அரசியல் கைதிகளின் விடுதலைகோரி மன்னாரில் அமைதிப்பேரணி. January 27, 2015 News அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் காணாமல்போன, கடத்தப்பட்டவர்களை கண்டறியக்கோரியும் திருக்கேதீஸ்வர மனித புதைகுழி தொடர்பான விசாரணையை முன்னெடுக்கக் கோரியும் மன்னாரில் மாபெரும் அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நேற்று காலை 10.15 மணியளவில் இந்த அமைதி ஊர்வலம் ஆரம்பமாகி மன்னார் மாவட்டச் செயலக வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது. இந்த ஊர்வலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் முகத்தில் கறுப்புத் துணி கட்டி பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மன்னார் பிரஜைகள் குழுவின் உப தலைவர் அந்தோனி சகாயம், மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க், காணாமற்போனவர்களின் உறவினர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.