ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி, தனது பண்பாடு, தனது நாகரீகம் போன்றவற்றை பேணிக்கொள்ளுதல் அவசியமாகின்றது. இந்த காப்பாற்றும் தன்மையே அந்த இனத்தின் தொடக்கத்தையும் வாழ்வாதாரத்தின் முதன்மையையும் அறிமுகம் செய்து வைக்கும் காரணியாகின்றது

அந்தவகையில் உலகின் முதன்மையாக தோன்றிய இனங்களுள் முதல்நிலைபெறும் தமிழ் மொழி, தமிழர் இனம், தமிழர் நாகரீகம் என்பவற்றின் தாயகம் குமரிக்கண்டம் என்றே தொல்பொருள் வல்லுனர்கள் தமது ஆய்வுகளின் மூலம் நிறுவியுள்ளனர். தமிழ் வளர்த்த மூன்று சங்கங்களின் சுவடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் படி கடற்கோளால் காவுகொள்ளப்பட்ட குமரிக்கோட்டின் நடுவரைக்கோடு இலங்கை என்கின்ற தேசத்தை நடுவணாகக் கொண்டு தமிழர்களின் பூர்வீகத் தாயகம் உலகப் பந்தில் ஓரு தேசமாக தன்னை நிலை நிறுத்தியிருந்தது .

குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர் இனம் தன் தாய் மொழியாக தமிழையும் தமது நாகரீகத்தையும் தன் இன அடையாளங்களையும் பேணி வந்த அதேவேளை தமது நாகரீகத்தின் அடையாளமாக காலக்கணிப்பீடுகளையும் சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்-கோண்டிரடோஸ், எஸ்.ஜி.வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர். சரியாக மதிப்பீடு செய்து தமது வாழ்வியல் கூறுகளையும் நிர்ணயம் செய்து கொண்டனர் என அலெக்ஸ்ராண்டர்- கோண்டிரடோஸ் எஸ்.ஜி வெல்ஸ் போன்ற மெய்யியலாளர்கள் தமிழர்களின் பூர்வீகத்தை உறுதி செய்துள்ளனர்.

இந்த மெய்யியலாளர்களின் கருத்துப்படி ஆதிக்குடியான மூத்த தமிழ் குடி மொழி வழியேகி வாய்வியல் கூறுகளுக்கும் ஆண்டுக்கணிப்பீடுகளை தொடக்ககமாகவும் நிர்ணயம் செய்து கொண்டனர் என கூறும் இவர்கள் தமிழர்கள் என்னும் இந்த சாதியினர் பூமியின் சுழற்சிக்கு ஏற்ப காலக்கணிப்பீடுகளை மதிப்பீடு செய்து அதனூடாக கண்டறிந்த பெறுபேறுகளுக்கு அமைவாக தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பகுத்தார்கள்.

ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை காலை நண்பகல் ஏற்பாடு மாலை சாமம்’ என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள். அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று பண்டைக் காலத்தில் கணக்கிட்ட தமிழர்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும். எனவும் நிறுவி தமக்குரிய ஆண்டை அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் – ( தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் – (பங்குனி – சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் – (வைகாசி – ஆனி தங்களுக்குரியது)
4. கூதிர் – (ஆடி – ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி – (கார்த்திகை – மார்கழி மாதங்களுக்குரியது)

காலத்தை அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு தொடக்கத்தை இளவேனிற் காலத்தின் ஆரம்ப நாளாகக் கொண்டு, தை மாதத்தினை தனது இனத்துக்கான புத்தாண்டாகப் பிரகடனப்படுத்திக் கொண்டான். பொங்கல் திருநாளைத் தமிழர்கள் ‘புதுநாள்’ என்று அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு – போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகியது- போகி) பொங்கல் என்பது பொங்குதல் – ஆக்குதல். இது தொழிற் பெயர். புத்தொளி பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது.

தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம்.

ஒரு இனத்தின் அடையாளம் இன்னோரினத்தின் அபார வளர்ச்சியினால் அழிக்கப்படும் என்ற தத்துவக் கோட்பாட்டுக்கு அமைவாகவோ என்னவோ பின்னாளில் வந்த இனங்களின் நாகரீக ஆளுகைக்கு அடிமையாகிய தமிழரினம் தனது வாய்வின் கணீப்பீட்டு நாளை புறம் தள்ளி மாற்றார் கணிப்பீடுகளை தனது அடையாளமாக மாற்றிக் கொண்டதன் விளைவாக தமிழர் புத்தாண்டு புறம்தள்ளப்பட்டது .

எனினும் காலச்சுழற்சியின் வேகத்துக்குள் தன்னினக் கருவைச் சுமக்கும் இனம் தனக்கான தாயகத்தை உருவாக்கியுள்ள சூழலில் தனது தொன்மை மிக்க அடையாளங்களையும் நிலை நாட்ட முற்படுதல் அவசியமாகின்றது . தனித்துவமான மொழியைப் பேசுகின்ற தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள் ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டம் வரையறை செய்கின்றது .

இதை கவனத்திலெடுத்த ஈழத்தமிழர்கள் “ஜனவரி மாதம் 14 ம் திகதியை தமது புத்தாண்டுத் தினமாகவும் இருளகன்று இழந்த நிலப்பரப்புக்கள் மீட்கப்பட்டு எமது இனம் நிமிர்வு பெறுவதற்கான விடுதலை ஆண்டாய் மலரவேண்டும் என்றும் பிரகடனப்படுத்திக் கொள்ள உறுதி பூண்டுள்ளனர். இப் புனிதநாளில் நல்லளிப்பு என்ற கைவிசேட நடைமுறையைத் தொடங்கி உறவுகளுக்கு உயிர் கொடுக்கும் உயரிய பணியையும் உயிர்மெய் யாக்கியுள்ளனர் என்பது யாவரும் அறிந்ததே! தமிழ் நாடு அரசும் ‘தை முதல் நாள்தான் தமிழரின் புத்தாண்டுத் தினம் என்பதற்கு இந்த ஆண்டு சட்ட வடிவம் கொடுத்துள்ளது.” எனவே தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என பிரகடனப்படுத்துவோம்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. புத்தாண்டில் உலகம் வாழ் தமிழர்களின் வாழ்வில் தென்றல் வீசட்டும். இன்பம் சேரட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும்.