யார் கூடுதலான தீமைகளைச் செய்தவர் என்ற கண்ணோட்டத்தில் மகிந்த இராஜபக்சவையும், மைத்திரிபால சிறிசேனவையும் பார்க்க முடியாது என அயர்லாந்து றினிற்றி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் கலாநிதி யூட் லால் பெர்னான்டோ தமிழ்நெற் இணையதளத்திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

அச் செவ்வியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: “சிங்கள ஜனநாயகவாதிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்பவர்கள் கூறுவதுபோன்று, தமிழ் மக்களுக்கான ஜனநாயகமும், சிங்கள மக்களுக்கான ஜனநாயகமும் ஒன்றல்ல. இவர்கள் உறுதியளிக்கும் ஜனநாயகம் என்பது தமிழர்களுக்கு ஒரு அர்த்தத்தையும், சிங்களவர்களுக்கு வேறான அர்த்தத்தையும் வழங்குகிறது.

சிங்களமக்களுக்கு நல்லாட்சியை வழங்குவதனையும், தமிழ் மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுவதனையுமே அது குறித்து நிற்கிறது. ஜனநாயகம் என்ற பெயரில் சிங்களப் பேரினவாதத்தை பலப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக்கூட்மைப்பை ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகள் பயன்படுத்துகின்றன.”

“மகிந்த இராஜபக்சவையும், மைத்திரிபால சேனநாயக்கவையும் மட்டுமல்லாது இவர்களது பேரினவாத நிகழ்ச்சித்திட்டத்திற்கு உதவும் தமிழ் அரசியல் தரப்புகளையும் தமிழ் மக்கள் எதிர்த்து நிற்கவேண்டும்.

எதிரணிகளின் பொது வேட்பாளர் வெற்றி பெறுவாராயின் அது தமிழ் மக்களுக்கு எதிரான இனப் படுகொலையினை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதாகவே அமையும். அது இனவழிப்பு நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தின் தொடக்கத்தை குறிப்பதாக இருக்கும்.

தமிழ் இனவழிப்பின் உண்மையான சூத்திரதாரிகளான அமெரிக்காவும், பிரித்தானியாவும். 2009ம் ஆண்டு படுகொலைகளுக்கு பொறுப்பானவர் என சர்வதேச மட்டத்தில் அறியப்பட்ட மகிந்த இராஜபக்சவை அகற்றி விட்டு அதற்குப் பதிலாக ஒரு புதியவரை வைத்து தமது முயற்சிகளுக்கு புத்துயிர் அளிக்க முனைகின்றன.

இந்த ஆட்சி மாற்றமானது இராஜபக்கசவினால் ஏற்படுத்துப்பட்ட, சீனாவுடனான நெருக்கத்தை குறைப்பதன் மூலம் ஒரு இராணுவப்பரிசினையும் அமெரிக்கா, பிரித்தானியாவிற்கு பெற்றுக்கொடுக்கிறது. இவர்களுக்கு முன்ன்னர் உபயோகமாகவிருந்த இராஜபக்ச பயன்படுத்தப்பட்ட பின்னர் வீசியெறியப்படும் அழுக்குத்துணிபோல் அகற்றப்படவுள்ளார்.

ஜனநாயகத்தை ஏற்படுத்துவது தொடர்பான குழப்பம் சிஙகளவர்கள் மத்தியில் இருக்கிறதென்றால் அதனை தீர்க்கும் விடயத்தை அவர்களிடமே விட்டுவிடுவோம். தமிழ்மக்கள் அதில் பங்கெடுக்க வேண்டியதில்லை.

தமிழ் மக்கள் ஒரு மிகப்பெரிய படுகொலைகளிலிருந்து தப்பியவர்கள் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமைக்கான கூட்டுரிமை இருக்கிறது. சிறிலங்காவின் ஒற்றையாட்சியை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச சக்திகளின் ஆதரவில் நடைபெறும் இந்த இனவாதத் தேர்தலிலிருந்து விலகியிருப்பதன் மூலம் விடுதலைக்கான தமது வேணவாவை அவர்கள் வெளிப்படுத்த முடியும்.”

முழுமையான செவ்வியின் ஆங்கில வடிவம் :

http://tamilnet.com/art.html?catid=79&artid=37578

நன்றி:தமிழ்நேட்