தமிழரசுக் கட்சியின் உட்கட்சி ஜனநாயகம் செத்துவிடவில்லை என்ற எனது நம்பிக்கை பொய்த்துவிட்டது – அனந்தி January 25, 2015 News தமிழரசுக் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் செத்துவிடவில்லை என்ற தனது நம்பிக்கை பொய்த்துவிட்டதென வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- எனது மனசாட்சிக்கு விரோதமில்லாமலும் தமிழரசுக் கட்சியின் அடிப்படை கொள்கைகளுக்கு வலுச்சேர்க்கும் நோக்கிலும் கட்சியின் முடிவென்ற பெயரில் இம்மாதம் 3ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் பத்திரிகையாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட முடிவுக்கு மாறாக, மைத்திரிபால சிறிசேனவுக்கு வெளிப்படையாக என்னால் ஆதரவு தெரிவிக்க முடியாதென தெரிவித்திருந்தேன். காலாண்டு காலமாக தமிழ் அரசியலினால் கட்டிக்காக்கப்பட்ட அடிப்படை அரசியல் அறங்களை பாதுகாக்கும் பொருட்டும் எனது மனசாட்சிக்கு நேர்மையாக இருக்கும் பொருட்டும் இந் நிலைப்பாட்டை நான் எடுத்தேன். தமிழரசுக் கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயகம் முழுமையாக செத்துவிடவில்லை என்ற நம்பிக்கையிலேயே அக் கருத்தை வெளியிட்டேன். ஆனால், நான் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாக தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் எனது நம்பிக்கை தவறானது என்பதை நிரூபித்துள்ளது. உங்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு என் மீதான குற்றச்சாட்டு பத்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். அக் குற்றச்சாட்டு பத்திரத்தோடு பின்வரும் ஆவணங்களையும் சேர்த்து அனுப்புமாறு வேண்டுகின்றேன். அவையாவன, தமிழரசுக்கட்சியின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஜனநாயக ரீதியாக முடிவெடுக்கப்பட்டதை ஆவணப்படுத்தும் கூட்டத்தின் கூட்டறிக்கை, இது தொடர்பாக கலந்துரையாடப்பட்ட கட்சிக் கூட்டங்கள் அனைத்தினதும் கூட்டறிக்கை, அவற்றிற்கு சமூகமளித்தவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் தமிழரசுக் கட்சியின் யாப்பின் பிரதி ஆகியவற்றை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் என அக்கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.