எதிர்வரும் பங்குனி மாதம் நடைபெறவுள்ள மனிதவுரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத்தின் அடிப்படையிலும் சிங்கள ஜனாதிபதித் தேர்தலின் மூலம் மேற்குலகிற்கு விரும்பியவொரு ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதாலும் இவ்விடயங்களை தமிழ்மக்கள் எப்படிக் கருதுகிறார்கள் என்பதை எடுத்துச் சொல்வதற்காக கடந்த வியாழக்கிழமை டென்மார்க் பாராளுமன்றத்தில் சந்திப்புக்கள் மேற்கொள்ளப்பட்டது.
இச்சந்திப்பின் போது ஆட்சி மாற்றத்தினால் தமிழ் மக்களிற்கேற்பட்டுள்ள சவால்கள் பற்றியும், சர்வதேச சமூகம்  கவனித்துக் கொள்ளவேண்டிய விடயங்கள் பற்றியும்  எடுத்துக் கூறப்பட்டதுடன் ஜ.நா மனிதவுரிமை ஆணையகம்  சிங்களதேசத்திற்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்தினூடாக நடாத்தவுள்ள போர்க்குற்ற விசாரணையை நடாத்திமுடிப்பதற்கான அழுத்தத்தினை தொடர்ந்து கொடுக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆட்சி மாற்றத்தினூடாக தமிழ் மக்களிற்கு எதிராக நடாத்தப்பட்ட அல்லது நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அநீதிகளிற்கு தீர்வு வந்துவிடாதெனவும் அதற்கு நல்லுதாரணமாக சிங்கள தேசத்தின் புதிய ஜனாதிபதி சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாதென்று அறிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் இலங்கையில் பேச்சுச்சுதந்திரத்தினைத் தடைசெய்யும் சட்டங்கள் இல்லாதொழிக்கப்பட்டு முழுமையான பேச்சுச்சுதந்திரம் உறுதிப்படுத்த வேண்டுமென்றும் தாயகத்தின் பல பாகங்களிலும் நிறுவப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட்டு  நாட்டில் அகதிகளாக வாழும் தமிழ் மக்களை சொந்த இடங்களில் வாழ அனுமதிக்க வழிகோரவேண்டுமென்பதும்  கலந்துரையாடப்பட்டது.
சிங்கள சிறைகளில் வாடும்  தமிழ் மக்கள் விடுதலைசெய்யப்பட்டு அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டுமென்றும், ஜ.நா.  நிறுவனங்கள் தமிழர் பிரதேசங்களில் இயங்குவதற்கு அனுமதிக்கப்படல் வேண்டுமென்பதும்  எடுத்துக்கூறப்பட்டது.
இச்சந்திப்புக்களில்  ஆளும் கட்சி  மற்றும் எதிர்கட்சி  பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்