எழுச்சி கொண்ட எந்தவொரு இனமும் வீழ்ச்சி கண்டதாக வரலாறு இல்லை என்ற தமிழீழ தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனத்தை வெளிக்காட்டிய நிகழ்வுகளில் பொங்கு தமிழ் நிகழ்வு முக்கியமானது. சிங்களப் படைகளின் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்ற பொங்கு தமிழ் மக்கள் மக்கள் எழுச்சி நிகழ்வுகளின் மூலம் தமிழ் மக்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள் என்ற உண்மை வெளிப்படுத்தப்பட்டது.

தமிழ் மக்களின் ஒட்டுமொத்த எழுச்சியாக அமைந்த இந்த பொங்கு தமிழ் நிகழ்வுகள் தமிழ் மக்களின் விடுதலைக் குரலை உலக அரங்கின் காதுகளில் ஒலிக்கச் செய்தன. இதன் மூலம் உலக அரங்கில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பேசுபொருளாக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தோற்றம் பெற்ற இந்தப் பொங்கு தமிழ் எழுச்சி கிழக்கிலும் பேரெழுச்சியுடன் இடம்பெற்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வுக்கு இன்று வயது 11. கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தப் பொங்கு தமிழ் நிகழ்வில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.
அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பரித்து எழுந்து விடுதலை வேண்டிய தமது குரலை சர்வதேச அரங்கின் காதுகளில் ஒலித்த முக்கியமான நிகழ்வாக இந்த பொங்கு நிகழ்வு மாறியது. கிழக்கில் அதுவரை நடைபெற்ற மக்கள் எழுச்சிகளில் பொங்கு தமிழ் நிகழ்வு மட்டுமே அதிகூடிய மக்கள் எழுச்சியடைந்து பங்குபற்றிய நிகழ்வு என்று தமிழ் மக்களின் வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றது.

பொங்கு தமிழ் என்ற நிகழ்வு 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தோற்றம் பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு நிகரானவர்கள் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்து வந்தது. அதற்கு ஏற்றாற்போன்றே இந்த மாணவர்கள் சிங்களப் படைகளால் கைது செய்யப்பட்டனர். வீதிகளில் வைத்து படையினரால் தாக்கப்பட்டனர். கடத்தப்பட்டனர். சித்திரவதை செய்யப்பட்டனர்.

ஆனால், இது அனைத்தையும் பொருட்படுத்தாமல் படைகளின் அச்சுறுத்தல்களையும் மீறி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் 2001 ஆம் ஆண்டு முதலாவது பொங்கு தமிழ் நிகழ்வை ஏற்பாடு செய்தனர். யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பொங்குதமிழ் நிகழ்வுக்கு மக்களையும் கலந்துகொண்டு விடுதலை வேட்கையை வெளிப்படுத்துமாறு மாணவர்கள் கோரியிருந்தனர். இதற்கு ஏற்றாற்போல அன்றைய தினம் பெருந்தொகையான மக்கள் இந்த நிகழ்வுக்கு சென்றனர். ஆனால், படையினர் தமது இரும்புக் கரம் கொண்டு மக்களைத் தடுத்தனர். இந்த நிகழ்வில் அத்துமீறிக் கலந்துகொண்டால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் என்றும் படையினர் மக்களை எச்சரித்தனர்.

மக்களின் பாதுகாப்பு தொடர்பில் கேள்விக்குறி எழுந்ததால் மக்களை இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள  வேண்டாம் என்று அறிவித்த மாணவர்கள் தாங்கள் மட்டும் முதலாவது பொங்கு தமிழ் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனாலும் ஆவேசம் கொண்ட மக்கள் படையினரின் அச்சுறுத்தலையும் மீறி பல்கலைக்கழக தூண்களுக்கு மேலாக பாய்ந்து சென்று இந்தப் போராட்டத்தில் பங்குபற்றினர். இன்றைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளராக இருக்கின்ற செல்வராஜா கஜேந்திரன் அன்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவராக இருந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். அவருடன் சேர்ந்து அன்று பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த அத்தனை மாணவர்களும் இதற்கு துணிச்சலுடன் உழைத்தனர்.

சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தனித்துவமான தேசிய இனம் என்ற முப்பொருள் கோரிக்கையை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்தப் பொங்குதமிழ் நிகழ்வு உலக அரங்கில் வியந்து பேசப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழகம் எத்தனையோ பங்களிப்புக்களை வழங்கிய போதிலும் இந்தப் பொங்கு தமிழ் நிகழ்வின் மூலம் யாழ்.பல்கலைக்கழகம் உலக இராஜதந்திரிகள் மட்டத்தில் பேசுபொருளானது. மக்கள் எழுச்சிக்கு தடை விதித்த சிறிலங்கா அரசின் போலி முகத்திரை அன்று சர்வதேச அரங்கில் கிழிக்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு பொங்கு தமிழின் வெற்றியைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது பொங்கு தமிழ் நிகழ்வு இடம்பெற்றது. ஏறக்குறைய இரண்டு இலட்சம் வரையான பொதுமக்கள் கலந்துகொண்டு மாபெரும் மக்கள் எழுச்சியை வெளிப்படுத்தியதாக இந்தப் பொங்குதமிழ் அமைந்தது. இந்தப் பொங்கு தமிழ் மூலமாக தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்றும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களே தமிழ் மக்களின் ஒப்பற்ற தலைவர் என்றும் சர்வதேச நாடுகளுக்கு மக்கள் எடுத்துக் கூறினர்.

2003 பொங்கு தமிழ் இடம்பெற்ற காலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் சமாதானம் நிலவிய காலம் என்பதால் இந்த மக்கள் எழுச்சியைக் காண்பதற்கு சர்வதேச நாடுகளின் பல பிரதிநிதிகளும் சர்வதேச ஊடகவியலாளர்களும் யாழ்;ப்பாணம் வருகை தந்தனர். தமிழ் மக்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அங்கீகரிக்கின்றனர் என்ற உண்மைக் கருத்தை அவர்கள் அன்றைய தினம் பதிவு செய்தனர்.

இந்தப் பொங்கு  தமிழ் வெற்றிகளின் தொடர்ச்சியாக 2004.01.21 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் மாபெரும் மக்கள் எழுச்சி பொங்கு தமிழ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பொங்கு தமிழுக்கு அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து சுமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இந்த நிகழ்வுக்கு மலையக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், மற்றும் சந்திரசேகரன் ஆகிய தென்னிலங்கை அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

எமது நிலம் எமக்கு வேண்டும் என்ற கோசத்துடன் இடம்பெற்ற இந்தப் பொங்கு தமிழ் நிகழ்வு கிழக்கு மாகாணத்தின் முதலாவது மக்கள் எழுச்சியாக பதிவாகியது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் இருந்தும் பல வாகனங்களில் மக்கள் வெள்ளம் கிழக்குப் பல்கலைக்கழகத்தை நோக்கிப் படையெடுத்தது. தமிழீழ தேசியத் தலைவரின் பாரியளவான உருவப் படங்களைத் தாங்கியவாறு பல ஊர்திகளும் மேற்படி மாவட்டங்களில் இருந்து பொங்கு தமிழ் மைதானத்தை நோக்கி நகர்ந்தன.

தொடரூந்து, பேருந்துகள், பாரவூர்த்திகள், முச்சக்கரவண்டிகள், தனியார் சிற்றூர்திகள், முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கரவண்டிகள் போன்ற பல வாகனங்களிலும் மக்கள் வெள்ளம் நகர்ந்தது. இவ்வாறு சென்ற அனைவரும் கையில் தமிழீழ தேசியத் தலைவரின் புகைப்படங்களையும் தமிழீழ தேசிய வர்ணங்களான சிவப்பு, மஞ்சல் கொடிகளைத் தாங்கிச் சென்றமை அவர்களிடம் இருந்த தலைவர் மீதான பற்றையும் தமிழீழ தேசியப் பற்றையும் வெளிப்படுத்தியது.

இந்தக் மக்கள் வெள்ளத்தைக் கண்டு கிழக்கின் பல இடங்களிலும் முகாமிட்டிருந்து சிங்களப் படைகள் அஞ்சி நடுங்கின. முகாம்களை விட்டு வெளியே வருவதற்கு படையினர் அஞ்சினர். தமது அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அன்றைய தினம் படையினர் வெளியே சென்றிருக்கவில்லை. முகாம்களுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழக மைதானத்தில் ஒன்றுகூடிய ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்களும் தமது விடுதலை நோக்கிய ஆவலை அங்கு வெளிப்படுத்தினர். உரிமைக் கோசம் எழுப்பினர். தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறிய இந்த மக்கள் இதனை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும் என்று உரத்துக் குரல் எழுப்பினர். தமிழீழம் மீது சுமத்தப்பட்டுள்ள பயங்கரவாத சாயம் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தனித்துவமான தேசிய இனம் என்ற தமிழ் மக்களின் அடையாளங்கள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று மக்கள் அனைவரும் திரண்டு கோரிக்கை விடுத்தனர். தமிழ் மக்களில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் வேறுபட்டவர்கள் அல்ல என்பதை எடுத்துரைத்த இந்த மக்கள், மக்களே புலிகள் புலிகளே மக்கள் என்று ஆக்ரோசமாகக் கூறினர்.
அதுவரை காலமும் தமிழ் மக்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பிரித்துப் பார்த்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழ் மக்களின் இந்த உரிமை முழக்கம் பெரும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு புலிகளே தமிழர் தமிழரே புலிகள் என்று கூறியதன் மூலம் புலிகள் தமிழ் மக்களை அடக்கி ஆள்கின்றார்கள் என்ற சிறிலங்கா அரசின் சர்வதேச பிரச்சாரம் அடிபட்டுப் போனது. இதனால் சர்வதேச ரீதியாக சிறிலங்கா அரசு பாரிய பின்னடைவைச் சந்திக்க முற்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இந்தப் பொங்கு தமிழ் மக்கள்;; எழுச்சி நிகழ்வு நடைபெற்று இன்று 11 ஆண்டுகள் ஆகின்றன. யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பரித்து உலகம் பூராகவும் பரந்த பொங்கு தமிழ் என்ற இந்த மக்கள் எழுச்சி தோற்றுப் போகவில்லை. அது எமது மக்களின் விடுதலை நோக்கிய தேவையை இன்றும் வலியுறுத்திக்கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்காலுடன் எங்கள் போர் முற்றுப்பெறவில்லை. நாங்கள் தோற்றுப்போன இனம் அல்ல என்பதை தமிழினம் மீண்டும் நிரூபிக்கும் காலம் வெகு விரைவில் வரும். தமிழீழ தேசியத் தலைவர் கூறியது போன்று எழுச்சி கொண்ட எந்தவொரு இனமும் வீழ்ச்சி கண்டதாக வரலாறு இல்லை.

கிழக்கில் இருந்து
பா.தமிழரசன்