நோர்வே மாணவர்களின் கைகொடுப்பில் சாதிக்கும் சந்ததியினருக்கு உதவித் திட்டம் February 6, 2015 News நோர்வே மாணவர்களின் கைகொடுப்பில் சாதிக்கும் சந்ததி செயற்திட்டத்தின் எட்டாம் கட்டம் விசுவமடு பாரதி வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. 130 மாணவர்களை உள்ளடக்கிய இக்கட்டத்தில் 119 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு 11 மாணவர்களுக்கு மிதி வண்டிகளும் வழங்கப்பட்டிருந்தன. வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் முன்னெடுப்பில் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சாதிக்கும் சந்ததி செயற்திட்டத்தின் எட்டாம் கட்டமானது 2015-02-05 அன்று காலை றெட்பானா பாரதி வித்தியாலயத்தில் நடைபெற்றிருந்தது. இதுவரை நடைபெற்ற ஏழு கட்டங்கள் ஊடாகவும் பெற்றோரில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்த அல்லது காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள 352 மாணவர்கள் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில் இன்று நடைபெற்ற நிகழ்வின் மூலம் மொத்தமாக 482 மாணவர்கள் உள்ளீர்ப்பு செய்யப்பட்டிருக்கின்றார்கள். நோர்வே கம்மர் பாடசாலையில் (Hammer School) கல்வி பயிலும் மாணவர்களின் நிதியுதவியில் மேற்கொள்ளப்பட்ட நேற்றைய நிகழ்வில் 119 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களாக புத்தகப்பை, தைத்தபடி சீருடை, கணிகருவிப்பெட்டி மற்றும் குறிப்பு நூல்கள் 10 என்பன வழங்கப்பட்டதோடு தொலைவில் இருந்து பாடசாலைக்கு வருகைதரும், ஊக்குவிக்கப்படவேண்டிய, வறுமைச்சவாலை தினம் எதிர்நோக்கும் 11 மாணவர்களுக்கு மிதிவண்டிகளும் வழங்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் உரையாற்றிய வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், பாடசாலை இடைவிலகலை தாயகத்தில் தவிர்க்கவேண்டும்; பாடசாலை கல்வியை அனைத்து மாணவர்களும் பெறவேண்டும்; வறுமை நிலையோ அல்லது வேறு சவால்களோ அவர்களது கல்விக்கு தடையாக இருக்க கூடாது என்ற நோக்கத்தைக்கொண்டே இச்செயற்திட்டம் மெல்ல மெல்ல புலம்பெயர் தமிழ் உறவுகளின் கைகொடுப்பில் சாத்தியப்பட்டு வருகிறது. இம்முறை இந்த சாதிக்கும் சந்ததியின் எட்டாம் கட்டமானது நோர்வேயில் உள்ள கம்மர் பாடசாலை (Hammer Skole) மாணவர்கள் சேகரித்து அனுப்பிய நிதியின் மூலம் சாத்தியப்பட்டிருக்கிறது. கண்காட்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகளை அங்கு ஒழுங்குசெய்து பணம் சேகரித்து அதனை எமது மாணவர்களின் நலனுக்காக, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சேகரித்த அந்த பாடசாலை மாணவர்களுக்கும் இதனை ஒழுங்குபடுத்திய நாதன் செல்லையா அவர்களுக்கும் (Tech Norway அமைப்பு) நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். பிள்ளைகளின் கல்வி தொடர்பில் பெற்றோரும் அதிக கவனம் எடுக்கவேண்டும். வளரும் இந்த இளைய தலைமுறையினரே வளமான தாயகத்தை கட்டியெழுப்ப முன்னிற்பர். கல்வி கொண்ட அச்சமூகமே எமது எதிர்காலத்தை இன்னும் பலனுள்ள வகையில் செதுக்குவதற்கு முன்னிற்கும். பாடசாலை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு என்னால் எந்ததெந்தவகையில் கைகொடுக்க முடியுமோ அந்த வழிகளில் என்றும் எமது தேசத்தின் வளர்ச்சிக்கான செயற்திட்டங்கள் தொடரும். பாடசாலை மாணவர்களின் பாடசாலை இடைவிலகலை தாயகத்தில் இல்லாமல் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் எம்முடன் கைகோர்த்து சாதிக்கும் சந்ததி செயற்தி;டடத்தில் இணைந்து தேசத்தின் வளர்ச்சிக்காய் முன்னிற்கும் புலம்வாழ் ஈழத்தமிழர்க்கு நன்றிகளை தெரிவிப்பதோடு தொடர்ந்தும் ஒருங்கிணைந்த ஈழத்தமிழர் முயற்சிகள் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரதி வித்தியாலயத்தின் நிறுவுனர் பங்குத்தந்தை மைக்கல் ஞானப்பிரகாசம், பாடசாலை ஆசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.