக்கையை இன்றும் கூட ஏற்றுக்கொள்ள முடியாமல்தானே இருக்கிறது. இப்படியொரு நிலையில் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாம் மைத்திரிபாலவிற்கு பகிரங்கமாக ஆதரவு வழங்க முடியும்? கடந்த அறுபது வருடங்களின் எங்களது மக்களின் சார்பில், சிங்களத் தலைவர்களுடன் எத்தனையோ எழுத்து மூல உடன்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை அனைத்துக்கும் என்ன நிகழ்ந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். எழுத்து மூல உடன்பாடுகளைக் கூட மதிக்காத தெற்கின் தலைவர்களா கனவான் உடன்பாட்டை மதிக்கப் போகின்றார்கள்? இன்று சந்திரிக்கா குமாரதுங்க எதிரணியில் இருப்பதை எங்களின் ஒரு சில தலைவர்கள், தமிழ் மக்களுக்கு சாதகமாக காண்பிக்க முயல்கின்றனர். தனது ஆட்சியின் எத்தனை இடப்பெயர்வுகளை எங்கள் மக்களுக்கு பரிசளித்தவர் இந்த சந்திரிக்கா. வடகிழக்கிலே வாழும் ஒவ்வொரு தமிழனும் இதனை அறிவானே! இவரை ஒரு நம்பிக்கையாக கொண்டால் அதைவிட முட்டாள்தனம் வேறில்லை.

இதைத்தான் கட்சிக்குள் கேட்டோம் ஆனால் கட்சி எங்களின் நியாங்களுக்கு செவிசாய்க்கவில்லை அதனால்தான், நாங்கள் நேசிக்கும் மக்களிடம் எங்கள் நியாயங்களை சொல்கிறோம். நாங்கள் இவ்வாறு பகிரங்கமாக அறிக்கைவிடுவது, எங்களது கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல மாறாக, எங்கள் கண் முன்னே, ஒரு வரலாற்றுத் தவறு நிகழ்வதை கண்ட பின்னரும் கூட, அதனை தவறு என்று உரைக்காதிருந்தால், நாமும் மனச்சாட்சி இல்லாத அரசியல் வியாபாரிகள் ஆகிவிடுவோம். அது எங்கள் மக்களுக்கு நாம் செய்யும் வரலாற்றுத் துரோகமாகும். அதனாலேயே எங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.